Skip to content

தாய்மொழியைக் கற்றுக்கொள்ள உதவிய பைபிள் கதை புத்தகம்

தாய்மொழியைக் கற்றுக்கொள்ள உதவிய பைபிள் கதை புத்தகம்

பங்காசினான் மொழியில் என்னுடைய பைபிள் கதை புத்தகம் 2012-ல் வெளியிடப்பட்டது. பிலிப்பைன்ஸில் இருக்கும் பள்ளிகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆரம்பப் பள்ளியில் தாய்மொழியில்தான் கல்வி சொல்லித்தர வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் கல்வி துறை நினைக்கிறது. அதற்கு இந்தப் புத்தகம் உதவுகிறது.

பிலிப்பைன்ஸ் மக்கள் 100-க்கும் அதிகமான மொழிகளைப் பேசுகிறார்கள். அதனால், பள்ளியில் எந்த மொழி பயன்படுத்தலாம் என்பது குழப்பாமகவே இருந்தது. கல்வித் துறையில் இருக்கிறவர்கள் 2012-ல் ஒரு முடிவெடுத்தார்கள். பள்ளி பாடங்களை “வீட்டில் பேசும் மொழியிலேயே கற்றுக்கொடுக்கும்போது சீக்கிரம் கற்றுக்கொள்வார்கள்” என்பதால், “தாய்மொழியை அடிப்படையாக வைத்து நம் நாட்டில் பேசும் மற்ற மொழிகளைக் கற்றுத்தர வேண்டும்” என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

பங்காசினான் மொழியையும் கற்றுத்தர முடிவெடுத்தார்கள். ஆனால், பங்காசினான் மொழியில் நிறைய புத்தகங்கள் இல்லை என்று ஒரு பள்ளியின் முதல்வர் சொன்னார். அந்த சமயத்தில், நவம்பர் 2012-ல் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் என்னுடைய பைபிள் கதை புத்தகம் பங்காசினான் மொழியில் வெளியிடப்பட்டது.

மாநாட்டில் கொடுப்பதற்காக 10,000 புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. தாய்மொழியில் இந்தப் புத்தகம் கிடைத்ததும் நிறைய பிள்ளைகளும் பெற்றோர்களும் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். “இந்த புத்தகம் பிள்ளைங்களுக்கு நல்லா புரியிது. அதனால அவங்களுக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு” என்று ஒரு கணவன்-மனைவி சொன்னார்கள்.

டாகூபான் நகரில் இருக்கும் சிலர், மாநாடு முடிந்ததும் இந்தப் புத்தகத்தை ஒரு பள்ளிக்கு எடுத்து சென்றார்கள். பங்காசினான் மொழியில் புத்தகங்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்ட ஆசிரியர்கள் இந்த புத்தகத்தைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அன்று மட்டும் 340-க்கும் அதிகமான புத்தகங்களை பள்ளியில் வாங்கிக்கொண்டார்கள். இந்த புத்தகத்தை வைத்து பிள்ளைகளுக்கு தாய்மொழியை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.

கல்வி துறையில் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்து யெகோவாவின் சாட்சிகளும் சந்தோஷப்படுகிறார்கள். என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை மொழிபெயர்க்க உதவிய ஒருவர் சொன்னார்: “தாய்மொழியில ஒரு விஷயத்தை படிக்கும்போது அது மனசை தொடும். அதனாலதான், யெகோவாவின் சாட்சிகள் பைபிளையும் அது பத்திய புத்தகங்களையும் நூற்றுக்கணக்கான மொழிகள்ல தயாரிக்கிறாங்க.”