Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“ எனக்குப் பதில்களைவிட கேள்விகள்தான் அதிகம் இருந்தன”

“ எனக்குப் பதில்களைவிட கேள்விகள்தான் அதிகம் இருந்தன”
  • பிறந்த வருஷம்: 1976

  • பிறந்த இடம்: ஹோண்டுராஸ்

  • என்னைப் பற்றி: சர்ச் பாதிரி

என் கடந்த காலம்

 நான் ஹோண்டுராஸில் இருக்கும் லா செய்பாவில் பிறந்தேன். நாங்கள் மொத்தம் ஐந்து பிள்ளைகள். நான்தான் கடைசிப் பையன்; ஒரே பையன். எங்கள் குடும்பத்தில் எனக்கு மட்டும்தான் காது கேட்காது. நாங்கள் இருந்த இடம் ரொம்ப ஆபத்தானதாக இருந்தது. நாங்கள் வசதியானவர்கள் கிடையாது. எனக்கு 4 வயது இருந்தபோது என்னுடைய அப்பாவுக்கு வேலை செய்யும் இடத்தில் ஒரு விபத்து ஏற்பட்டு அதில் அவர் இறந்துவிட்டார். பிறகு, நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

 என்னையும் என்னுடைய சகோதரிகளையும் பார்த்துக்கொள்வதற்காக எங்கள் அம்மா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். ஆனாலும், எனக்கு துணிமணி வாங்கி தரும் அளவுக்கு அம்மாவிடம் போதுமான காசு இருக்காது. மழைக்காலத்தில் குளிரைத் தாங்கிகொள்வதற்கு என்னிடம் கதகதப்பான துணிகள்கூட இருக்காது.

 நான் வளர்ந்தப் பிறகு, ஹோண்டுராஸ் சைகை மொழியை (LESHO) கற்றுக்கொண்டேன். காது கேட்காத மற்றவர்களிடம் சுலபமாக பேசுவதற்கு இது எனக்கு உதவியாக இருந்தது. என் அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும் அந்தச் சைகை மொழி தெரியாது. அதனால், என்னிடம் பேசுவதற்கு அவர்களாகவே சில சைகைகளை உருவாக்கினார்கள். என் அம்மா என்மேல் ரொம்ப அன்பு வைத்திருந்தார். ஆபத்துகளிலிருந்து என்னைப் பாதுகாத்தார். அம்மாவுக்குத் தெரிந்த சில சைகைகளை வைத்து புகைப் பிடிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது என்று என்னைக் கண்டித்தார். அதனால், அந்தக் கெட்ட பழக்கங்களுக்கு நான் அடிமையாகவே இல்லை. என்னை இப்படி வளர்த்ததால் என் அம்மாவுக்கு நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.

 நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது, என் அம்மா என்னைக் கத்தோலிக்க சர்ச்சுக்கு கூட்டிக்கொண்டுப் போவார். ஆனால், எனக்கு எதுவுமே புரியாது. ஏனென்றால், சர்ச்சில் சொல்லும் விஷயங்களைச் சைகை மொழியில் சொல்வதற்கு அங்கு யாருமே இல்லை. அங்குப் போக எனக்குப் பிடிக்கவே இல்லை. அதனால், 10 வயதில் நான் சர்ச்சுக்குப் போவதையே நிறுத்திவிட்டேன். ஆனாலும், கடவுளைப் பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

 1999-ல் எனக்கு 23 வயது இருக்கும்போது, நான் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவர் அமெரிக்காவில் இருக்கும் எவான்ஜிலிக்கல் சர்ச்சைச் சேர்ந்தவர். அவர் எனக்கு பைபிளைப் பற்றியும் சொல்லிக்கொடுத்தார்; அமெரிக்க சைகை மொழியையும் சொல்லிக்கொடுத்தார். பைபிளைப் பற்றி அவர் கற்றுக்கொடுத்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்ததால் நான் ஒரு பாதிரியாக ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அதனால், காது கேட்காதவர்களுக்காக நடந்த கிறிஸ்தவ பயிற்சி பள்ளியில் கலந்துகொள்வதற்காக பியூர்டோ ரிகோவுக்குக் குடிமாறிப்போனேன். நான் 2002-ல் லா செய்பாவுக்குத் திரும்பி வந்தபோது, என்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து காது கேட்காதவர்களுக்காக ஒரு சர்ச்சை ஆரம்பித்தேன். அதில் ஒரு தோழியைத்தான் நான் கல்யாணம் செய்துக்கொண்டேன். அவள் பெயர் பத்ரிஷியா.

 எங்கள் சர்ச்சில் நான் பாதிரியாக இருந்ததால், ஹோண்டுராஸ் சைகை மொழியில் (LESHO) நான் பிரசங்கம் செய்தேன். பைபிள் கதைகளை விளக்குவதற்காக நான் படங்களைக் காண்பித்தேன்; கதைகளை நடித்தும் காட்டினேன். பக்கத்து ஊரில் இருக்கும் காது கேட்காதவர்களைப் பார்த்து அவர்களை உற்சாகப்படுத்தினேன். அவர்களுக்கு இருந்த பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி செய்தேன். நான் அமெரிக்காவுக்கும் ஜாம்பியாவுக்கும் மிஷனரி ஊழியம் செய்யப் போனேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு பைபிளைப் பற்றி அவ்வளவு விஷயங்கள் தெரியாது. படங்களிலிருந்து எனக்கு என்ன புரிந்ததோ, எனக்கு என்ன சொல்லிக்கொடுத்தார்களோ அதைதான் நான் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தேன். உண்மையில் என்னிடம் பதில்களைவிட கேள்விகள்தான் அதிகமாக இருந்தன.

 ஒரு நாள் என் சர்ச்சில் இருந்த சிலர், என்னைப் பற்றி பொய்களைப் பரப்பினார்கள். நான் ஒரு குடிகாரன் என்றும் மனைவியை ஏமாற்றுகிறவன் என்றும் சொன்னார்கள். அதைக் கேட்டவுடன் எனக்கு பயங்கர கோபம் வந்தது. அவர்கள் என்னைப் பற்றி இப்படிச் சொல்வார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதனால், சீக்கிரத்திலேயே நானும் பத்ரிஷியாவும் அந்தச் சர்ச்சைவிட்டு வந்துவிட்டோம்.

பைபிள் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு

 என்னையும் பத்ரிஷியாவையும் பார்ப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி வருவார்கள். ஆனால், அவர்கள் சொன்னதை நாங்கள் கேட்டதே கிடையாது. சர்ச்சிலிருந்து வெளியே வந்தவுடன் பத்ரிஷியா பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டாள். தாமஸ்-லிக்ஸி என்ற தம்பதி படிப்பு நடத்தினார்கள். அவர்களுக்கு நன்றாகக் காது கேட்கும். இருந்தாலும், அவர்கள் சைகை மொழியில் பைபிளைப் பற்றிச் சொல்லிக்கொடுத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால், சீக்கிரத்தில் நானும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டேன்.

 அமெரிக்க சைகை மொழி வீடியோவைப் பயன்படுத்தி சில மாதங்களுக்குப் படித்தோம். அதற்குபிறகு எங்களுடன் இருந்த சில நண்பர்கள், யெகோவாவின் சாட்சிகள் மனித தலைவர்களைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று சொன்னபோது நாங்கள் பைபிள் படிப்பை நிறுத்திவிட்டோம். யெகோவாவின் சாட்சிகள் மனித தலைவர்களைப் பின்பற்றுவது கிடையாது என்பதற்கான ஆதாரங்களை தாமஸ் என்னிடம் எடுத்துக்காட்டியும் என்னால் அதை நம்பவே முடியவில்லை.

 சில மாதங்களுக்குப் பிறகு, பத்ரிஷியா மன அழுத்ததால் ரொம்பவே பாதிக்கப்பட்டாள். ‘தயவுசெஞ்சு யெகோவாவின் சாட்சிகள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க கடவுளே’ என்று ஜெபம் செய்தாள். ஜெபம் செய்தவுடனே, வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் யெகோவாவின் சாட்சி பத்ரிஷியாவை வந்து பார்த்தார். ‘உங்கள வந்து பாக்க சொல்லி லிக்ஸிகிட்ட சொல்றேன்’ என்று அந்தப் பெண் சொன்னார். லிக்ஸி ஒவ்வொரு வாரமும் பத்ரிஷியாவை வந்து பார்த்தார். அவளை உற்சாகப்படுத்தினார். அவளோடு சேர்ந்து பைபிளைப் படித்தார். பத்ரிஷியாவுக்கு ஒரு உண்மையான நண்பராக இருந்தார். இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகள்மேல் எனக்கு முழுமையான நம்பிக்கை வரவேயில்லை.

 2012-ல் நடந்த ஒரு விசேஷ ஊழியத்தில் யெகோவாவின் சாட்சிகள், உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற வீடியோவை ஹோண்டுராஸ் சைகை மொழியில் (LESHO) காட்டினார்கள். அப்போது, அந்த வீடியோவின் பதிவை லிக்ஸி எங்களுக்கும் காட்டினார். அந்த வீடியோவைப் பார்த்தபோது, நான் கற்றுக்கொடுத்த நிறைய விஷயங்கள் பைபிளில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். அது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆத்துமா அழியாது, இறந்தவர்களை கடவுள் நரகத்தில் வதைப்பார் என்று நான் சொல்லிக்கொடுத்த எதுவுமே பைபிளில் இல்லை.

 அடுத்த வாரமே நான் தாமஸை பார்ப்பதற்காக யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள் நடக்கும் ராஜ்ய மன்றத்துக்கு போனேன். அங்கே தாமஸிடம், ‘நான் காது கேக்காதவங்களுக்கு பைபிள்ல இருக்கிற உண்மைகள சொல்லிக்கொடுக்க ஆசப்படுறேன். ஆனா, ஒரு யெகோவாவின் சாட்சியா அதை சொல்லிக்கொடுக்க ஆசப்படல. என்னோட ஐடியாவே, காது கேக்காதவங்களுக்காக நானே தனியா ஒரு சர்ச்சை ஆரம்பிச்சு அவங்களுக்கு சொல்லிக்கொடுக்கனுங்கிறதுதான்’ என்று சொன்னேன். மறுபடியும் பைபிளில் இருக்கும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதை தாமஸ் பாராட்டினார். பிறகு, எபேசியர் 4:5-ஐ காட்டினார். உண்மையான கிறிஸ்தவ சபையில் ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி அந்த வசனத்திலிருந்து விளக்கிச் சொன்னார்.

 அதோடு, அமெரிக்க சைகை மொழியில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள்—விசுவாசம் செயலில், பகுதி 1: இருளிலிருந்து ஒளிக்கு என்ற வீடியோவையும் தாமஸ் காட்டினார். அந்த வீடியோவில், ஒரு சிறு தொகுதியைச் சேர்ந்த ஆட்கள் எப்படி பைபிளிலிருக்கும் அடிப்படை போதனைகளை எல்லாம் கவனமாக ஆராய்ச்சி செய்து உண்மைகளைப் புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். அவர்கள் உண்மைகளைக் கண்டுபிடித்தபோது எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள் என்று புரிந்தது. அவர்களைப் போல் நானும் உண்மைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். சாட்சிகள் பைபிளை மட்டுமே அடிப்படையாக வைத்து எல்லாருக்கும் உண்மைகளைச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்ற விஷயத்தை அந்த வீடியோவைப் பார்த்தவுடன் நன்றாகப் புரிந்துகொண்டேன். அதனால், மறுபடியும் பைபிள் படிப்பை ஆரம்பித்தேன். 2014-ல் நானும் பத்ரிஷியாவும் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சிகளாக ஆனோம்.

எனக்கு கிடைச்ச பலன்

 எனக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய சபையை ரொம்ப பிடிக்கும். ஏனென்றால், கடவுள் பரிசுத்தமாக இருப்பதுபோல் அவர்களும் ஒழுக்க விஷயத்திலும், பேச்சிலும், மற்றவர்களை நடத்தும் விதத்திலும் சுத்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள். எல்லாரோடும் சமாதானமாக இருக்கிறார்கள், ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒரே மாதிரியான உண்மைகளை எல்லாருக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

 பைபிளிலிருக்கும் உண்மைகளைப் பற்றி கற்றுக்கொண்டதை நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, யெகோவாதான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்றும், இந்தப் பூமியிலேயே அவர்தான் உன்னதமான கடவுள் என்றும் தெரிந்துகொண்டேன். அவருக்கு காது கேட்காதவர்களையும் பிடிக்கும், கேட்கிறவர்களையும் பிடிக்கும். யெகோவா என்மேல் காட்டும் அன்பை நான் பொக்கிஷமாக நினைக்கிறேன். இந்தப் பூமி அழகான பூஞ்சோலையாக மாறப்போகிறது என்று தெரிந்துகொண்டேன். அப்படி மாறும்போது, எல்லாரும் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், என்றென்றும் வாழ்வார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். அந்த அருமையான நாளைப் பார்க்க நான் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.

 காது கேட்காதவர்களிடம் பைபிளைப் பற்றி பேசுவதென்றால் எனக்கும் பத்ரிஷியாவுக்கும் ரொம்ப பிடிக்கும். முன்பு எங்களோடு சர்ச்சில் இருந்த சிலர், இப்போது பைபிள் படிப்பு படிக்கிறார்கள். நான் பாதிரியாக இருந்தபோது பைபிளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தது உண்மைதான். இருந்தாலும், என்னிடம் நிறைய கேள்விகள்தான் இருந்தன. ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடன் சேர்ந்து பைபிளைப் படித்தப் பிறகு, என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் கிடைத்துவிட்டன!