யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை?
தவறான கருத்துகள்
தவறான கருத்து: யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவர்கள் கிடையாது என்பதால்தான் அவர்கள் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை.
உண்மை: இயேசு கிறிஸ்துதான் எங்கள் மீட்பர் என்று நாங்கள் நம்புகிறோம், ‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுவதற்கு’ எங்களால் முடிந்தளவு முயற்சி செய்கிறோம்.—1 பேதுரு 2:21; லூக்கா 2:11.
தவறான கருத்து: இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்று நீங்கள் நம்புவதில்லை.
உண்மை: இயேசுவின் உயிர்த்தெழுதலில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது; கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை போதனையாக அதை நாங்கள் கருதுகிறோம், எங்களுடைய ஊழியத்திலும் அதைத்தான் சிறப்பித்துக் காட்டுகிறோம்.—1 கொரிந்தியர் 15:3, 4, 12-15.
தவறான கருத்து: ஈஸ்டர் கொண்டாட்டத்தின் சந்தோஷம் உங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்காததைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.
உண்மை: எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் நேசிக்கிறோம். அவர்களைச் சந்தோஷமாக வைத்துக்கொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிப்பதற்கும் முடிந்தளவு முயற்சி செய்கிறோம்.—தீத்து 2:4.
யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை?
ஈஸ்டர் பைபிள் அடிப்படையிலான கொண்டாட்டம் கிடையாது.
இயேசு தன்னுடைய மரணநாளை அனுசரிக்கும்படிதான் சீஷர்களுக்குக் கட்டளையிட்டாரே தவிர, தான் உயிர்த்தெழுந்த நாளை அல்ல. அவருடைய மரணநாளை பைபிளின் சந்திர நாள்காட்டியின்படி வருஷா வருஷம் நாங்கள் தவறாமல் அனுசரிக்கிறோம்.—லூக்கா 22:19, 20.
ஈஸ்டர் கொண்டாட்ட சம்பிரதாயங்கள் பூர்வ கருவள சடங்காச்சாரங்களிலிருந்து வந்திருக்கிறது. அதனால், அவற்றைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம். தன்னை “மட்டும்தான் வணங்க வேண்டும்” என்று அவர் எதிர்பார்க்கிறார்; அவருக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிற வணக்கமுறை அவருடைய மனதைப் புண்படுத்துகிறது.—யாத்திராகமம் 20:5; 1 ராஜாக்கள் 18:21.
ஈஸ்டர் கொண்டாடாமல் இருப்பதற்கான எங்களுடைய தீர்மானம் முழுக்கமுழுக்க பைபிள் அடிப்படையிலானது என நாங்கள் நம்புகிறோம்; வெறும் மனித பாரம்பரியங்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக “ஞானத்தையும் யோசிக்கும் திறனையும்” பயன்படுத்தும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 3:21; மத்தேயு 15:3) ஈஸ்டர் பற்றி மற்றவர்கள் எங்களிடம் கேள்வி கேட்கும்போது எங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி அவர்களிடம் சொல்கிறோம்; அதேசமயத்தில், என்ன செய்ய வேண்டுமெனத் தீர்மானிக்கிற உரிமை அவரவருக்கு இருக்கிறது என்பதை நாங்கள் மதிக்கிறோம்.—1 பேதுரு 3:15.