உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
2020 “எப்போதும் சந்தோஷமாக இருங்கள்”! மண்டல மாநாட்டு நிகழ்ச்சிகளின் மொழிபெயர்ப்பு
ஜூலை 10, 2020
2020, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், சரித்திரத்திலேயே முதல் தடவையாக, உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் ஒரே சமயத்தில் மண்டல மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள். இதற்காக, அந்த நிகழ்ச்சிகளின் வீடியோக்களை 500-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. பொதுவாக, இதைத் திட்டமிடுவதற்கும் செய்து முடிப்பதற்கும் ஒரு வருஷமோ அதற்கும் அதிகமோ ஆகும். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினையின் காரணமாக, மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வேலையை நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டியிருந்தது!
இந்த மிகப் பெரிய வேலையைச் செய்ய யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்தில் இருக்கும் “மொழிபெயர்ப்பு சேவைகள்” இலாகாவும் “குளோபல் பர்ச்சேஸிங்” இலாகாவும் உதவி செய்தன. இந்த வேலைக்காக நிறைய மொழிபெயர்ப்புக் குழுக்களுக்குக் கூடுதலான கருவிகள் தேவைப்பட்டதை “மொழிபெயர்ப்பு சேவைகள்” இலாகா புரிந்துகொண்டது. முக்கியமாக, அந்தக் குழுக்களுக்கு உயர்தரமான மைக்குகள் தேவைப்பட்டன. அதனால், 1,000 மைக்குகளை வாங்கி, கிட்டத்தட்ட 200 இடங்களுக்கு அனுப்பி வைக்க “குளோபல் பர்ச்சேஸிங்” இலாகா ஏற்பாடு செய்தது.
பணத்தை மிச்சப்படுத்துவதற்காக மைக்குகள் மொத்த விலையில் வாங்கப்பட்டு, பொதுவான ஒரு இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கே மறுபடியும் பேக் செய்யப்பட்டு, உலகத்திலுள்ள வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மொத்த விலையில் வாங்கியதால், அனுப்பும் செலவோடு சேர்த்து ஒவ்வொரு மைக்குக்கும் சராசரியாக 170 அமெரிக்க டாலர்கள்தான் செலவானது. இப்படி, தனித்தனியாக வாங்கும்போது ஆகும் செலவில் 20 சதவீதத்துக்கும் அதிகத்தை மிச்சப்படுத்த முடிந்தது.
2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் “குளோபல் பர்ச்சேஸிங்” இலாகா இவற்றை வாங்கி அனுப்ப வேண்டியிருந்தது. இந்த மாதங்களில் கொரோனா வைரஸ் காரணமாக நிறைய வியாபார நிறுவனங்கள் சரியாகச் செயல்படவில்லை. இருந்தாலும், மே மாதத்தின் முடிவுக்குள் மொழிபெயர்ப்பு அலுவலகங்களுக்கும், கிளை அலுவலகங்களுக்கும், மொழிபெயர்ப்பு வேலை நடந்த மற்ற இடங்களுக்கும் தேவையான கருவிகள் போய்ச் சேர்ந்துவிட்டன.
“குளோபல் பர்ச்சேஸிங்” இலாகாவின் கண்காணியான ஜே ஸ்வின்னி இப்படிச் சொல்கிறார்: “ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் பெத்தேல் சகோதரர்களுக்கும் வெளி நிறுவனங்களுக்கும் இடையில நல்ல ஒத்துழைப்பு இருந்துச்சு. யெகோவாவோட சக்தி உதவி செஞ்சதாலதான் இவ்ளோ சீக்கிரமாவும் சிக்கனமாவும் இந்த வேலைய செஞ்சு சகோதர சகோதரிகளுக்கு உதவ முடிஞ்சுது.”
“மொழிபெயர்ப்பு சேவைகள்” இலாகாவில் வேலை செய்யும் நிக்கோலஸ் அலாடிஸ் இப்படிச் சொல்கிறார்: “பொது முடக்கத்தப்போ இந்த கருவிகள் வந்து சேர்ந்தத பார்த்து மொழிபெயர்ப்பாளர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. தனித்தனி இடங்கள்ல இருந்தாலும் ஒண்ணா சேர்ந்து, 500-க்கும் அதிகமான மொழிகள்ல பேச்சுகளயும் நாடகங்களயும் பாட்டுகளயும் அவங்களால மொழிபெயர்க்கவும் ரெக்கார்டு செய்யவும் முடிஞ்சுது.”
2020 ”எப்போதும் சந்தோஷமாக இருங்கள்“! மண்டல மாநாட்டை உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்காகத் தயாரிப்பதற்கு இதுபோல் பல வேலைகள் செய்யப்பட்டன. donate.pr418.com வெப்சைட் மூலமாகவும் மற்ற வழிகளிலும் நீங்கள் தாராளமாகக் கொடுத்த நன்கொடைகளால்தான் அதற்குத் தேவையான பொருள்களை வாங்க முடிந்தது.