Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

உங்கள் கையிலேயே ஒரு நூலகம்

உங்கள் கையிலேயே ஒரு நூலகம்

செப்டம்பர் 1, 2021

 “சில வருஷங்களுக்கு முன்பு எலெக்ட்ரானிக் வடிவத்தில் ஆன்மீக உணவு கிடைக்கும் என்று நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம்.” இது, 2020 ஆளும் குழுவின் அறிக்கை #6-ல் சகோதரர் ஜெஃப்ரி ஜாக்சன் சொன்ன வார்த்தைகள். நீங்களும் இதை ஒத்துக்கொள்வீர்கள், இல்லையா? அவர் தொடர்ந்து இப்படி சொன்னார்: “ஆனால், இப்போது இந்த [பெருந்தொற்றின்] சமயத்தில் JW லைப்ரரி மாதிரி கருவிகள் இல்லாமல் போயிருந்தால் நாம் என்ன செய்திருப்போமோ என்று யோசிக்க தோன்றுகிறது. இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை சமாளிக்கதான் யெகோவா பல வருஷங்களாக நம்மை தயார்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார்.”

 யெகோவா நம்மை எப்படியெல்லாம் தயார்படுத்தியிருக்கிறார்? இந்த JW லைப்ரரி அப்ளிகேஷனை தயாரிக்க என்னென்ன வேலைகளை செய்தார்கள்? இதை தொடர்ந்து பராமரிப்பதற்கும் இன்னும் மேம்படுத்துவதற்கும் என்னவெல்லாம் தேவைப்படுகிறது?

ஒரு புதிய முயற்சி

 மே 2013-ல், திருத்தப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இருக்கிற ஒரு அப்ளிகேஷனை வடிவமைக்க ஆளும் குழு முடிவு செய்தது. இந்த வேலை உலக தலைமை அலுவலகத்தில் இருக்கிற மெப்ஸ் ப்ரோக்ராமிங் இலாகாவிடம் கொடுக்கப்பட்டது. “ஆனால், அதுவரைக்கும் ஒரு அப்ளிகேஷனை எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் நாம் வெளியிட்டதில்லை” என்று அந்த இலாகாவில் வேலை செய்கிற பால் வில்லிஸ் சொல்கிறார். ”நாங்கள் ஒரு டீமை உருவாக்கினோம்; வேறுசில புராஜெக்ட்களை நிறுத்தினோம். மற்ற இலாகாகளோடு சேர்ந்து வேலை செய்து, இந்த ஆப்-பையும் அதில் இருக்கிற விஷயங்களையும் வடிவமைத்தோம். நாங்கள் அடிக்கடி ஜெபம் செய்தோம். யெகோவாவின் உதவியோடு ஐந்தே மாதங்களில் அதை முடித்து, வருடாந்திர கூட்டத்தில் வெளியிட முடிந்தது“ என்கிறார் வில்லிஸ்.

 இந்த ஆப்-பை ஒரு உண்மையான நூலகம்போல் மாற்றுவதுதான் அடுத்த சவால். ஏனென்றால், இதில் நிறைய பிரசுரங்கள் இருக்க வேண்டும்; அதுவும், நிறைய மொழிகளில் கிடைக்க வேண்டும். ஜனவரி 2015-ல், ஆங்கிலத்தில் இருந்த பெரும்பாலான பிரசுரங்கள் இந்த ஆப்-ல் கிடைத்தன. ஆனால், அடுத்த ஆறே மாதங்களுக்குள் நூற்றுக்கணக்கான மொழிகளில் பிரசுரங்கள் சேர்க்கப்பட்டன.

 அன்றுமுதல் இந்த ஆப்-பை சகோதரர்கள் இன்னும் மேம்படுத்திக்கொண்டே வருகிறார்கள். இதில் நிறைய வீடியோக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. “கூட்டங்கள்” என்ற பகுதிக்குள்ளேயே கூட்டங்களுக்கு தேவையான எல்லா பிரசுரங்களும் வீடியோக்களும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, ஆராய்ச்சிக் கையேட்டில் இருக்கிற கட்டுரைகளை நேரடியாக பைபிள் வசனத்திலிருந்தே பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

நூலகத்தை பராமரிப்பது

 இந்த JW லைப்ரரி ஆப் ஒவ்வொரு நாளும் 80,00,000 கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது; ஒவ்வொரு மாதமும் 1.5 கோடிக்கும் அதிகமான கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. இத்தனை கருவிகளிலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த ஆப் செயல்பட, நிறைய வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி சகோதரர் வில்லிஸ் இப்படி சொல்கிறார்: “ஒரு ஆப்-பை தயாரிக்கும்போது, அதை முழுமையாக தயாரித்து முடித்துவிட்டோம் என்று சொல்லவே முடியாது. அதில் புதுப்புது அம்சங்களை சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆப்-பையும் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த ஆப் எந்தெந்த கருவிகளில் இயங்குகிறதோ அந்த கருவிகளின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OS) அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஆப்-ல் நிறைய பிரசுரங்களையும் ஆடியோ பதிவுகளையும் சேர்த்துக்கொண்டே இருப்பதால் நம்முடைய சாஃப்ட்வேர்யும் பராமரிக்கவும் அப்டேட் செய்யவும் வேண்டியிருக்கிறது.” நிறைய மொழிகளில் இந்த ஆப் கிடைக்கிறது. அந்த எல்லா மொழிகளிலும் இருக்கிற பிரசுரங்களையும் ஆடியோ-வீடியோ பதிவுகளையும் கணக்கெடுத்தால் கிட்டத்தட்ட 2,00,000 பிரசுரங்களும் 6,00,000-ம் அதிகமான ஆடியோ-வீடியோ பதிவுகளும் JW லைப்ரரி ஆப்-ல் இருக்கிறது!

 இந்த ஆப்-பை தொடர்ந்து பராமரிக்க, வெறுமனே கம்ப்யூட்டர் கருவிகள் மட்டுமே போதாது. அதற்கு நிறைய சாஃப்ட்வேர் லைசென்ஸ்களையும் வாங்க வேண்டும். அப்படி நாம் வாங்குகிற சாஃப்ட்வேர்களில் ஒரு சாஃப்ட்வேர் லைசென்ஸ் மட்டுமே, ஒரு வருஷத்துக்கு 1,500 அமெரிக்க டாலர்கள் ஆகிறது. அதுமட்டுமல்ல, புதிதாக வெளிவருகிற கம்ப்யூட்டர்களிலும் டேப்லெட்களிலும் ஃபோன்களிலும் இந்த ஆப் நன்றாக செயல்படுகிறதா என்று பார்ப்பதற்காக, வெவ்வேறு கம்பெனிகள் தயாரிக்கிற கருவிகளை வாங்கி, அவற்றிலும் சோதனை செய்யப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு வருஷமும் 10,000 அமெரிக்க டாலர்களை மெப்ஸ் ப்ரோக்ராமிங் இலாகா செலவு செய்கிறது.

டவுன்லோட் செய்வது—நன்கொடைகளை மிச்சப்படுத்துகிறது

 பிரசுரங்களை அச்சடிப்பது... பைன்டிங் செய்வது... வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவது... இவை எல்லாவற்றுக்கும் ஆகும் செலவை JW லைப்ரரி நன்றாகவே குறைத்திருக்கிறது என்று சொல்லலாம். உதாரணத்துக்கு, சிந்திக்க தினம் ஒரு வசனம் என்ற சிறுபுத்தகத்தை எடுத்துக்கொண்டால், 2013-ல் அதை 1,20,00,000 பிரதிகள் அச்சடித்தோம். ஆனால், 2020-ல் வெறும் 50,00,000 பிரதிகளைத்தான் அச்சடித்தோம். இத்தனைக்கும், அந்த வருஷம் 7,00,000 பிரஸ்தாபிகள் அதிகமாக இருந்தார்கள்! ஏன் இந்த மாற்றம்? ஏனென்றால், நிறைய சகோதர சகோதரிகள் JW லைப்ரரி ஆப்-ல் தினவசனத்தை படிக்கிறார்கள். a

”விலைமதிக்க முடியாத ஒன்று!”

 JW லைப்ரரி ஆப் நிறைய விதங்களில் பிரயோஜனமாக இருப்பதாக அதை பயன்படுத்துகிறவர்கள் சொல்கிறார்கள். கனடாவில் வாழ்கிற ஜனவிவ், இந்த ஆப் இருப்பதால் தவறாமல் பைபிளை படிப்பதாக சொல்கிறார். “உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஒரு ஷெல்ஃப்பில் இருக்கிற நிறைய புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும் என்றால், நான் தினமும் படிப்பேனா என்பது சந்தேகம்தான். ஆனால், இந்த ஆப் இருப்பதால் எனக்கு தேவையான எல்லாமே என்னுடைய டேப்லெட்டில் இருக்கிறது. இதனால், நான் தவறாமல் பைபிளை படிக்கிறேன். இது என்னுடைய விசுவாசத்தை பலமாக்கியிருக்கிறது; யெகோவாவிடம் நெருங்கிப்போக உதவியிருக்கிறது.”

ஜனவிவ்

 கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் இந்த ஆப் நமக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. அமெரிக்காவில் வாழ்கிற சார்லின் இப்படி சொல்கிறார்: “உலகம் முழுவதும் கோவிட்-19 தீவிரமாக பரவியதால் புதிதாக வெளிவந்த பிரசுரங்களின் அச்சடிக்கப்பட்ட பிரதிகளை நான் ஒரு வருஷத்துக்கும்மேல் கண்ணால் பார்க்கவே இல்லை. ஆனால், இந்த ஆப் மூலமாக விசுவாசத்தை பலப்படுத்துவதற்கு தேவையான விஷயங்களை யெகோவா தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தார். இந்த அன்பான ஏற்பாட்டுக்காக அவருக்கு நன்றி சொல்கிறேன்.”

 பிலிப்பைன்ஸில் வாழ்கிற ஃபே என்ற பெண் சொல்வதை பாருங்கள்: “இந்த ஒரு அற்புதமான ஆப் இருப்பதால் நான் யெகோவாவிடம் நெருங்கிப்போக முடிந்திருக்கிறது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நான் இதிலிருந்துதான் படிப்பேன். இந்த ஆப்-ல் இருக்கிற விஷயங்களை காதில் கேட்டுக்கொண்டு வீட்டுவேலைகளை செய்வேன். கூட்டங்களுக்கும் பைபிள் படிப்புகளுக்கும் தயாரிக்க நான் இதை பயன்படுத்துகிறேன். ஃப்ரீயாக இருக்கும்போது இதில்தான் வீடியோக்களை பார்ப்பேன். பஸ்ஸுக்காக காத்துக்கொண்டிருக்கும்போது இதில் ஏதாவது ஒரு கட்டுரையை அல்லது பைபிளை படிப்பேன். உண்மையிலேயே இது விலைமதிக்க முடியாத ஒன்று!” இந்த பெண்ணைப் போல்தான் நிறைய பேர் உணர்கிறார்கள்.

 இந்த ஆப் ஊழியத்திலும் ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, கேமரூனில் இருக்கிற ஒரு சகோதரியின் அனுபவத்தை கவனியுங்கள். சில வாரங்களுக்கு முன்பு வேறொரு சகோதரி பயன்படுத்திய ஒரு வசனத்தை இவர் ஊழியத்தில் பயன்படுத்த நினைத்தார். ஆனால், அந்த வசனம் எங்கே இருக்கிறது என்று இவருக்கு ஞாபகம் வரவில்லை. அப்போது என்ன செய்தார் என்று அந்த சகோதரி சொல்கிறார்: “நல்லவேளை, அந்த வசனத்தில் இருந்த சில வார்த்தைகள் எனக்கு ஞாபகம் இருந்தது. நான் இந்த ஆப்-பை ஓப்பன் பண்ணினேன். பைபிளுக்கு போய் அந்த வார்த்தைகளை போட்டு தேடினேன். உடனே எனக்கு அந்த வசனம் கிடைத்தது. இந்த ஆப் இருப்பதால் மறந்துபோன சில வசனங்களை என்னால் ஈசியாக கண்டுபிடிக்க முடிகிறது.”

 நீங்கள் கொடுக்கிற நன்கொடைகளால்தான் எங்களால் இந்த ஆப்-பை தயாரிக்கவும் அதை பராமரிக்கவும் மேம்படுத்தவும் முடிகிறது. donate.pr418.com-ல் சொல்லியிருக்கிற வழிகள் மூலமாக நீங்கள் தாராளமாக கொடுக்கிற நன்கொடைகளுக்கு நன்றி!

JW லைப்ரரி—நாம் தாண்டிய மைல்கற்கள்

  1. அக்டோபர் 2013—திருத்தப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இருக்கிற ஆப் வெளியிடப்பட்டது

  2. ஜனவரி 2015—ஆங்கிலத்தில் இருந்த பெரும்பாலான பிரசுரங்கள் சேர்க்கப்பட்டன. பிறகு, நூற்றுக்கணக்கான மொழிகளில் பிரசுரங்கள் சேர்க்கப்பட்டன

  3. நவம்பர் 2015—வெவ்வேறு நிறங்களில் ஹைலைட் செய்யும் வசதி சேர்க்கப்பட்டது

  4. மே 2016—“கூட்டங்கள்” என்ற பகுதி சேர்க்கப்பட்டது

  5. மே 2017—குறிப்புகள் எடுக்கும் வசதி சேர்க்கப்பட்டது

  6. டிசம்பர் 2017—ஆராய்ச்சி பைபிளின் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டன

  7. மார்ச் 2019—ஆடியோ பதிவுகளை டவுன்லோட் செய்யும் வசதி, வீடியோக்களை டவுன்லோட் செய்யாமல் பார்க்கும் வசதி, ஆராய்ச்சிக் கையேட்டின் பிரசுரங்களை பார்க்கும் வசதி செய்யப்பட்டது

  8. ஜனவரி 2021—இன்றும் என்றும் சந்தோஷம்! பிரசுரத்துக்கு இன்னும் நிறைய அம்சங்கள் சேர்க்கப்பட்டன

a JW லைப்ரரியில் நீங்கள் செய்கிற ஒவ்வொரு டவுன்லோடுக்கும் ஒரு சிறிய தொகை செலவாகிறது. jw.org வெப்சைட்டை அல்லது JW லைப்ரரி ஆப்-பை பயன்படுத்துகிறவர்கள் அதில் இருக்கிற தகவல்களை பார்ப்பதற்கும் டவுன்லோட் செய்வதற்கும் போன வருஷம் மட்டும் நாங்கள் 15,00,000 அமெரிக்க டாலர்களை செலவு செய்திருக்கிறோம். இருந்தாலும், ஒரு பிரசுரத்தையோ வீடியோவையோ தயாரித்து அதை அச்சடித்தோ CD-யாகவோ DVD-யாகவோ அனுப்புவதற்கு ஆகும் செலவோடு ஒப்பிடும்போது, இது ரொம்ப ரொம்ப குறைவுதான்!