Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

நீதிமொழிகள் 3:5, 6—‘உன் சுயபுத்தியின்மேல் சாயாதே’

நீதிமொழிகள் 3:5, 6—‘உன் சுயபுத்தியின்மேல் சாயாதே’

 “யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு. உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே. எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய். அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.”—நீதிமொழிகள் 3:5, 6, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:5, 6, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.

நீதிமொழிகள் 3:5, 6-ன் அர்த்தம்

 முக்கியமான தீர்மானங்களை நாமே சொந்தமாக எடுக்காமல், வழிநடத்துதலுக்காக யெகோவாவை a நம்பியிருக்க வேண்டும்.

 “யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு.” எல்லா விஷயங்களையும் கடவுளுக்குப் பிடித்த மாதிரி நாம் செய்யும்போது, அவரை நம்பியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். முழு இதயத்தோடு நாம் அவர்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். பைபிளில், இதயம் என்பது பொதுவாக உள்ளுக்குள் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அர்த்தப்படுத்துகிறது. அதாவது, நம் உணர்ச்சிகள், லட்சியங்கள், யோசனைகள், குணங்கள் என எல்லாவற்றையும் குறிக்கிறது. அப்படியென்றால், கடவுளை முழு இதயத்தோடு நம்புவது என்பது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு செய்யும் விஷயமல்ல. இது நாம் நன்றாக யோசித்து எடுக்கும் ஒரு முடிவு. ஏனென்றால், நமக்கு எது சிறந்தது என்று நம்முடைய படைப்பாளருக்கு நன்றாகத் தெரியும் என்று நாம் முழுமையாக நம்புகிறோம்.—ரோமர் 12:1.

 “உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே.” நாம் பாவிகளாக இருப்பதால், நாம் யோசிக்கும் விதம் சரியாக இருப்பதில்லை. அதனால் நம்மை நம்புவதற்கு பதிலாக, கடவுளை நம்ப வேண்டும். நாம் நம்மை மட்டுமே நம்பினால் அல்லது உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்தால் நம்முடைய தீர்மானங்கள் ஆரம்பத்தில் நல்லதாகத் தெரியலாம். ஆனால், கடைசியில் மோசமான பாதிப்புகள் வரலாம். (நீதிமொழிகள் 14:12; எரேமியா 17:9) நம்முடைய ஞானத்தைவிட கடவுளுடைய ஞானம் ரொம்ப ரொம்ப உயர்ந்தது. (ஏசாயா 55:8, 9) கடவுள் காட்டுகிற வழியில் நாம் நடக்கும்போது, நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.—சங்கீதம் 1:1-3; நீதிமொழிகள் 2:6-9; 16:20.

 “எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய்.” வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும்... எந்தவொரு முக்கியமான முடிவை எடுத்தாலும்... அது கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? வழிநடத்துதலுக்காக கடவுளிடம் ஜெபம் செய்ய வேண்டும். அதோடு, அவருடைய வார்த்தையான பைபிளில் அவர் சொல்லியிருக்கும் ஆலோசனைகளின்படி செய்ய வேண்டும்.—சங்கீதம் 25:4; 2 தீமோத்தேயு 3:16, 17.

 “உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.” எப்படி? தன்னுடைய நீதியான நெறிமுறைகளின்படி வாழ நமக்கு உதவி செய்வதன் மூலம்தான். (நீதிமொழிகள் 11:5) அவருடைய நெறிமுறைகளின்படி நாம் வாழ்வதால், தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முடிகிறது, சந்தோஷமாகவும் வாழ முடிகிறது.—சங்கீதம் 19:7, 8; ஏசாயா 48:17, 18.

நீதிமொழிகள் 3:5, 6-ன் பின்னணி

 கடவுளுக்குப் பிடித்த மாதிரி நாம் வாழ்வதற்கு... நல்லபடியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு... தேவையான அடிப்படை நியமங்கள் பைபிளின் நீதிமொழிகள் புத்தகத்தில் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் முதல் 9 அதிகாரங்கள், ஒரு அப்பா தன்னுடைய அன்பான மகனுக்கு அறிவுரைகள் கொடுப்பதுபோல் எழுதப்பட்டிருக்கின்றன. நம்முடைய படைப்பாளரின் ஞானத்தையும் அதன் மதிப்பையும் புரிந்துகொண்டு அதன்படி வாழும்போது கிடைக்கும் பலன்களைப் பற்றி 3-வது அதிகாரம் சொல்கிறது.—நீதிமொழிகள் 3:13-26.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.