Skip to content

மத்திய அமெரிக்க கிளை அலுவலகம்—ஆயிரக்கணக்கானோர் சுற்றிப்பார்க்கிறார்கள்!

மத்திய அமெரிக்க கிளை அலுவலகம்—ஆயிரக்கணக்கானோர் சுற்றிப்பார்க்கிறார்கள்!

2015-ல், கிட்டத்தட்ட 1,75,000 பேர் மெக்சிகோவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மத்திய அமெரிக்க கிளை அலுவலகத்தைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள்; அதாவது, ஒவ்வொரு வார நாளின்போதும் சராசரியாக 670 பேர் வந்திருந்தார்கள்! இவர்களில் நிறைய பேர் கூட்டம் கூட்டமாக, வாடகைக்கு எடுத்திருந்த பஸ்களில் பல நாட்கள் பயணம் செய்து வந்திருந்தார்கள். பல மாதங்களுக்கு முன்னரே அங்கு வர திட்டமிட்டிருந்தார்கள்.

“பெத்தேல் புராஜெக்ட்”

பெத்தேல் என்று அழைக்கப்படுகிற கிளை அலுவலகத்தைச் சுற்றிப்பார்க்க வருவதற்குச் சிலர் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, மெக்சிகோவில் உள்ள வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சபையைச் சேர்ந்த பெரும்பாலான சகோதர சகோதரிகளுடைய கையில் காசு இல்லை... 550 கிலோமீட்டர் (340 மைல்) தூர பஸ் பயணத்திற்கு! அதனால், “பெத்தேல் புராஜெக்ட்” என்ற ஒரு திட்டத்தை அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்படி, உணவு வகைகளைச் சமைத்து விற்க தொகுதி தொகுதியாகச் சகோதரர்களை நியமித்தார்கள். அதோடு, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்தார்கள். மூன்று மாதத்தில் தங்களுடைய பயணத்துக்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்தார்கள்.

அவர்கள் அந்தளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தது பிரயோஜனமாக இருந்ததா? ஆம், ரொம்பவே பிரயோஜனமாக இருந்ததென்று அவர்களே சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, அந்தச் சபையைச் சேர்ந்த லூசியோ என்ற இளைஞர், “பெத்தேலைச் சுற்றிப்பார்த்த பிறகுதான் இன்னும் நிறைய ஆன்மீகக் குறிக்கோள்களை வைக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வந்தது; இப்போது என்னுடைய சபையில் முழு ஈடுபாட்டுடன் சேவை செய்துவருகிறேன்” என்று எழுதினார். 18 வயது எலிசபெத் இப்படிச் சொன்னாள்: “யெகோவாவ வணங்குறவங்க மத்தியில மட்டுமே இருக்கற உண்மையான அன்பை என்னால அங்க பாக்க முடிஞ்சுது, உணர முடிஞ்சுது. கடவுளுக்கு இன்னும் அதிகமா சேவை செய்யணும்-ங்கற உந்துதல் எனக்குக் கிடைச்சுது, அதனால முழுநேர ஊழியத்தில இறங்கிட்டேன்.”

ஆயிரக்கணக்கில் வருகிறார்கள்

சிலசமயம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பேர் பெத்தேலைச் சுற்றிப்பார்க்க வருகிறார்கள். அவர்களையெல்லாம் அன்பாக வரவேற்று உபசரிக்க டூர் இலாகாவில் உள்ள சகோதர சகோதரிகள் கடினமாக உழைக்கிறார்கள். “இவ்ளோ பேர் வர்றத பாக்கும்போது உற்சாகமா இருக்கு. அதுமட்டுமில்ல, அவங்களோட பாராட்ட கேட்கும்போதும், இங்க வர்றதுக்காக அவங்க செஞ்ச தியாகங்கள பத்தி கேள்விப்படும்போது என்னோட விசுவாசம் பலமாகுது” என்கிறாள் லிஸி.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வரவேற்று, பெத்தேலைச் சுற்றிக்காட்டுவதற்காக, வேறு இலாகாக்களில் சேவை செய்கிற சகோதர சகோதரிகளும்கூட உதவ வேண்டியிருக்கிறது. இது அவர்களுடைய வேலையை அதிகரித்தாலும், பார்வையாளர்களை வரவேற்பதில் அவர்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். “பெத்தேல சுத்திக்காட்டின பிறகு, சகோதர சகோதரிகளோட முகத்தில அப்படியொரு சந்தோஷம் இருக்கும், அத பார்க்கும்போது என் முயற்சிக்கு முழு பலன் கிடைச்ச திருப்தி எனக்குக் கிடைக்கும்” என்கிறார் ஹுவான்.

“குழந்தைகளுக்கு அது ரொம்பப் பிடிக்கும்”

பெத்தேலைச் சுற்றிப்பார்ப்பது என்றால் குழந்தைகளுக்கும் ரொம்பக் குஷிதான்! “பெத்தேல சுத்திப்பார்க்க வர்ற குழந்தைங்ககிட்ட பெத்தேல்ல சேவை செய்யறதுக்கு இஷ்டமான்னு கேப்பேன். உடனே அவங்க எல்லாரும் ‘ஆமா!’னு உற்சாகமா சொல்வாங்க” என்கிறார் கம்ப்யூட்டர் இலாகாவில் சேவை செய்கிற நோரிகோ. குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த இடம் “கேலப் கார்னர்.” அங்கே, யெகோவாவின் நண்பனாகு! வீடியோ தொடரில் வருகிற கேலப், சோஃபியாவுடைய ஆள் உயர கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன; அவற்றுக்குப் பக்கத்தில் நின்று அவர்கள் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாம். “குழந்தைகளுக்கு அது ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்கிறார் நோரிகோ.

பெத்தேலில் செய்யப்படுகிற வேலைக்கு நன்றி சொல்லி நிறைய குழந்தைகள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, மெக்சிகோவைச் சேர்ந்த ஹென்றி என்ற சிறுவன் தன்னுடைய உண்டியலில் சேர்த்து வைத்த காசை பெத்தேலுக்கு வந்தபோது நன்கொடையாகக் கொடுத்தான். கூடவே ஒரு கடிதத்தையும் கொடுத்தான்; அதில், “இந்தப் பணத்த வெச்சு இன்னும் நிறைய புக், வீடியோ எல்லாம் தயாரியுங்க” என்று எழுதியிருந்தான்; அதோடு, “யெகோவாவுக்கு வேலை செய்யறதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி” என்றும் எழுதியிருந்தான்.

நீங்களும் வந்து சுற்றிப்பார்க்கலாம்

யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் உலகம் முழுவதிலும் உள்ள எங்களுடைய அலுவலக மற்றும் அச்சக வளாகங்களைச் சுற்றிப்பார்க்க பார்வையாளர்களுக்கு இலவச டூர் ஏற்பாடு செய்கிறோம். எங்களுடைய கிளை அலுவலகம் ஒன்றைச் சுற்றிப்பார்க்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், கண்டிப்பாக வந்து பார்க்கும்படி உங்களை அன்போடு அழைக்கிறோம். சுற்றிப்பார்க்க வந்ததற்காக நிச்சயம் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். சுற்றிப்பார்க்க வருவது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் எங்களைப் பற்றி > அலுவலகங்கள் & சுற்றிப்பார்க்க என்ற தலைப்புகளின்கீழ் உள்ளன.