ஒரு சின்ன விஷயத்தில் நேர்மை...
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டான்யெல் என்ற பெண், ஒரு யெகோவாவின் சாட்சி. ஒரு தடவை, ஒரு காபி கடையில் யாரோ ஒருவர் விட்டுவிட்டுப் போயிருந்த பை ஒன்று அவளுடைய கண்ணில் பட்டது. அந்தப் பைக்குள் ஒரு பர்ஸ் இருந்தது. அதில் பணமும் க்ரெடிட் கார்டுகளும் இருந்தன. அது யாருடையது என்று எப்படியாவது கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று டான்யெல் நினைத்தாள். பைக்குள் ஏதாவது விலாசமோ ஃபோன் நம்பரோ இருக்கிறதா என்று தேடிப்பார்த்தாள். ஆனால், ஒருவருடைய பெயர் மட்டும்தான் கிடைத்தது. அந்த நபருடைய வங்கியின் மூலம் அவரைத் தொடர்புகொள்ள டான்யெல் முயற்சி செய்தாள். ஆனால் முடியவில்லை. இருந்தாலும், முயற்சியைக் கைவிடவில்லை. அந்தப் பையில் ஒரு டாக்டரின் ரசீது கிடைத்தது. அதில் இருந்த நம்பருக்கு ஃபோன் செய்தாள். டாக்டரிடம் வேலை பார்ப்பவர் ஃபோனை எடுத்து பேசினார். டான்யெலின் ஃபோன் நம்பரை அந்தப் பையின் சொந்தக்காரருக்குக் கொடுத்து பேசச் சொல்வதாகச் சொன்னார்.
காணாமல்போன பை கிடைத்துவிட்டதாகவும், அதைக் கொடுக்க டான்யெல் என்ற பெண் விரும்புவதாகவும் கேள்விப்பட்டபோது அந்த நபருக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது! பையை வாங்கிக்கொள்ள அவர் வந்தபோது, டான்யெலும் அவளுடைய அப்பாவும் அவருக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அவரைத் தேடிக் கண்டுபிடிக்க ஏன் அவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பதைச் சொன்னார்கள். ‘நாங்க யெகோவாவின் சாட்சிகள். பைபிள் சொல்ற மாதிரி வாழ முயற்சி பண்றோம். அதனாலதான் எப்பவுமே நேர்மையா நடக்கணுங்கறதுல உறுதியா இருக்கோம்’ என்று சொன்னார்கள்.—எபிரெயர் 13:18.
சில மணிநேரங்கள் கழித்து, அந்த நபர் டான்யெலுக்கும் அவளுடைய அப்பாவுக்கும் மெசேஜ் அனுப்பினார். பையையும் பர்ஸையும் திருப்பிக் கொடுத்ததற்காக மறுபடியும் நன்றி சொல்லி இப்படி எழுதியிருந்தார்: “நீங்கள் ரொம்ப சிரமப்பட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தீர்கள். உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சந்தித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்கள் அன்பையும் கரிசனையையும் மறக்கவே மாட்டேன். என்னுடைய நன்றிக்கு அடையாளமாக ஒரு சின்னத் தொகையை உங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஆசைப்படுகிறேன். கடவுளுடைய சேவைக்காக நீங்கள் நிறைய தியாகங்கள் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் செய்த உதவியே நீங்கள் எவ்வளவு நல்லவர்கள் என்று காட்டுகிறது. டான்யெலின் நேர்மையும் நாணயமும் என் மனதைத் தொட்டுவிட்டது. உங்களுக்கு மறுபடியும் நன்றி. கடவுள் உங்களுடைய ஊழியத்தை ஆசீர்வதிப்பார்.”
சில மாதங்களுக்குப் பிறகு டான்யெலின் அப்பா மறுபடியும் அந்த நபரை சந்தித்தார். அப்போது அந்த நபர், சமீபத்தில் தனக்கு நடந்த ஒரு விஷயத்தை டான்யெலின் அப்பாவிடம் சொன்னார். அவர் கடைக்குப் போயிருந்தபோது ஒரு பர்ஸ் தரையில் கிடப்பதைப் பார்த்தாராம். அது ஒரு பெண்ணுடையது என்பதைத் தெரிந்துகொண்டு, அவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடமே அதை ஒப்படைத்துவிட்டாராம். அதன்பின் அந்தப் பெண்ணிடம், காணாமல் போன தன்னுடைய பையை ஒருவர் எடுத்துக் கொடுத்ததாகவும், அதனால் தானும் அதையே இப்போது செய்வதாகவும் சொன்னாராம். கடைசியாக அவர் டான்யெலின் அப்பாவிடம், ”நாம ஒரு சின்ன விஷயத்துல நேர்மையாவும் கரிசனையாவும் நடந்துகிட்டாகூட, அத பார்த்து இன்னொருத்தரும் அப்படியே நடந்துக்குவாரு. இப்படி எல்லாரும் நடந்துக்குறப்போ அந்த சமுதாயமே நல்லா இருக்கும்” என்று சொன்னார்.