Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

லட்சக்கணக்கானவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மொழிபெயர்ப்பு அலுவலகங்கள்

லட்சக்கணக்கானவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மொழிபெயர்ப்பு அலுவலகங்கள்

மார்ச் 1, 2021

 பெரும்பாலான மொழிபெயர்ப்பு வேலைகள், கிளை அலுவலகங்களில் நடப்பதில்லை. அதற்கு பதிலாக, மொழிபெயர்ப்பு அலுவலகங்களில் (ஆர்.டி.ஒ) நடக்கின்றன. 60 சதவீதத்துக்கும் அதிகமான முழு நேர மொழிபெயர்ப்புக் குழுக்கள் இந்த அலுவலகங்களில் இருந்துதான் வேலை செய்கிறார்கள். இந்த ஏற்பாட்டால் என்னென்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன? மொழிபெயர்ப்பு வேலைகள் நன்றாக நடப்பதற்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு என்னென்ன கருவிகள் தேவைப்படுகின்றன? மொழிபெயர்ப்பு குழு செயல்படுகிற இடம் மொழிபெயர்ப்பின் தரத்தை எப்படி பாதிக்கிறது?

 எந்த மொழியில் மொழிபெயர்ப்பு வேலை நடக்கிறதோ அந்த மொழி அதிகமாக பேசப்படுகிற இடங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் வாழ்வதற்கு இந்த ஏற்பாடு உதவுகிறது. லோ ஜெர்மன் மொழிபெயர்ப்பாளரான கேரன் இப்படி சொல்கிறார்: “மெக்சிகோவில் உள்ள சிஹூவாஹூவா மாகாணத்தின் குவாடேமாக் என்ற ஊரில் இருக்கிற மொழிபெயர்ப்பு அலுவலகத்துக்கு மாறிவந்த பிறகு நாங்கள் எப்போதுமே லோ ஜெர்மன் மொழியைத்தான் பேசுகிறோம். எங்களோடு வேலை செய்கிற மற்ற மொழிபெயர்ப்பாளர்களிடமும் ஊழியத்திலும் கடைக்கு போகும்போதும் நாங்கள் அந்த மொழியில்தான் பேசுகிறோம். சொல்லப்போனால், லோ ஜெர்மன் மொழியில் மூழ்கிவிட்டோம் என்றே சொல்லலாம். அன்றாட பேச்சு வழக்கில் மக்கள் பயன்படுத்தும் சில பழமொழிகளைக்கூட எங்களால் கேட்க முடிகிறது; இதையெல்லாம் கேட்டே பல வருஷங்கள் ஆகிவிட்டன. அதுமட்டுமல்ல, மக்கள் பேசும் மொழியில் ஏற்படுகிற மாற்றங்களையும் எங்களால் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது.”

 கானாவில் இருக்கிற ஃப்ராஃப்ரா மொழிபெயர்ப்புக் குழுவில் சேவை செய்கிற ஜேம்ஸ், பெத்தேல் குடும்பத்தோடு இல்லாததை நினைத்து சிலசமயம் வருத்தப்படுவதாக சொல்கிறார். இருந்தாலும், “மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் வேலை செய்வது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. உள்ளூர் மொழியில் பிரசங்கிப்பதும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நல்ல செய்தியை கேட்டு மக்கள் சந்தோஷப்படுவதை பார்க்கும்போது எனக்கு ரொம்ப நன்றாக இருக்கிறது” என்கிறார் ஜேம்ஸ்.

 ஒரு மொழிபெயர்ப்பு அலுவலகம் இருக்க வேண்டிய இடத்தை சகோதரர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள்? “நமக்கு இருக்கும் சவால் என்னவென்றால் சில இடங்களில் போதுமான மின்சார வசதி, தண்ணீர் வசதி மற்றும் இன்டர்நெட் வசதியெல்லாம் இருக்காது. ஒரு இடத்தில் இன்டர்நெட் வசதி இல்லையென்றால், மொழிபெயர்ப்பு செய்வதற்கு தேவையான ஃபைல்கள் கிடைக்காமல் போய்விடும். அதனால், ஒரு மொழிபெயர்ப்பு அலுவலகத்தை அமைப்பதற்கான இடத்தை நாங்கள் எடுத்த எடுப்பில் தேர்ந்தெடுப்பதில்லை. இந்த வசதிகளெல்லாம் இருக்கிற நிறைய இடங்களை பற்றி யோசித்துப்பார்த்து, அதில் ஒன்றை முடிவு செய்வோம்” என்று உலகளாவிய வடிவமைப்பு/கட்டுமான இலாகாவில் சேவை செய்கிற ஜோசஃப் சொல்கிறார். இந்த இலாகா அமெரிக்காவில் இருக்கிற வார்விக் என்ற இடத்தில் இருக்கிறது.

 ஏற்கெனவே இருக்கிற மாநாட்டு மன்றங்களில், ராஜ்ய மன்றங்களில் அல்லது மிஷனரி இல்லங்களில் ஆர்.டி.ஒ-க்களை அமைக்கலாம். இப்படி செய்வது ரொம்ப சுலபமாகவும் இருக்கும், செலவும் குறைவாக ஆகும். மொழிபெயர்ப்பாளர்கள் இந்த இடங்களுக்கு வந்து வேலை செய்துவிட்டு போகலாம். இந்த மாதிரி மன்றங்களோ மிஷனரி இல்லங்களோ இல்லாத இடங்களில், மொழிபெயர்ப்பாளர்கள் தங்கி வேலை செய்வதற்கு ஏற்ற அப்பார்ட்மென்ட்களையும் அலுவலக வளாகங்களையும் வாங்குவதற்கு சகோதரர்களுக்கு அனுமதி கிடைக்கலாம். ஒருவேளை, மொழிபெயர்ப்பு குழுவுடைய தேவைகள் மாறினால் இந்த வளாகங்களை விற்றுவிட்டு, அதில் வருகிற பணத்தை வேறு வழிகளில் பயன்படுத்த முடியும்.

வேலையை தொடர உதவி

 2020 ஊழிய ஆண்டில், ஆர்.டி.ஒ-க்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு 1,30,00,000 அமெரிக்க டாலர்களை நாம் செலவு செய்திருக்கிறோம். ஆர்.டி.ஒ-ல் இருக்கிற மொழிபெயர்ப்பு குழுக்களுக்கு கம்ப்யூட்டர்களும் குறிப்பிட்ட சில சாஃப்ட்வேர்களும் ஆடியோக்களை பதிவு செய்யும் கருவிகளும் இன்டர்நெட் வசதிகளும் வேறுசில அடிப்படை வசதிகளும் தேவைப்படும். ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு கம்ப்யூட்டர் செட்-அப் செய்வதற்கு, கிட்டத்தட்ட 750 அமெரிக்க டாலர்கள் செலவாகும். கம்ப்யூட்டரில் நமக்கு தேவையான சில சாஃப்ட்வேர்களும் உவாட்ச்டவர் ட்ரான்ஸ்லேஷன் சிஸ்டம் என்ற புரோகிராமும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். உவாட்ச்டவர் ட்ரான்ஸ்லேஷன் சிஸ்டம் என்பது மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய வேலைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் சில ஆராய்ச்சிகளை செய்வதற்கும் உதவி செய்கிற ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம்.

 ஆடியோக்களை பதிவு செய்வதற்கு தேவையான கருவிகள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் தங்களுடைய அலுவலகத்தில் இருந்தே அவர்களால் ஆடியோக்களை பதிவு செய்ய முடிகிறது. கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் இந்த கருவிகள் ரொம்பவே கைகொடுத்தன. ஏனென்றால், மொழிபெயர்ப்பாளர்கள் இதையெல்லாம் தங்களுடைய வீடுகளுக்கு எடுத்துக்கொண்டு போய் தொடர்ந்து மொழிபெயர்ப்பு வேலையை செய்வதற்கு உதவியாக இருந்தன.

 மொழிபெயர்க்கப்படுகிற பிரசுரங்கள் சுலபமாக புரிந்துகொள்கிற மாதிரி இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள உள்ளூரில் இருக்கிற சகோதர சகோதரிகள் உதவி செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஆர்.டி.ஒ வளாகத்தை பராமரிக்கவும் அவர்கள் கைகொடுக்கிறார்கள். “நிறைய பிரஸ்தாபிகளும், ஒழுங்கான பயனியர்களும் தங்களுக்கு இருக்கிற திறமைகளை யெகோவாவுடைய சேவையில் நன்றாக பயன்படுத்துவதற்கு ஆர்.டி.ஒ நல்ல ஒரு வாய்ப்பை கொடுக்கிறது” என்று கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற ஆஃப்ரிகான்ஸ் ஆர்.டி.ஒ-ல் சேவை செய்கிற கர்ஸ்டின் என்ற சகோதரர் சொல்கிறார்.

 ஆர்.டி.ஒ-க்கு வந்து வேலை செய்யும் சகோதர சகோதரிகள், அதை ஒரு பெரிய பாக்கியமாக நினைக்கிறார்கள். அது அவர்களுக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது. அப்படி வேலை செய்யும் ஒரு சகோதரி இப்படி சொல்கிறார்: “பூந்தென்றல் நம்மேல் வீசும்போது எவ்வளவு புத்துணர்ச்சி கிடைக்குமோ, அந்த மாதிரியான புத்துணர்ச்சி இங்கே கிடைக்கிறது.” உள்ளூரில் இருக்கிற சில சகோதர சகோதரிகளால் ஆடியோ பதிவுகளுக்கு தங்களுடைய குரல்களையும் கொடுக்க முடிகிறது. மெக்சிகோவின் வேராக்ரூஸ் மாகாணத்தில் இருக்கிற யுவானா என்ற டோடோனக் மொழிபெயர்ப்பாளர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: “எங்கள் மொழி பேசப்படுகிற ஊருக்கு பக்கத்திலேயே நாங்கள் இருப்பதால், ஆடியோ பிரசுரங்களுக்கும் வீடியோக்களுக்கும் குரல் கொடுப்பதற்கு நிறைய சகோதர சகோதரிகளால் சுலபமாக வர முடிகிறது.”

 மொழிபெயர்ப்பு அலுவலகங்கள் நம்முடைய மொழிபெயர்ப்பின் தரத்தை அதிகமாக்கி இருக்கிறதா? நம்முடைய லட்சக்கணக்கான வாசகர்களில் நிறைய பேர் இதற்கு “ஆமாம்” என்றுதான் பதில் சொல்கிறார்கள். காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருக்கிற காங்கோ மொழிபெயர்ப்பு குழுவில் இருக்கிற செட்ரிக் என்ற ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “முன்பு வெளிவந்த பிரசுரங்களில் இருந்த மொழியை பற்றி சில சகோதர சகோதரிகள், ‘இது காவற்கோபுர அமைப்பு வெளியிடும் பிரசுரங்களின் காங்கோ மொழி’ என்று சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மக்கள் பயன்படுத்திய மொழிநடையில் அப்போதெல்லாம் பிரசுரங்கள் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆனால், இப்போது வருகிற பிரசுரங்களை பற்றி சொல்லும்போது, ‘இது நம் மொழியில் இருக்கிறது. நாம் தினமும் பயன்படுத்துகிற மொழியில் இருக்கிறது’ என்று சொல்கிறார்கள்.”

 தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற சகோதரர்களும் இதே மாதிரி உணர்ந்ததாக கோசா டீமில் இருக்கிற ஆண்டிலே என்ற சகோதரர் சொல்கிறார். “நம் பிரசுரங்களை மொழிபெயர்க்கும் விதம் இப்போதெல்லாம் மாறி இருப்பதை எங்களால் பார்க்க முடிகிறது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். முன்பெல்லாம் பிள்ளைகள்கூட ஆங்கிலத்தில்தான் காவற்கோபுரத்தை படிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் கோசா மொழியிலேயே படிக்கிறார்கள். முக்கியமாக திருத்தப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு ரொம்ப இயல்பாக இருக்கிறது. அது அவர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது” என்று ஆண்டிலே சொல்கிறார்.

 ஆர்.டி.ஒ-க்காக கட்டிடங்களை புதிதாக வாங்குவது அல்லது கட்டிடங்களை வாங்கி அதை புதுப்பிப்பது, கட்டிடங்களை பராமரிப்பது, அங்கு வேலை செய்கிறவர்களை கவனித்துக்கொள்வது என எல்லாமே உலகளாவிய வேலைக்காக கொடுக்கப்படுகிற நன்கொடைகளால்தான் நடக்கிறது. இந்த நன்கொடைகளில் donate.pr418.com மூலமாக கிடைக்கிற நன்கொடைகளும் அடங்கும்.