Skip to content

நாசி இனப்படுகொலை சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன நடந்தது?

நாசி இனப்படுகொலை சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன நடந்தது?

 நாசி படுகொலை சமயத்தில், ஜெர்மனியிலும் நாசியின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளிலும் கிட்டத்தட்ட 35,000 யெகோவாவின் சாட்சிகளில் இருந்தார்கள். அந்தச் சமயத்தில் சுமார் 1,500 பேர் இறந்துபோனார்கள். அதில் நிறைய பேர் எப்படி இறந்தார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. அதற்கான ஆராய்ச்சி இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. இது சம்பந்தமான தகவல்களும் எண்ணிக்கையும் பின்பு நமக்கு தெரிய வரலாம்.

 எப்படி இறந்தார்கள்?

  • தலை துண்டிக்க நாசிக்கள் பயன்படுத்திய கருவி

      மரண தண்டனை: ஜெர்மனியிலும் நாசியின் கட்டுப்பாட்டில் இருந்த மற்ற நாடுகளிலும் கிட்டத்தட்ட 400 சாட்சிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டு இறந்தார்கள். இதில் நிறைய பேர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இன்னும் சிலர், நீதிமன்றத்தில் விசாரணையே செய்யப்படாமல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், இல்லையென்றால் தூக்கிலிடப்பட்டார்கள்.

  •   சிறைச்சாலையில் இருந்த மிக மோசமான சூழ்நிலை: 1000-க்கும் அதிகமான சாட்சிகள் நாசிகளுடைய சித்திரவதை முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் இறந்துபோனார்கள். அவர்களில் சிலர் வற்புறுத்தி கடுமையாக வேலை வாங்கப்பட்டதால் இறந்தார்கள். இன்னும் சிலர், சித்திரவதை செய்யப்பட்டதால்... பட்டினியால்... கடுமையான குளிரை தாங்க முடியாததால்... நோய்வாய்ப்பட்டதால்... நல்ல மருத்துவ பராமரிப்புக் கிடைக்காததால் இறந்தார்கள். கொடூரமாக நடத்தப்பட்டதன் காரணமாக, சிலர் இரண்டாம் உலகப் போரின் முடிவில் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே இறந்தார்கள்.

  •   மற்ற காரணங்கள்: சில சாட்சிகள் விஷவாயு அறைகளில் கொல்லப்பட்டார்கள். இன்னும் சிலர், உயிரை பறிக்கிற மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். வேறு சிலர், விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

 ஏன் துன்புறுத்தப்பட்டார்கள்?

 பைபிள் சொல்கிற விஷயங்களின் படி நடந்ததால்தான் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டார்கள். பைபிளுக்கு எதிரான விஷயங்களை செய்யச் சொல்லி நாசி அரசாங்கம் சாட்சிகளை வற்புறுத்தியபோது அவர்கள் அதற்கு கீழ்ப்படிய மறுத்தார்கள். “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்று உறுதியாக இருந்தார்கள். (அப்போஸ்தலர் 5:29) அவர்கள் அப்படி உறுதியாக இருந்த இரண்டு விஷயங்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

  1.   அரசியலில் நடுநிலை. எல்லா நாடுகளிலும் வாழ்கிற சாட்சிகளை போலவே நாசி அரசாங்கத்தின் கீழே வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகளும் அரசியல் விஷயங்களில் நடுநிலையாக இருந்தார்கள்.—யோவான் 18:36.

    •   அதனால் அவர்கள் ராணுவத்தில் சேரவோ, போர் தொடர்பான எந்தவொரு வேலையையும் செய்யவோ மறுத்தார்கள்.—ஏசாயா 2:4; மத்தேயு 26:52.

    •   தேர்தலில் ஓட்டு போடவோ நாசி அமைப்புகளில் சேரவோ மறுத்துவிட்டார்கள்.—யோவான் 17:16.

    •   சுவஸ்திகாவை வணங்கவோ “ஹெய்ல் ஹிட்லர்!” என்று சொல்லவோ மறுத்துவிட்டார்கள்.—மத்தேயு 23:10; 1 கொரிந்தியர் 10:14.

  2.   கடவுளை வணங்குவது. மத நடவடிக்கைகளில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டிருந்த போதும் யெகோவாவின் சாட்சிகள்

    •   ஜெபம் செய்வதற்காகவும் கடவுளை வணங்குவதற்காகவும் தொடர்ந்து ஒன்றுகூடி வந்தார்கள்.—எபிரெயர் 10:24, 25.

    •   பைபிள் சொல்கிற செய்தியை மற்றவர்களுக்கும் சொன்னார்கள். பைபிள் பிரசுரங்களை மற்றவர்களுக்கு கொடுத்தார்கள்.—மத்தேயு 28:19, 20.

    •   யூதர்கள் உட்பட அவர்களைச் சுற்றியிருந்தவர்களிடம் அன்பாக நடந்துகொண்டார்கள்.—மாற்கு 12:31.

    •   அவர்களுடைய நம்பிக்கையை விட்டுக்கொடுக்க சொல்லி ஒரு டாக்யூமென்ட்டில் கையெழுத்து போட சொல்லப்பட்டபோதும் அதில் கையெழுத்து போடாமல் அவர்களுடைய விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள்.—மாற்கு 12:30.

 “நாசியின் ஆட்சி காலத்தில் தங்களுடைய மத நம்பிக்கைக்காக மட்டுமே துன்புறுத்தப்பட்ட ஒரே ஆட்கள் [யெகோவாவின் சாட்சிகள்] மட்டும்தான்” என்று பேராசிரியர் ராபர்ட் கெர்வார்த் சொன்னார். a யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் சித்திரவதை முகாமில் இருந்த மற்ற கைதிகளும் கூட அவர்களை ரொம்பவே பாராட்டி பேசினார்கள். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஒரு கைதி இப்படிச் சொன்னார்: “அவர்கள் போருக்கு போக மாட்டார்கள். ஒருவரின் உயிரை எடுப்பதற்கு பதிலாக தங்களுடைய உயிரை கொடுப்பதற்கும் கூட அவர்கள் தயாராக இருந்தார்கள்.”

 எங்கே இறந்தார்கள்?

  •   சித்திரவதை முகாம்களில்: யெகோவாவின் சாட்சிகளில் நிறைய பேர் சித்திரவதை முகாம்களில் இறந்தார்கள். ஆஷ்விட்ச், புஜன்வால்ட், டாக்காவ், ஃப்லோசன்பர்க், மவுத்தவுசன், நாயன்காமா, நிடஹாகன், ரேவன்ஸ்பிரக், சாக்சென்ஹாசன் போன்ற இடங்களில் இருந்த சித்திரவதை முகாம்களில் கொல்லப்பட்டார்கள். சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமில் மட்டுமே கிட்டத்தட்ட 200 யெகோவாவின் சாட்சிகள் இறந்திருக்கிறார்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  •   சிறைச்சாலைகள்: சில சாட்சிகள் சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இன்னும் சிலர் விசாரணை சமயத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார்கள்.

  •   மரண தண்டனை கொடுக்கப்பட்ட இடங்கள்: பெர்லின்-ப்ளாட்சென்ஸே, ப்ரான்டன்பர்க், ஹாலா/சாலா போன்ற இடங்களில் இருந்த சிறைச்சாலைகளில்தான் யெகோவாவின் சாட்சிகள் கொல்லப்பட்டார்கள். அதோடு, இன்னும் வேறு 70 இடங்களிலும் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பதிவுகள் காட்டுகின்றன.

 கொல்லப்பட்ட சிலர்

  •  பெயர்: ஹெலானா காட்ஹோல்ட்

     கொல்லப்பட்ட இடம்: ப்ளாட்சென்ஸே (பெர்லின்)

     ஹெலானா ஒரு குடும்பத்தலைவி. அவருக்கு இரண்டு குழந்தைகள். அவர் பலமுறை கைது செய்யப்பட்டார். 1937-ல் அவரை விசாரணை செய்யும்போது கொடூரமாக நடத்தப்பட்டார். அதனால் அவர் வயிற்றில் இருந்த குழந்தை இறந்துபோனது. டிசம்பர் 8, 1944-ல் பெர்லினில் இருந்த ப்ளாட்சென்ஸே சிறைச்சாலையில் தலை வெட்டிக் கொல்லப்பட்டார்.

  •  பெயர்: கேர்ஹார்ட் லைபோல்ட்

     கொல்லப்பட்ட இடம்: ப்ரான்டன்பர்க்

     மே 6, 1943-ல், 20 வயது கேர்ஹார்ட் தலை வெட்டி கொல்லப்பட்டார். அதே சிறையில்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய அப்பாவும் தலை வெட்டி கொல்லப்பட்டார். அவர் சாவதற்கு முன்பு அவருடைய குடும்பத்துக்கும் அவர் கல்யாணம் செய்யவிருந்த பெண்ணுக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இப்படிச் சொன்னார்: “நான் இந்த பாதையில் நடக்கிறேன் என்றால் அதற்கு காரணம் எஜமானருடைய சக்திதான்.”

  •  பெயர்: ருடால்ஃப் ஆஸ்செனர்

     கொல்லப்பட்ட இடம்: ஹாலா/சாலா

     செப்டம்பர் 22, 1944-ல், 17 வயது ருடால்ஃப் தலை வெட்டி கொல்லப்பட்டார். சாவதற்கு முன்பு தன்னுடைய அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில், “நிறைய சகோதரர்கள் போன பாதையில் நானும் போகிறேன்” என்று சொன்னார்.

aஹிட்லர்ஸ் ஹேங்மேன்: த லைப் அப் ஹெட்ரிச், பக்கம் 105.