“என்னால முடிஞ்சத நான் செய்றேன்”
ஜெர்மனியில் வாழும் எர்மா என்ற சகோதரிக்குக் கிட்டத்தட்ட 90 வயதாகிறது. இரண்டு தடவை பயங்கரமான விபத்தில் அவர் மாட்டியிருக்கிறார். நிறைய அறுவை சிகிச்சைகளும் அவருக்கு நடந்திருக்கின்றன. அதனால், முன்புபோல் அவரால் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியவில்லை. ஆனால், சொந்தக்காரர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் கடிதங்கள் எழுதுவதன் மூலம் ஊழியம் செய்கிறார். மற்றவர்களைப் பலப்படுத்துகிற விதத்தில் அவர் கடிதங்களை எழுதுகிறார். அதோடு, யாராவது இறந்துவிட்டால், அவருடைய குடும்பத்தில் இருக்கிறவர்களை ஆறுதல்படுத்துவதற்காக கடிதம் எழுதுகிறார். எர்மாவின் கடிதத்தைப் பெற்றுக்கொள்பவர்கள் அடிக்கடி அவருக்கு ஃபோன் செய்து, ‘அடுத்த கடிதம் எப்போ வரும்?’ என்று கேட்கிறார்கள். நிறைய பேர், பதிலுக்கு நன்றி கடிதங்களையும் அனுப்புகிறார்கள். மறுபடியும் கடிதம் எழுதச் சொல்லி அதில் கேட்கிறார்கள். “இதையெல்லாம் பார்க்குறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. தொடர்ந்து ஊழியம் செய்ய முடியுது” என்று எர்மா சொல்கிறார்.
முதியோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கும் எர்மா கடிதங்களை எழுதுகிறார். “கணவர இழந்த ஒரு வயசான அம்மாவுக்கு நான் கடிதம் எழுதுனேன். அது அவங்களுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சுனு ஃபோன் பண்ணி சொன்னாங்க. அந்த கடிதத்த பைபிளுக்குள்ள வெச்சிருக்காங்களாம்! சாயங்கால நேரத்துல அத எடுத்து அடிக்கடி படிப்பாங்களாம்! சமீபத்துல தன்னோட கணவர இழந்த ஒரு பெண்ணுக்கும் நான் கடிதம் எழுதுனேன். பாதிரியோட பிரசங்கத்தவிட என்னோட கடிதம் ரொம்ப ஆறுதலா இருந்துச்சுனு அவங்க சொன்னாங்க. அவங்க மனசுல நிறைய கேள்விகள் இருந்துச்சு. என்னை பார்க்குறதுக்கு வரலாமானு அவங்க கேட்டாங்க” என்று எர்மா சொல்கிறார்.
எர்மாவுக்குத் தெரிந்த ஒருவர், தூரமான இடத்துக்குக் குடிமாறினார். அவர் யெகோவாவின் சாட்சி இல்லை. தனக்குக் கடிதம் எழுதும்படி அவர் எர்மாவிடம் கேட்டார். “நான் எழுதுன எல்லா கடிதத்தயும் அவங்க பத்திரமா வெச்சிருக்காங்க. அவங்க இறந்ததுக்கு அப்புறம், அவங்களோட பொண்ணு எனக்கு ஃபோன் பண்ணுனாங்க. அவங்க அம்மாவுக்கு நான் எழுதுன எல்லா கடிதங்களயும் அவங்க படிச்சதாவும், பைபிள் விஷயங்கள பத்தி அவங்களுக்கும் என்னால கடிதம் எழுத முடியுமானும் கேட்டாங்க” என்று எர்மா சொல்கிறார்.
எர்மா ரொம்பச் சந்தோஷமாக ஊழியம் செய்கிறார். “தொடர்ந்து சேவை செய்றதுக்கு பலத்த கொடுங்கனு நான் யெகோவாகிட்ட கெஞ்சி கேட்குறேன். என்னால வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியலனாலும், என்னால முடிஞ்சத நான் செய்றேன்” என்று அவர் சொல்கிறார்.