யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கென்று ஒரு பைபிள் வைத்திருக்கிறார்களா?
யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் பைபிளை ஆராய்ச்சி செய்து படிப்பதற்காக நிறைய மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்துகிறோம். ஒருவேளை, எங்களுடைய மொழியில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இருக்கிறதென்றால், அதைத்தான் நாங்கள் முக்கியமாகப் பயன்படுத்துகிறோம். ஏனென்றால், அதில்தான் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்புகூட ரொம்பத் திருத்தமாகவும், தெளிவாகவும் இருக்கிறது.
கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதில்: பைபிளைத் தயாரித்து வெளியிடுகிற சிலர், அதன் நூலாசிரியருக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுப்பதில்லை. உதாரணத்துக்கு ஒரு பைபிள் மொழிபெயர்ப்பில், அதைத் தயாரிப்பதற்கு உதவி செய்த 70-க்கும் அதிகமானவர்களுடைய பெயர் பட்டியல் இருக்கிறது. ஆனால் அதே பைபிளில் அதன் நூலாசிரியருடைய பெயர், அதாவது, யெகோவா என்ற பெயர் ஒட்டுமொத்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் கடவுளுடைய பெயர் ஆயிரக்கணக்கான தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மூலப் பிரதியில் எங்கெல்லாம் அந்தப் பெயர் இருந்ததோ அங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயத்தில் அதைத் தயாரித்த குழுவில் இருந்தவர்களுடைய பெயர்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.
திருத்தமாக இருப்பதில்: எல்லா பைபிள் மொழிபெயர்ப்புகளிலும் மூலப் பிரதியில் இருக்கிற தகவல் அப்படியே திருத்தமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, மத்தேயு 23:15-ஐ தமிழ் O.V பைபிள் இப்படி மொழிபெயர்த்திருக்கிறது: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.” ஆனால், மூலப் பிரதியில் ‘நரகம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக “கெஹென்னா” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் நேரடி அர்த்தம், இன்னோம் பள்ளத்தாக்கு. பூர்வ காலத்தில், இன்னோம் பள்ளத்தாக்கு எருசலேமுக்குப் பக்கத்தில் இருந்தது. இயேசுவின் காலத்தில், அது குப்பை கொட்டும் இடமாக ஆனது. கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பைப் பெற்ற ஒருவர் அடியோடு அழிக்கப்படுவதைக் குறிப்பதற்குத்தான் “கெஹென்னா” என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தினார். கெட்டவர்கள் எரிநரகத்தில் என்றென்றும் வதைக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருந்ததால், “நரகம்” என்ற வார்த்தையை இந்த இடத்தில் சேர்த்திருக்கலாம். இந்த நம்பிக்கையை பைபிள் ஆதரிப்பது இல்லை. அதனால்தான், புதிய உலக மொழிபெயர்ப்பு இந்த வசனத்தைத் திருத்தமாக இப்படி மொழிபெயர்த்திருக்கிறது: “வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஒரு நபரை உங்கள் மதத்துக்கு மாற்றுவதற்காகக் கடல் வழியாகவும் தரை வழியாகவும் பயணம் செய்கிறீர்கள்; ஆனால், அந்த நபர் உங்களில் ஒருவராகும்போது அவரை உங்களைவிட இரண்டு மடங்கு கெஹென்னாவுக்கு ஆளாக்குகிறீர்கள்.”
தெளிவாக இருப்பதில்: ஒரு நல்ல மொழிபெயர்ப்பு திருத்தமாக இருந்தால் மட்டும் போதாது. அது தெளிவாகவும், சுலபமாகப் புரிந்துகொள்கிற விதத்திலும் இருக்க வேண்டும். மத்தேயு 5:3-ல் இயேசு பயன்படுத்திய சொற்றொடரின் நேரடி அர்த்தத்தை தமிழ் O.V பைபிள் அப்படியே மொழிபெயர்த்திருக்கிறது. அதாவது, “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஆனால், அந்தச் சொற்றொடர் அந்தளவுக்குத் தெளிவாக இல்லாததால் புதிய உலக மொழிபெயர்ப்பு அந்த வசனத்தைச் சுலபமாகப் புரிந்துகொள்கிற விதத்தில் மொழிபெயர்த்திருக்கிறது. அது இப்படிச் சொல்கிறது: “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”
புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளுக்கு இந்த மூன்று சிறப்பம்சங்கள் இருப்பதோடு, இன்னொரு தனிச்சிறப்பும் இருக்கிறது. அது, விலை இல்லாமல் வினியோகிக்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்களால் தங்களுடைய தாய்மொழியிலேயே பைபிளைப் படிக்க முடிகிறது. பைபிள் வாங்க வசதி இல்லாதவர்களுக்குக்கூட இந்த பைபிள் கிடைத்திருக்கிறது.