கண் தெரியாத பெண்ணின் ஜெபங்களுக்குப் பதில்
ஆசியாவில் இருக்கும் மிங்ஜி என்ற பெண்ணுக்குக் கண் தெரியாது. ஒருநாள், சாலையைக் கடப்பதற்கு யான்மே என்ற யெகோவாவின் சாட்சி அவருக்கு உதவி செய்தார். a அதனால், “ரொம்ப நன்றி, கடவுள் உங்கள ஆசீர்வதிக்கட்டும்!” என்று மிங்ஜி சொன்னார். பிறகு, பைபிளைப் பற்றிக் கலந்துபேச அவருக்கு விருப்பம் இருக்கிறதா என்று யான்மே கேட்டார். கொஞ்ச நாட்களாகவே, ‘உண்மையான சபைய கண்டுபிடிக்க உதவி செய்யுங்க’ என்று கடவுளிடம் தினமும் ஜெபம் செய்திருந்ததாகப் பிற்பாடு மிங்ஜி சொன்னார். அவர் ஏன் அப்படி ஜெபம் செய்திருந்தார்?
மிங்ஜியே அதை சொல்வதைக் கேளுங்கள். ‘2008-ல, கண்ணு தெரியாத என்னோட ஃப்ரெண்டு என்னை ஒரு சர்ச்சுக்கு கூட்டிட்டு போனா. அது மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட சர்ச். அங்க பாதிரியோட பிரசங்கத்த கேட்டதுக்கு அப்புறம், அவரு எந்த புத்தகத்துல இருந்து படிச்சு காட்டுனாருன்னு அவர்கிட்ட கேட்டேன். பைபிள்ல இருந்துன்னு சொன்னாரு. அது கடவுளோட உண்மையான வார்த்தைனு சொன்னாரு. உடனே அத படிச்சு பார்க்கணும்னு என் மனசு துடிச்சுது. அதனால சீன ப்ரெயில் மொழில ஒரு பைபிளை கேட்டு வாங்குனேன். அதுக்கு 32 தொகுப்புகள் இருந்துச்சு. கிட்டத்தட்ட ஆறு மாசத்துல எல்லாத்தயும் படிச்சு முடிச்சிட்டேன். பைபிளை படிக்க படிக்க, சர்ச்சுல சொல்ற திரித்துவ கோட்பாடு தப்புனு புரிஞ்சுது, கடவுளோட பேர் யெகோவா அப்படினும் தெரிஞ்சுகிட்டேன்.
போகப்போக, சர்ச்சுக்கு வர்றவங்க செய்றதெல்லாம் எனக்கு பிடிக்காமபோயிடுச்சு. பைபிள் சொல்ற மாதிரி அவங்க நடந்துக்குறத இல்லனு புரிஞ்சுது. உதாரணத்துக்கு, எல்லாரும் சாப்பிட்டது போக மிச்சம்மீதி இருந்த சாப்பாட்டத்தான் கண்ணு தெரியாதவங்களுக்கு கொடுத்தாங்க. அந்த அநியாயத்த நினைச்சப்போ எனக்கு வேதனையா இருந்துச்சு. அதனால, வேற ஏதாவது சர்ச் இருக்கானு தேட ஆரம்பிச்சேன். உண்மையான சபைய கண்டுபிடிக்க உதவுங்கனு கடவுள்கிட்ட ஜெபம் செஞ்சிட்டே இருந்தேன்’ என்று அவர் சொன்னார்.
யான்மே செய்த உதவி மிங்ஜியின் மனதைத் தொட்டது. அதனால், அவரோடு பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டார். பிற்பாடு, யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்துக்குப் போனார். “நான் கூட்டத்துக்கு போன அந்த முதல் நாளை மறக்கவே முடியாது. அங்கிருந்த எல்லாருமே என்கிட்ட வந்து அன்பா பேசுனாங்க. என் மனசெல்லாம் குளிர்ந்துபோச்சு. எனக்கு கண்ணு தெரியாட்டியும், பாரபட்சம் பார்க்காம என்மேலயும் அன்பு காட்டுனாங்க” என்று அவர் சொல்கிறார்.
மிங்ஜி நல்ல முன்னேற்றம் செய்தார். கூட்டங்களுக்குத் தவறாமல் போனார். அங்கே கடவுளைப் புகழ்ந்து பாடல்கள் பாட அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால், அவர் வாசித்த ப்ரெயில் மொழியில் பாட்டுப் புத்தகம் இல்லாததால் அவருக்குச் சிரமமாக இருந்தது. அதனால், சபையில் இருந்தவர்களுடைய உதவியோடு அவரே ஒரு பாட்டுப் புத்தகத்தைத் தயார் செய்தார். 151 பாடல்களையும் ப்ரெயிலில் பதிவு செய்ய அவருக்கு 22 மணிநேரம் ஆனது! 2018 ஏப்ரல் மாதத்தில் அவர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அதன் பிறகு, ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 30 மணிநேரம் ஊழியம் செய்தார்.
ஞானஸ்நானம் எடுக்க மிங்ஜிக்கு உதவி செய்ய, யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்திலுள்ள கேள்விகளையும் பைபிள் வசனங்களையும் யான்மே ஆடியோவில் பதிவு செய்து கொடுத்தார். 2018 ஜூலை மாதம் மிங்ஜி ஞானஸ்நானம் எடுத்தார். “மாநாட்டுல சகோதர சகோதரிகள் காட்டுன அன்பு என் மனச தொட்டுச்சு. ஒருவழியா கடவுளோட உண்மையான சபைக்கு வந்து சேர்ந்துட்டேன். அத நினைச்சப்போ சந்தோஷத்துல கண்ணீரே வந்துடுச்சு” என்று அவர் சொல்கிறார். (யோவான் 13:34, 35) மற்றவர்கள் தனக்கு அன்பு காட்டியது போலவே தானும் மற்றவர்களுக்கு அன்பு காட்ட வேண்டுமென்ற உறுதியோடு மிங்ஜி இப்போது முழுநேரமாகக் கடவுளுக்கு ஊழியம் செய்கிறார்.
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.