Skip to content

யெகோவாவின் சாட்சிகள் குடும்பத்தைப் பிரிக்கிறவர்களா அல்லது குடும்பத்தைப் பலப்படுத்துகிறவர்களா?

யெகோவாவின் சாட்சிகள் குடும்பத்தைப் பிரிக்கிறவர்களா அல்லது குடும்பத்தைப் பலப்படுத்துகிறவர்களா?

 யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள், எங்களுடைய குடும்பத்தை மட்டுமல்ல மற்றவர்களுடைய குடும்பங்களையும் பலப்படுத்த முயற்சி செய்கிறோம். குடும்பத்தை உருவாக்கி வைத்த கடவுளுக்கு நாங்கள் மதிப்புக் கொடுக்கிறோம். (ஆதியாகமம் 2:21-24; எபேசியர் 3:14, 15) பைபிள் மூலமாக நல்ல ஆலோசனைகளை அவர் நமக்குச் சொல்லித்தருகிறார். குடும்பங்கள் பலமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்கு, அந்த ஆலோசனைகள் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கின்றன.

குடும்பத்தைப் பலமாகவும், சந்தோஷமாகவும் வைத்துக்கொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் என்ன செய்கிறார்கள்?

 பைபிள் ஆலோசனைகளின்படி நடக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். ஏனென்றால், நல்ல கணவனாக, நல்ல மனைவியாக, நல்ல பெற்றோராக இருப்பதற்கு அந்த ஆலோசனைகள் எங்களுக்கு உதவி செய்கின்றன. (நீதிமொழிகள் 31:10-31; எபேசியர் 5:22–6:4; 1 தீமோத்தேயு 5:8) கணவனும், மனைவியும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட, அவர்களுடைய குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு பைபிளில் இருக்கிற ஞானமான ஆலோசனைகள் உதவும். (1 பேதுரு 3:1, 2) யெகோவாவின் சாட்சியாக இல்லாதவர்கள், தங்களுடைய துணை யெகோவாவின் சாட்சியாக மாறியதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்:

  •   “கல்யாணமான முதல் ஆறு வருஷத்துல எங்களுக்கு இடையில எப்போ பாத்தாலும் சண்டையாதான் இருக்கும். ஆனா, என் மனைவி இவட்டி, யெகோவாவின் சாட்சியா ஆனதுக்கு அப்புறம் ரொம்ப அன்பா, பொறுமையா நடந்துக்க ஆரம்பிச்சா. அவ அப்படி மாறுனதுனாலதான் நாங்க இப்போ ஒண்ணா இருக்கோம்.”—க்ளாயர், பிரேசில்.

  •   “என்னோட கணவர் ச்சான்ஸா, யெகோவாவின் சாட்சிகள்கூட பைபிள படிக்க ஆரம்பிச்சப்போ, அவங்களோட படிக்க கூடாதுனு சொல்லி சண்டை போட்டேன். ஏன்னா, அவங்க குடும்பத்த பிரிக்கிறவங்கனு நான் நெனச்சேன். ஆனா, பைபிள் ஆலோசனைகள் எங்க குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருந்தத போக போக நான் புரிஞ்சுக்கிட்டேன்.”—ஆக்னஸ், ஸாம்பியா.

 பைபிளில் இருக்கிற ஞானமான ஆலோசனைகள்படி நடப்பது வாழ்க்கைக்கு எப்படியெல்லாம் உதவும் என்பதைப் பற்றி ஊழியத்தில் சந்திக்கிற ஆட்களிடம் நாங்கள் சொல்கிறோம். உதாரணத்துக்கு, இந்த விஷயங்களைப் பற்றி சொல்கிறோம்:

மதம் மாறுவதால் கல்யாண வாழ்க்கையில் பிரச்சினை வருமா?

 சிலசமயங்களில், அப்படி நடப்பது உண்மைதான். உதாரணத்துக்கு, தம்பதிகளில் ஒருவர் மட்டும் யெகோவாவின் சாட்சியாக மாறியவர்களைப் பற்றி 1998-ல் ஸொஃப்ரஸ் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி 20 தம்பதிகளில் ஒருவருடைய கல்யாண வாழ்க்கையில்தான் பயங்கரமான பிரச்சினைகள் வந்ததாக அந்த அறிக்கை காட்டுகிறது.

 தன்னுடைய போதனைகளை ஏற்றுக்கொள்கிறவர்களுடைய குடும்பத்தில் சிலசமயம் பிரச்சினைகள் வரும் என்று இயேசு முன்கூட்டியே சொல்லியிருந்தார். (மத்தேயு 10:32-36) ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த “கிறிஸ்தவர்கள் குடும்பத்தைப் பிரிக்கிறவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டார்கள்” என வில் டூரன்ட் என்ற சரித்திர ஆசிரியர் சொல்கிறார். a இன்றைக்கும் யெகோவாவின் சாட்சிகள் சிலர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சியாக ஆகிற ஒருவர்தான் குடும்பத்தில் பிரிவினையை உண்டாக்குகிறாரா?

மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம்

 யெகோவாவின் சாட்சிகள் குடும்பத்தைப் பிரிக்கிறவர்கள் என்ற குற்றச்சாட்டு சம்பந்தமாக தீர்ப்பு கொடுக்கும்போது, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் சொன்னது இதுதான்: “ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதைக் கடைப்பிடிக்கவும், மதப்பற்றுள்ள ஒருவருக்கு இருக்கிற உரிமையை [யெகோவாவின் சாட்சியாக இல்லாத அவருடைய குடும்ப அங்கத்தினர்கள்] எதிர்ப்பதும் மதிக்காதிருப்பதும்தான் பிரச்சினைக்கு மூலகாரணம்.” அதுமட்டுமல்ல, “கணவனும், மனைவியும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது இதுபோன்ற சூழ்நிலை ஏற்படுவது சர்வ சாதாரணம். யெகோவாவின் சாட்சிகள் இதற்கு விதிவிலக்கல்ல” என்றும் அந்த நீதிமன்றம் சொன்னது. b மத சம்பந்தமான பிரச்சினைகள் வந்தாலும், “யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள். . . . கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்” என்ற பைபிள் ஆலோசனையைக் கடைப்பிடிக்க யெகோவாவின் சாட்சிகள் முயற்சி செய்கிறார்கள்.—ரோமர் 12:17, 18.

தங்களுடைய மதத்தை சேர்ந்த ஒருவரைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று யெகோவாவின் சாட்சிகள் ஏன் நினைக்கிறார்கள்?

 “எஜமானைப் [கிறிஸ்துவை] பின்பற்றுகிற ஒருவரையே . . . திருமணம் செய்துகொள்ள வேண்டும்,” அதாவது ஒரே மதத்தைச் சேர்ந்தவரைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும், என்ற பைபிள் ஆலோசனைக்கு யெகோவாவின் சாட்சிகள் கீழ்ப்படிகிறார்கள். (1 கொரிந்தியர் 7:39) இது பைபிள் கொடுக்கிற கட்டளை மட்டுமல்ல, இது நடைமுறையானதும்கூட. உதாரணத்துக்கு, ஜர்னல் ஆஃப் மேரேஜ் அண்ட் ஃபேமிலி என்ற பத்திரிகையில் 2010-ல் வெளிவந்த ஒரு கட்டுரையில் இப்படிச் சொல்லப்பட்டிருந்தது: “கணவன்-மனைவி இருவரின் மதமும், பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் ஒரேமாதிரி இருக்கும்போது” அவர்களுடைய வாழ்க்கை மிகச் சிறந்ததாக இருக்கும். c

 ஆனாலும், யெகோவாவின் சாட்சியாக இல்லாத தன்னுடைய துணையை விட்டு பிரிந்துவிடும்படி யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மதத்தை சேர்ந்தவர்களிடம் சொல்வது கிடையாது. ஏனென்றால், “ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசியாக இல்லாவிட்டாலும் அவள் அவனோடு வாழச் சம்மதித்தால், அவன் அவளைவிட்டுப் பிரியக் கூடாது. அதேபோல், ஒரு சகோதரியின் கணவன் விசுவாசியாக இல்லாவிட்டாலும் அவன் அவளோடு வாழச் சம்மதித்தால், அவள் அவனைவிட்டுப் பிரியக் கூடாது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:12, 13) யெகோவாவின் சாட்சிகள் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

a சீஸர் அண்ட் க்ரைஸ்ட், பக்கம் 647-ஐப் பாருங்கள்.

b ஜெஹோவாஸ் விட்னஸஸ் ஆஃப் மாஸ்கோ ஆண்ட் அதர்ஸ் v. ரஷ்யா என்ற வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை பக்கங்கள் 26-27, பாரா 111-ல் பாருங்கள்.

c ஜர்னல் ஆஃப் மேரேஜ் அண்ட் ஃபேமிலி, 72, எண் 4, (ஆகஸ்ட் 2010), பக்கம் 963-ஐப் பாருங்கள்.