யெகோவாவின் சாட்சிகள் நன்கொடைகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?
எங்களுக்கு கிடைக்கிற நன்கொடைகளை எங்கள் அமைப்பு செய்கிற மத சம்பந்தப்பட்ட சேவைகளுக்கும் மனிதாபிமான சேவைகளுக்கும் பயன்படுத்துகிறோம். இயேசுவின் சீஷர்களாக ஆவதற்கு மக்களுக்கு உதவி செய்வதுதான் எங்களுடைய முக்கியமான நோக்கம். இதற்காகவும் எங்களுடைய நன்கொடைகள் பயன்படுத்தப்படுகின்றன.—மத்தேயு 28:19, 20.
எங்களுடைய நன்கொடைகள் எந்தவொரு தனி நபரையும் பணக்காரர் ஆக்குவதற்காக பயன்படுத்தப்படுவதில்லை. முன்நின்று நடத்தும் மூப்பர்களுக்கோ, ஊழியர்களுக்கோ நாங்கள் சம்பளம் கொடுப்பதுமில்லை. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதற்காக எந்த யெகோவாவின் சாட்சிக்கும் நாங்கள் பணம் கொடுப்பதுமில்லை. எங்களுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறவர்களும் சரி, உலக தலைமை அலுவலகத்தில் சேவை செய்கிறவர்களும் சரி, ஆளும் குழு அங்கத்தினர்கள் உட்பட எல்லாருமே ஒரு மத அமைப்பின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் யாருக்குமே சம்பளம் கொடுக்கப்படுவதில்லை.
நாங்கள் செய்கிற சில வேலைகள்
பிரசுரிக்கும் வேலை: ஒவ்வொரு வருஷமும் நாங்கள் லட்சக்கணக்கான பைபிள்களையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் மொழிபெயர்த்து, அச்சடித்து, எல்லா இடங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம், விநியோகிக்கிறோம், அதுவும் விலையில்லாமல்! அதுமட்டுமல்ல, எங்களுடைய jw.org வெப்சைட்டிலும், JW லைப்ரரி ஆப்-பிலும் நாங்கள் தயாரித்து வெளியிடுவது எல்லாமே டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது. பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கம் இல்லை என்பதால் இதை நாங்கள் இலவசமாக கொடுக்கிறோம், இதில் எந்த விளம்பரங்களையும் பயன்படுத்தவும் மாட்டோம்.
கட்டுமான வேலையும் பராமரித்தலும்: கடவுளை வணங்குவதற்காக நாங்கள் உலகம் முழுவதும் எளிமையான கட்டிடங்களைக் கட்டுகிறோம், அவற்றை பராமரிக்கிறோம். அதனால், நாங்கள் எல்லாரும் எங்களுக்கு வசதியான இடங்களில் ஒன்றுசேர்ந்து கடவுளைப் புகழ முடிகிறது. இதே மாதிரிதான் எங்களுடைய கிளை அலுவலகங்களையும் மொழிபெயர்ப்பு அலுவலகங்களையும் கட்டுகிறோம், பராமரிக்கிறோம். இதில் நிறைய வேலைகளை வாலண்டியர்கள்தான் செய்கிறார்கள். அதனால் செலவுகளை எங்களால் குறைக்க முடிகிறது.
நிர்வாக வேலை: உலகளாவிய வேலைகளுக்காக கொடுக்கப்படுகிற நன்கொடைகளால்தான் எங்களுடைய உலகத் தலைமை அலுவலகமும், கிளை அலுவலகங்களும், மொழிபெயர்ப்பு அலுவலகங்களும் இயங்குகின்றன. அதோடு, பயணக் கண்காணிகள் செய்கிற வேலைகளுக்கான செலவுகளையும் இந்த நன்கொடையை வைத்துதான் செய்கிறோம்.
பிரசங்க வேலை: நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கோ, “கடவுளுடைய வார்த்தையை“ மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கோ சாட்சிகளுக்கு எந்தவித சம்பளமும் கொடுக்கப்படுவதில்லை. (2 கொரிந்தியர் 2:17) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்த மாதிரியே இன்றைக்கும் செய்யப்படுகிறது. அதாவது, பிரசங்க வேலைக்கு அதிக நேரத்தை கொடுப்பதற்கு விருப்பம் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு, அதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு தங்குவதற்கான இடமும், அடிப்படைத் தேவைகளும் வழங்கப்படுகிறது.—பிலிப்பியர் 4:16, 17; 1 தீமோத்தேயு 5:17, 18.
கற்பிக்கும் வேலை: நன்கொடைகளைப் பயன்படுத்தி மாநாடுகளை நடத்துகிறோம். அதோடு, பைபிள் சார்ந்த ஆடியோ மற்றும் வீடியோ நிகழ்ச்சிகளையும் தயாரிக்கிறோம். மூப்பர்களுக்கும் முழு நேர ஊழியர்களுக்கும் பள்ளிகளை நடத்துகிறோம். அவர்களுடைய நியமிப்புகளை சிறந்த விதத்தில் செய்வதற்கு இந்த பள்ளிகள் அவர்களுக்கு உதவுகின்றன.
பேரழிவு நிவாரண வேலை: இயற்கை பேரழிவுகளால்... மனிதர்கள் ஏற்படுத்துகிற நாச வேலைகளால்... பாதிக்கப்படுபவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் மற்றும் தங்குவதற்கான இடத்தையும் கொடுக்கிறோம். இந்த மனிதாபிமான வேலையால் எங்களுடைய ‘விசுவாசக் குடும்பத்தார்’ மட்டுமல்ல சாட்சிகளாக இல்லாத மற்றவர்களும் நன்மை அடைகிறார்கள்.—கலாத்தியர் 6:10.