அவர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள்
கனடாவில் இருக்கும் ஆல்பர்ட்டா நகரம்! பயங்கர பனியும் காற்றும் வீசிக்கொண்டிருந்தது. பாப் என்பவர் 100 கிலோ மீட்டர் வேகத்தில் தன்னுடைய வண்டியை ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார். திடீரென்று, வண்டியின் பின்புறத்தில் இருந்த ஒரு டயர் வெடித்துவிட்டது. ஆனால், பாபுக்கு இது தெரியவில்லை. அவருடைய வீடு இன்னும் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது; தொடர்ந்து அவர் வண்டியை ஓட்டிக்கொண்டு போனார்.
அடுத்ததாக என்ன நடந்தது என்பதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்துக்கு பாப் கடிதம் எழுதினார். அதில் அவர் இப்படி எழுதியிருந்தார்: “நான் வேன் ஓட்டிக்கொண்டிருந்தபோது ஒரு கார் என் பக்கத்தில் வந்தது. அதில் ஐந்து இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய கார் ஜன்னலைத் திறந்து, ‘உங்க காரோட டயர் வெடிச்சிருச்சு’ என்று சொன்னார்கள். பிறகு, இரண்டு வண்டிகளையும் ஓரங்கட்டினோம். என்னுடைய வேன் டயரை மாற்றித் தருவதாக அந்த இளைஞர்கள் சொன்னார்கள். என்னுடைய வண்டியில் ஜாக்கியோ வேறொரு டயரோ இருக்கிறதா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. நான் சாலையோரமாகப் போய் என்னுடைய வீல்சேரில் உட்கார்ந்துகொண்டேன். அந்த இளைஞர்கள் என் வேனுக்கு அடியில் ஊர்ந்துபோய் வேறொரு டயரையும் ஜாக்கியையும் எடுத்துக்கொண்டு வந்து டயரை மாற்றிக்கொடுத்தார்கள். அந்தச் சமயத்தில், உறைந்துபோகும் அளவுக்குக் கடும் குளிர் இருந்தது. பனி பயங்கரமாகக் கொட்டிக்கொண்டிருந்தது. அவர்கள் அழகாக உடுத்தியிருந்தாலும் எனக்கு இந்த உதவியைச் செய்தார்கள். அதனால், என் வீட்டுக்குப் பத்திரமாகப் போய்ச்சேர முடிந்தது. அவர்கள் மட்டும் இல்லை என்றால் என் பாடு திண்டாட்டம்தான்!
“அந்த இளம் யெகோவாவின் சாட்சிகள் ஐந்து பேருக்கு ரொம்ப நன்றி! ஊழியம் செய்வதற்காக அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் வெறும் வாயளவில் பிரசங்கிக்காமல் செயலிலும் காட்டினார்கள். ஒரு பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றினார்கள். அதற்காக நான் அவர்களுக்கு உண்மையிலேயே நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். அவர்கள் ஐந்து பேரையும் கடவுள்தான் அனுப்பியிருக்க வேண்டும்!”