ஊதாநிற முக்கோண சின்னம்
மாட் என்ற பெண், பிரான்சில் ஒரு பள்ளியில் வேலை செய்கிறார். வகுப்புகள் நடக்கும்போது மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் பிள்ளைகளுக்கு அவர் உதவி செய்கிறார். சமீபத்தில், ஒரு வகுப்பிலிருந்த மாணவர்கள் நாசிக்கள் செய்த இனப்படுகொலையைப் பற்றியும் நாசிக்களுடைய சித்திரவதை முகாம்களைப் பற்றியும் படித்துக்கொண்டிருந்தார்கள். அந்த முகாம்களில் இருந்த கைதிகளின் சீருடையில் வெவ்வேறு நிறங்களிலும் வடிவங்களிலும் துண்டுத்துணி ஒன்று தைக்கப்பட்டிருந்தது. எதற்காக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று அது காட்டியது.
சில கைதிகளின் சீருடையில் ஊதா நிறத்தில் முக்கோண வடிவத் துணி தைக்கப்பட்டிருந்தது. ஒரு ஆசிரியர் அந்தப் படத்தைக் காட்டி, “ஆணோட ஆண், பெண்ணோட பெண் உறவு வெச்சுக்கிட்டவங்களுக்கு இந்த சின்னம் கொடுக்கப்பட்டுச்சுனு நினைக்கிறேன்” என்று சொன்னார். வகுப்பு முடிந்த பிறகு மாட் அந்த ஆசிரியரிடம் போய், யெகோவாவின் சாட்சிகளுக்குத்தான் அந்த அடையாளச் சின்னம் கொடுக்கப்பட்டது என்பதை விளக்கினார். a அதைப் பற்றி அவர் படித்துப் பார்ப்பதற்காக சில கட்டுரைகளைக் கொடுப்பதாகவும் சொன்னார். அந்த ஆசிரியர் அதற்கு ஒத்துக்கொண்டார். அதோடு, அந்த விஷயத்தைப் பற்றி மாணவர்களிடம் பேசும்படியும் கேட்டுக்கொண்டார்.
இன்னொரு வகுப்பில் வேறொரு ஆசிரியர் அதே விஷயத்தை சொல்லிக்கொடுத்தபோது, கைதிகள் அணிந்திருந்த வித்தியாசமான சின்னங்களின் படத்தைக் காட்டினார். ஊதாநிற முக்கோண சின்னம் யெகோவாவின் சாட்சிகளுக்கு அடையாளமாக இருந்ததை அந்தப் படம் சரியாகக் காட்டியது. வகுப்புக்குப் பிறகு, அது சம்பந்தமான சில கட்டுரைகளைக் கொடுக்கலாமா என்று மாட் அந்த ஆசிரியரிடம் கேட்டார். ஆசிரியர் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டு, மாட் இந்த விஷயத்தைப் பற்றி மாணவர்களிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்தார்.
முதல் வகுப்பில் 15 நிமிடங்கள் பேசுவதற்கு மாட் தயார் செய்தார். ஆனால் அதற்கான நேரம் வந்தபோது, “நீங்க ஒரு மணிநேரம் பேசலாம்” என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். யெகோவாவின் சாட்சிகளை நாசிக்கள் துன்புறுத்தியதைப் பற்றிய ஒரு வீடியோவை முதலில் மாட் காட்டினார். அந்த வீடியோவில், யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் 800 பேரை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து நாசிக்கள் பிரித்துக் கொண்டுபோய்விட்டதாகச் சொல்லப்பட்டது. அப்போது மாட் வீடியோவை நிறுத்திவிட்டு, அந்தப் பிள்ளைகள் மூன்று பேருடைய அனுபவங்களை வாசித்துக் காட்டினார். வீடியோவைக் காட்டி முடித்த பிறகு, கடைசியாக ஒரு கடிதத்தை வாசித்துக் காட்டினார். 1940-ல் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 19 வயது யெகோவாவின் சாட்சியான கெர்ஹாட் ஸ்டைனக்கர் எழுதிய கடிதம் அது. நாசிக்களால் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தன் பெற்றோருக்கு அவர் அந்தக் கடிதத்தை எழுதினார். b
இரண்டாவது வகுப்பிலும் மாட் இதேபோன்ற விஷயங்களை விளக்கினார். அவர் தைரியமாகப் பேசியதால், இப்போது அந்த இரண்டு ஆசிரியர்களும் நாசிக்களின் சித்திரவதை முகாம்களில் இருந்த கைதிகளைப் பற்றிப் பாடம் எடுக்கும்போது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிச் சொல்லாமல் இருப்பதில்லை.
a இரண்டாம் உலகப் போரின்போது, நாசிக்களுக்கு ஆதரவு காட்டாததால் ஜெர்மனியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் (பீபல்ஃபார்ஷர், அதாவது பைபிள் மாணாக்கர்கள், என்றும் அழைக்கப்பட்டவர்கள்) சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
b ஜெர்மானிய ராணுவத்தில் சேர மறுத்ததால் கெர்ஹாட் ஸ்டைனக்கர் கைது செய்யப்பட்டார். தன் பெற்றோருக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தில், “நான் இன்னும் சின்ன பையன்தான். கடவுள் பலம் கொடுத்தால் மட்டும்தான் என்னால் தைரியமாக இருக்க முடியும். அதைத்தான் நான் அவரிடம் கேட்கிறேன்” என்று எழுதியிருந்தார். அடுத்த நாள் காலை அவர் கொலை செய்யப்பட்டார். “கடவுளுடைய மகிமைக்காக உயிரைக் கொடுத்தவர்” என்று அவருடைய கல்லறையில் எழுதப்பட்டது.