Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் நாடகத்திற்காக மவுண்ட். ஈபோவில் இருக்கிற ஸ்டுடியோவில் 27,500 கிலோகிராமுக்கும் அதிகமான நொறுக்கிய கற்கள் கொட்டப்பட்டன.

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

“எப்போதும் சந்தோஷமாக இருங்கள்”! 2020 மண்டல மாநாட்டுக்கான வீடியோக்களைத் தயாரிக்க...

“எப்போதும் சந்தோஷமாக இருங்கள்”! 2020 மண்டல மாநாட்டுக்கான வீடியோக்களைத் தயாரிக்க...

ஆகஸ்ட் 10, 2020

 நம்முடைய மண்டல மாநாட்டில் காட்டப்படும் வீடியோக்கள் நம் மனதைத் தொடுகின்றன. பைபிளிலிருக்கும் விஷயங்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. “எப்போதும் சந்தோஷமாக இருங்கள்” என்ற 2020 மண்டல மாநாட்டில் மொத்தம் 114 வீடியோக்கள் இருந்தன. அதில், ஆளும் குழு அங்கத்தினர்களும் அவர்களுடைய உதவியாளர்களும் கொடுத்த 43 பேச்சுகளும் இருந்தன. இந்த வீடியோக்களைத் தயாரிக்க எவ்வளவு நேரமும் பணமும் செலவாகியிருக்கும் என்று நீங்கள் ஒருவேளை யோசித்திருக்கலாம்.

 உலகத்தின் வெவ்வேறு இடங்களிலிருக்கும் கிட்டத்தட்ட 900 சகோதர சகோதரிகள் இந்த வீடியோக்களைத் தயாரிக்க தங்களுடைய நேரத்தையும் திறமைகளையும் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். இவற்றைத் தயாரிக்க, கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களாக சுமார் 1,00,000 மணிநேரத்தை செலவு செய்தார்கள். இதில், நெகேமியா: ”யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை“ என்ற 76 நிமிட பைபிள் நாடகத்தைப் தயாரிப்பதற்கு மட்டும் 70,000 மணிநேரம் ஆனது!

 இப்படி வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த வாலண்டியர்களைக் கவனித்துக்கொள்வதற்கும், அவர்கள் வேலை செய்யத் தேவைப்பட்ட இடங்கள், கருவிகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கும் நிறைய பணம் செலவானது.

 “நம்மளோட வீடியோக்கள்ல வேற வேற இடங்களயும் கலாச்சாரங்களயும் காட்டனும்னு ஆளும் குழுவோட போதனா குழு ஆசப்படறாங்க. ஏன்னா, நமக்கு உலகம் முழுசும் சகோதர சகோதரிகள் இருக்குறாங்க அப்படிங்குறத நம்மளோட வீடியோக்கள்ல காட்டணும்னு நினைக்குறோம்” என்று ஆடியோ/வீடியோ சேவைகள் இலாகாவில் வேலை செய்யும் சகோதரர் ஜாரட் கோஸ்மன் சொல்கிறார். அதோடு, “இத செய்யறதுக்காக 11 நாடுகள்ல இருந்த 24 குழுக்கள் ஒண்ணா சேர்ந்து வேல செஞ்சாங்க. இப்படி உலகம் முழுசும் இருக்குற சகோதர சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து வேல செய்யறதுக்கு நிறைய பணம் தேவப்பட்டுச்சு. வேலைகள் எல்லாத்தையும் நல்லா திட்டம்போட்டு ஒழுங்கமைக்க வேண்டியிருந்துச்சு” என்றும் அவர் சொல்கிறார்.

 நிறைய வீடியோக்களைத் தயாரிக்க, விசேஷ கருவிகளும் தேவைப்பட்டன, செட்டுகளும் போடப்பட வேண்டியிருந்தன. உதாரணத்துக்கு, நெகேமியா: ”யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை“ என்ற பைபிள் நாடகத்திற்காக செட்டுகள் போடப்பட்டன. அவை அமெரிக்கா, நியுயார்க், பேட்டர்ஸனில் இருக்கிற மவுண்ட். ஈபோவிலுள்ள ஸ்டுடியோவில் போடப்பட்டன. வரலாற்றோடு துல்லியமாக ஒத்துப்போகிற செட்டுகளைப் போட வேண்டியிருந்தது. அதேசமயத்தில், நன்கொடைகளையும் ஞானமான விதத்தில் பயன்படுத்த வேண்டியிருந்தது. அதனால், பூர்வ எருசலேமில் இருந்த மதில்களைக் கனம் இல்லாத செட்டுகளாக சகோதரர்கள் செய்தார்கள். ஒவ்வொரு செட்டும் ஃபோம் அட்டைகளால் மூடப்பட்ட 20 அடி உயரமுள்ள மரச்சட்டங்களை வைத்து செய்யப்பட்டிருந்தது. அவை கற்கள் போல் இருப்பதற்காக பெயின்ட் அடிக்கப்பட்டன. இந்த மதில்களை, நாடகத்தில் வரும் வெவ்வேறு காட்சிகளுக்கு ஏற்றபடி நகர்த்தி வைக்க முடிந்தது. அதனால், குறைந்த செட்டுகளை வைத்து நாடகத்தை எடுக்க முடிந்தது. இருந்தாலும், நாடகத்துக்குப் போடப்பட்ட செட்டுகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட 73,51,800 ரூபாய் ($100,000) தேவைப்பட்டது. a

 இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போது இந்த வருஷ மண்டல மாநாட்டுக்காக நாம் இன்னும் நன்றியோடு இருப்போம். நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக எடுத்த எல்லா முயற்சிகளும் யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உலகளாவிய வேலைகளுக்காக donate.pr418.com என்ற வெப்சைட் வழியாகவும் மற்ற வழிகளிலும் நீங்கள் தாராளமாக கொடுக்கிற நன்கொடைகளுக்காக ரொம்ப நன்றி!

a நெகேமியா: ”யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை“ என்ற பைபிள் நாடகத்திற்கான செட்டுகள், கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதற்குமுன் போடப்பட்டன. அதனால், சமூக இடைவெளி அப்போது தேவைப்படவில்லை.