Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

கடவுளிடம் நெருங்கிப்போக உதவும் பாடல்கள்

கடவுளிடம் நெருங்கிப்போக உதவும் பாடல்கள்

நவம்பர் 1, 2021

 இசை யெகோவா தந்த அழகான ஒரு பரிசு. அது நாம் யோசிக்கிற விதத்தை மாற்றிவிடும். நமக்குள் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொண்டுவரும். சிலசமயத்தில், சோகத்தையும் வருத்தத்தையும்கூட கொண்டுவரும். இப்படி, அது நம் மனநிலையையே மாற்றிவிடும். அதுமட்டுமல்ல, செயல்படுவதற்கான வேகத்தையும் இசை நமக்கு கொடுக்கும். அமைப்பு வெளியிட்டிருக்கிற சிறப்பு பாடல்களை பொறுத்தவரை அது ரொம்பவே உண்மை. ஆனால், அதில் இன்னொரு அழகான விஷயமும் இருக்கிறது: யெகோவாவோடு ஒரு நல்ல நட்பை வைத்துக்கொள்வதற்கு சிறப்பு பாடல்கள் உதவி செய்கின்றன.

 2014-லிருந்து 70-க்கும் அதிகமான சிறப்பு பாடல்களை நாம் தயாரித்திருக்கிறோம். அதில், சில பாடல்கள் 500-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன! ‘இந்த பாடல்களை எப்படி தயாரிக்கிறார்கள்? யாரெல்லாம் இதற்கு பின்னால் வேலை செய்கிறார்கள்’ என்றெல்லாம் நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?

திரைக்கு பின்னால்...

 ஆடியோ-வீடியோ சர்வீஸஸின் கீழ் வேலை செய்யும் இசை குழுதான் சிறப்பு பாடல்களை தயாரிக்கிறார்கள். இவர்கள் ஆளும் குழுவின் போதனாக் குழுவின் கீழ் வேலை செய்கிறார்கள். இசை குழுவில் 13 சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இவர்கள் இசையை தயாரிக்கிறார்கள், ரெகார்டிங் செய்கிறார்கள், சரியான நேரத்தில் பாடல்களை வெளியிடுவதற்கு தேவையான அட்டவணைகளை தயாரிக்கிறார்கள், தயாரிப்பு சம்பந்தப்பட்ட மற்ற வேலைகளையும் செய்கிறார்கள். இவர்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகளில் இசை தயாரிப்பாளர்களாக, இசை கலைஞர்களாக, பாடகர்களாக இருக்கிறவர்கள் இசை குழுவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள். இவர்கள் ரிமோட் வாலண்டியர்களாக வேலை செய்வதற்கு போதனாக் குழு அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த சகோதர சகோதரிகள் மனத்தாழ்மையாக அவர்களுக்கு இருக்கிற திறமைகளை இசை தயாரிப்புக்கு பயன்படுத்துகிறார்கள்; தங்களுக்கு தாங்களே புகழ் தேடிக்கொள்வதில்லை.

 சிறப்பு பாடல்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? முதலில் எந்த பைபிள் வசனங்களின் அடிப்படையில் ஒரு பாடலை தயாரிக்க வேண்டும் என்று போதனாக் குழுவில் இருக்கிறவர்கள் முடிவு செய்வார்கள். அதுமட்டுமல்ல, இந்த பாடலை கேட்கிறவர்களுடைய மனதுக்குள் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் ஏற்பட வேண்டும் என்பதையும் அவர்கள் முடிவு செய்வார்கள். அதற்குப் பிறகு, இசையை தயாரிப்பதற்கும் பாடல் வரிகளை எழுதுவதற்கும் இசை குழு மற்றவர்களுக்கு நியமிப்புகளை கொடுக்கிறது. இதையெல்லாம் வைத்து பாட்டின் ஒரு சாம்பில் முதலில் தயாரிக்கப்படும். அந்த சாம்பிலை போதனாக் குழுவில் இருக்கிறவர்கள் கேட்டு, வேறு ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அதை சொல்வார்கள். இந்த குறிப்புகளை மனதில் வைத்து இசை குழு பாடலில் சில மாற்றங்களை செய்து, அதை கடைசியாக வெளியிடும். இப்படி வெளியிடப்பட்ட பாடல்கள் உலகத்தின் நிறைய இடங்களில் இருக்கிற கிளை அலுவலகங்களிலும் வீடுகளில் இருக்கிற ஸ்டுடியோக்களிலும் ரெகார்ட் செய்யப்படும்.

 ஒரு பாட்டை தயாரிப்பதற்கும் அதை ரெக்கார்ட் செய்வதற்கும் சகோதரர்கள் எலெக்ட்ரானிக் கருவிகளையும் சில புரோகிராம்களையும் பயன்படுத்துகிறார்கள். அதோடு, மியூசிக் நோடேஷன் புரோகிராம், ஆடியோ லைப்ரரி மாதிரியான சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல, இசைக் கருவிகளையும், வித்தியாசமான இசைகளை கலப்பதற்கு பயன்படும் கன்சோல்களையும், ஆம்ப்ளிஃபையர்களையும், ஸ்பீக்கர்களையும், மைக்குகளையும் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு மைக்கின் விலையும் 100-லிருந்து 1000 அமெரிக்க டாலர்கள் வரைக்கும் ஆகும். 2020-ல், இந்த மாதிரியான கருவிகளை வாங்குவதற்கு 1,16,000 அமெரிக்க டாலர்களை நாம் செலவு செய்திருக்கிறோம்.

 நன்கொடையாக கிடைக்கிற பணத்தை நாம் எப்படி மிச்சப்படுத்துகிறோம்? இப்போதெல்லாம், ஒரு பெரிய இசை குழு பெத்தேலில் இல்லை. இசை தயாரிப்புக்காக நாம் நிறைய ரிமோட் வாலண்டியர்களைதான் பயன்படுத்துகிறோம். அதுமட்டுமல்ல, வித்தியாசமான இசைக் கருவிகளை இசைக்கிற கலைஞர்களை கூட்டிக்கொண்டு வந்து ஒரு பெரிய ஆர்கெஸ்ட்ரா ஏற்பாடு செய்வதற்கு பதிலாக சகோதரர்கள் கம்ப்யூட்டர் புரோகிராம்களை பயன்படுத்துகிறார்கள். அந்த புரோகிராம்களே வித்தியாசமான இசைக் கருவிகளின் இசையை உண்டாக்கிவிடும்.

“விசுவாசம் உயிரோடு இருப்பதற்கு . . .”

 சிறப்பு பாடல்களை கேட்பது சகோதர சகோதரிகளுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. “நான் ரொம்ப கவலையாக இருக்கும்போது இந்த பாடல்கள் என் மனசுக்கு இதமாக இருக்கும். அதுவும், என்னுடைய தாய்மொழியில் கேட்கும்போது யெகோவா என்னை பாசமாக கட்டி அணைப்பது மாதிரி இருக்கும்” என்கிறார் தாரா. இவர் ஜெர்மனியில் இருக்கிறார். கஸக்ஸ்தானில் இருக்கிற டிமிட்ரி சொல்கிறார்: “பாடல் வரிகள் யெகோவாவுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்ற கவலையெல்லாம் இல்லாமல் நாம் தைரியமாக சிறப்பு பாடல்களை கேட்கலாம். அதுமட்டுமல்ல, யெகோவாவிடம் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவும் இந்த பாடல்கள் ரொம்ப உதவி செய்கின்றன.”

 தென் ஆப்பிரிக்காவில் வாழ்கிற டெலியா சொல்வதை கேளுங்கள்: “என்னுடைய விசுவாசம் உயிரோடு இருப்பதற்கு சிறப்பு பாடல்கள்தான் காரணம். நான் ரொம்ப சோகமாகவோ சோர்ந்து போய் இருக்கும்போதோ, என்னுடைய சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி கண்டிப்பாக ஒரு பாட்டு இருக்கும். சிறப்பு பாடல்களின் வரிகளை கேட்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை, நிறைய சமயத்தில் அதன் இசையை கேட்டாலே போதும் என் மனசு அப்படியே மாறிவிடும்!”

 குறிப்பிட்ட சில சிறப்பு பாடல்கள் சிலருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விடுகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் லிராடோ என்ற பெண் இப்படி சொல்கிறார்: “‘பூஞ்சோலை நம் கண்ணெதிரே!,’ ‘புத்தம் புது பூமி வருமே!’ என்ற பாடல்கள் எல்லாம் என்னை அப்படியே பூஞ்சோலை பூமிக்கே கூட்டிக்கொண்டு போய்விடும். இந்த பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் என்னுடைய அம்மா உயிரோடு எழுந்து வந்து என்னை பாசமாக கட்டி அணைப்பது போல் என் மனசுக்குள் ஒரு படம் ஓடும்.”

 இலங்கையில் இருக்கிற ஒரு டீனேஜ் பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட சிறப்பு பாடல் ரொம்பவே பிரயோஜனமாக இருந்தது. அவள் இப்படி சொல்கிறாள்: “நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதால், என்னுடைய சைன்ஸ் டீச்சர் என்னை எல்லார் முன்பாகவும் கண்டபடி திட்டிவிட்டார். நான் ரொம்ப பயந்துவிட்டேன். என்ன பதில் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. நான் வீட்டுக்கு வந்ததும், ‘பலம் பெறுவாய்!’ என்ற பாடலை கேட்க சொல்லி அம்மா சொன்னார். யாராவது நம்மிடம் கேள்வி கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல நன்றாக ஆராய்ச்சி செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை அந்த பாட்டு எனக்கு புரிய வைத்தது. அடுத்த நாள் நான் போய் டீச்சரிடம் பேசினேன். அவர் நான் சொன்னதையெல்லாம் கேட்டார். யெகோவாவின் சாட்சிகளாக நம்முடைய நம்பிக்கையையும் அவர் மதித்தார். இந்த மாதிரி நல்ல பாடல்களை கொடுத்ததற்காக யெகோவாவின் அமைப்புக்கு ரொம்ப நன்றி!”

 இந்த மாதிரி பாடல்களை தயாரிப்பதற்கு நமக்கு எப்படி பணம் கிடைக்கிறது? donate.pr418.com-ல் சொல்லியிருக்கிற வழிகள் மூலமாக நீங்கள் தாராளமாக கொடுக்கும் நன்கொடைகள் மூலம்தான்! அதற்கு நாங்கள் ரொம்ப ரொம்ப நன்றியோடு இருக்கிறோம்.