Skip to content

யெகோவாவின் சாட்சிகள் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை?

தவறான கருத்துக்கள்

தவறான கருத்து: யெகோவாவின் சாட்சிகள் மருத்துவர்களை நம்ப மாட்டார்கள், மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

 உண்மை: எங்களுக்கும் எங்களுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கும் நாங்கள் சிறந்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்கிறோம். ஏதாவது உடல்நல பிரச்சினை வந்தால், மருத்துவ சிகிச்சையை அல்லது அறுவை சிகிச்சையை இரத்தம் ஏற்றாமல் செய்யும் திறமையான மருத்துவர்களிடம் நாங்கள் போகிறோம். சமீப காலங்களில், மருத்துவ துறையில் வந்த சில முன்னேற்றங்களை நினைத்து நாங்கள் சந்தோஷப்படுகிறோம். சொல்லப்போனால், யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்திய இரத்தம் இல்லாத சிகிச்சை முறைகளை இப்போது எல்லாருமே பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இரத்தம் ஏற்றுவதால் சில நோய்கள் வரலாம், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராக செயல்படலாம் அல்லது மனிதர்களின் தவறுகளால் ஆபத்துகள் வரலாம். அதனால், நிறைய நாடுகளில், இரத்தம் இல்லாத சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நோயாளிகளுக்கு உரிமை கொடுத்திருக்கிறார்கள்.

தவறான கருத்து: ஒருவரின் நோய் அற்புதமாக குணமாகும் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள்.

 உண்மை: யெகோவாவின் சாட்சிகள் அற்புத சுகப்படுத்துதலை செய்வதில்லை.

தவறான கருத்து: இரத்தம் இல்லாத சிகிச்சை முறைகளுக்கு நிறைய செலவாகும்.

 உண்மை: இரத்தம் இல்லாத சிகிச்சை முறைகளுக்கு நிறைய செலவு ஆகாது. a

தவறான கருத்து: ஒவ்வொரு வருஷமும் நிறைய யெகோவாவின் சாட்சிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் இரத்தம் ஏற்றிக்கொள்ளாமல் இருப்பதால் இறந்துபோகிறார்கள்.

 உண்மை: இது ஒரு ஆதாரமில்லாத கருத்து. நிறைய அறுவை சிகிச்சை நிபுணர்கள், இதய அறுவை சிகிச்சை, மூட்டு மற்றும் எலும்பு அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மாதிரியான சிக்கலான சிகிச்சை முறைகளைக்கூட இரத்தம் இல்லாமல் வழக்கமாக செய்கிறார்கள். b இரத்தம் ஏற்றிக்கொள்ளாத நோயாளிகள் (அவர்கள் பெரியவர்களோ சிறியவர்களோ) இரத்தம் ஏற்றிக்கொள்கிறவர்கள் அளவுக்கு அல்லது அவர்களைவிட சீக்கிரமாகவே குணமாகிறார்கள். c எப்படி இருந்தாலும் சரி, இரத்தம் ஏற்றிக்கொள்ளாததால் ஒருவர் இறப்பார் என்றோ இரத்தம் ஏற்றிக்கொள்வதால் ஒருவர் பிழைப்பார் என்றோ யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்வது இல்லை?

 மருத்துவ காரணங்களுக்காக அல்ல, எங்களுடைய மத நம்பிக்கை காரணமாக நாங்கள் இரத்தம் ஏற்றிக்கொள்வது இல்லை. பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, இரத்தத்தை விட்டு விலகியிருக்க சொல்லி ரொம்பத் தெளிவாக கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. (ஆதியாகமம் 9:4; லேவியராகமம் 17:10; உபாகமம் 12:23; அப்போஸ்தலர் 15:28, 29) அதுமட்டுமல்ல, கடவுள் இரத்தத்தை உயிராக பார்க்கிறார். (லேவியராகமம் 17:14) கடவுளுக்கு கீழ்ப்படிய நினைப்பதாலும் உயிர் என்ற பரிசை கொடுத்தவருக்கு மரியாதை காட்ட நினைப்பதாலும் நாங்கள் இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை.

மாறிவரும் கருத்துகள்

கஷ்டமான அறுவை சிகிச்சைகளைக்கூட இரத்தம் ஏற்றாமல் நல்லபடியாக செய்துமுடிக்க முடியும்.

 ஒருகாலத்தில் மருத்துவ துறையில் இருந்தவர்கள் இரத்தம் இல்லாமல் செய்யப்பட்ட சிகிச்சை முறைகளை கொடூரமான, சொல்லப்போனால் தற்கொலைக்கு சமமான முறைகளாகப் பார்த்தார்கள். ஆனால் சமீப காலங்களாக இந்த கருத்து மாறியிருக்கிறது. உதாரணத்துக்கு, 2004-ல் மருத்துவ கல்வி சம்பந்தமான பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை இப்படிச் சொன்னது: “யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற நோயாளிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் வரப்போகும் வருஷங்களில் எல்லாரும் பயன்படுத்தும் சிகிச்சை முறைகளாக மாறும்.” d 2010-ல் இதயம், நுரையீரல் மற்றும் இரத்த சுழற்சி சம்பந்தமான ஒரு பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை இப்படிச் சொன்னது: “‘இரத்தம் இல்லாத அறுவை சிகிச்சை முறைகள்’ யெகோவாவின் சாட்சிகளுக்கு மட்டுமல்ல, எல்லா அறுவை சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படும் பொதுவான மருத்துவ முறைகளாக மாற வேண்டும்.”

 உலகம் முழுவதும் இன்று ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இரத்தம் வீணாவதை குறைக்கும் முறைகள் மூலமாக ரொம்ப கஷ்டமான அறுவை சிகிச்சைகளைக்கூட இரத்தம் ஏற்றாமலேயே செய்துவிடுகிறார்கள். இந்த மாதிரியான மாற்று சிகிச்சை முறைகளை வளர்ந்துவரும் நாடுகளில்கூட செய்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத நோயாளிகள்கூட இந்த சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

a See Transfusion and Apheresis Science, Volume 33, No. 3, p. 349.

b See The Journal of Thoracic and Cardiovascular Surgery, Volume 134, No. 2, pp. 287-288; Texas Heart Institute Journal, Volume 38, No. 5, p. 563; Basics of Blood Management, p. 2; and Continuing Education in Anaesthesia, Critical Care & Pain, Volume 4, No. 2, p. 39.

c See The Journal of Thoracic and Cardiovascular Surgery, Volume 89, No. 6, p. 918; and Heart, Lung and Circulation, Volume 19, p. 658.

d Continuing Education in Anaesthesia, Critical Care & Pain, Volume 4, No. 2, page 39.