Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மைல்ஸ் நார்தோவர் | வாழ்க்கை சரிதை

கைகளால் செய்த வேலைக்கு யெகோவா கைமேல் பலன் கொடுத்தார்

கைகளால் செய்த வேலைக்கு யெகோவா கைமேல் பலன் கொடுத்தார்

 என்னுடைய அப்பா-அம்மா யெகோவாவின் அமைப்புக்கு உதவி செய்யத் தயங்கியதே கிடையாது. அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், லண்டனில் இருக்கிற பெத்தேல் குடும்பத்துக்கு பால் அதிகமாக தேவைப்பட்டபோது எங்களிடம் இருந்த ஒரே ஜெர்சி பசு மாட்டின் கன்றுக்குட்டியை என்னுடைய அப்பா, அவர்களுக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார். அதனால் எங்கள் “குடும்பத்தில்” முதன்முதலில் பெத்தேலுக்கு போனது இந்தக் கன்றுக்குட்டிதான் என்று நாங்கள் அடிக்கடி ஜோக்காக பேசிக்கொள்வோம். என்னுடைய அப்பா-அம்மா வைத்த இந்த நல்ல முன்மாதிரி யெகோவாவுக்கு என்னால் முடிந்த எல்லாவற்றையுமே கொடுக்க வேண்டும், “கை ஓயாமல்” வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையை எனக்குள்ளே விதைத்தது. (பிரசங்கி 11:6) சொல்லப்போனால், நானே எதிர்பார்க்காத விதங்களில் என் கைகளால் யெகோவாவுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை அவர் திறந்து வைத்தார். அதுமட்டுமல்ல, நான் எடுத்த எல்லா முயற்சிகளையும் அவர் ஆசீர்வதித்தார். சரி... இப்போது என்னுடைய கதையை சொல்கிறேன்.

 நானும் என்னுடைய அக்காவும் அண்ணாவும் ஐக்கிய அரசில் (UK) இருக்கிற பஸ்டங்க் என்ற ஊருக்கு பக்கத்தில், ஒரு கிராமத்தில்தான் வளர்ந்தோம். அங்கே நாங்கள் ஒரு பண்ணை வீட்டில் வாடகைக்கு இருந்தோம். எனக்கு 19 வயதானபோது என்னுடைய அண்ணனையும் அக்காவையும் போல நானும் பயனியர் சேவையைத் தொடங்கினேன். பின்பு ஸ்காட்லாண்டில் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன். 1970-ல் எனக்கு 23 வயதானபோது லண்டனில் இருக்கிற பெத்தேலில் சேவை செய்வதற்கு அழைப்பு வந்தது. சைகை மொழி என்ற ஒரு மொழி இருப்பதையே நான் அங்கேதான் தெரிந்துகொண்டேன். அது என் வாழ்க்கை பாதையையே மாற்றிவிட்டது! இந்தப் பாதைதான் என் மனதுக்கு ரொம்ப நிறைவாக இருக்கிறது, ஆசீர்வாதங்களை அள்ளி அள்ளித் தருகிறது.

சைகை மொழியைக் கற்றுக்கொண்டேன்

 பெத்தேலில் இருந்தபோது, மில் ஹில் சபையில் நியமிக்கப்பட்டேன். அங்கே காதுகேட்காத நிறைய சகோதர சகோதரிகளை சந்தித்தேன். அவர்களோடு ஃப்ரெண்ட் ஆவதற்கு மொழி ஒரு தடையாக இருக்க கூடாது என்று நினைத்தேன். அதனால் கூட்டம் நடக்கும்போது, அவர்களோடு சேர்ந்து உட்கார முடிவு செய்தேன்.

 அந்தச் சமயத்தில் பிரிட்டனில் சைகை மொழி சபைகளே கிடையாது. காது கேட்காத சகோதர சகோதரிகள்கூட ஆங்கில மொழியில் நடந்த கூட்டங்களில்தான் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சியை காது கேட்கிற சகோதர சகோதரிகள் அவர்களுக்கு மொழிபெயர்த்தார்கள். ஆங்கிலத்தின் மொழிநடையும் இலக்கணத்தையும் பயன்படுத்தி அதை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தார்கள். காது கேட்காத சகோதரர்கள் சைகை மொழியை எனக்குப் பொறுமையாக கற்றுக்கொடுத்தார்கள். அப்போதுதான் அந்த மொழிக்கென்று ஒரு இலக்கணமும் மொழிநடையும் இருப்பதே எனக்கு புரிந்தது. சொல்லப்போனால், ஆங்கிலம்கூட அவர்களுக்கு அந்நிய பாஷைதான்! இந்த விஷயம் எனக்கு புரிந்தபோது காது கேட்காத அந்த நண்பர்கள்மேல் அன்பும் மரியாதையும் ரொம்பவே அதிகமானது. ஏனென்றால், சபைக் கூட்டங்களில் கற்றுக்கொடுக்கிற விஷயங்கள் அவர்களுக்கு புரியவில்லை என்றாலும்கூட தவறாமல் அதில் கலந்துகொண்டார்கள். இதுதான் சைகை மொழியை கரைத்துக் குடிக்க வேண்டும் என்ற முயற்சிகளில் முழுமூச்சோடு நான் இறங்குவதற்குக் காரணம்.

 பிரிட்டனில் காது கேட்காதவர்களுடைய அதிகாரப்பூர்வ மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி (BSL). போகப் போக சபை கூட்டங்களில் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் தாங்கள் முன்பு செய்த மாதிரி ஆங்கிலத்தை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதற்கு பதிலாக இந்த சைகை மொழியைப் பயன்படுத்த கற்றுக்கொண்டார்கள். அதனால் காது கேட்காத சகோதர சகோதரிகளுக்கு கூட்டங்களிலிருந்து நிறைய பயன் கிடைத்தது. அதுமட்டுமல்ல, காது கேட்கிற சகோதர சகோதரிகளோடு சேர்ந்து அவர்கள் ஒற்றுமையாக யெகோவாவை வணங்க ஆரம்பித்தார்கள். இது நடந்து 50 வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டது. இப்போது அதைத் திரும்பிப் பார்க்கும்போது சைகை மொழி தொகுதியை யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதித்திருப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த தொகுதியில் ஏற்பட்ட பிரம்மாண்டமான வளர்ச்சியில் யெகோவா எனக்கும் ஒரு பங்கு கொடுத்திருக்கிறார். அதில் சிலவற்றை உங்களிடம் சொல்கிறேன்.

சைகை மொழி தொகுதி மலர்கிறது

 நான் மூப்பராக நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பின்பு, அதாவது 1973-ல், மைக்கேல் ஈகர்ஸ் என்ற காது கேட்காத ஒரு சகோதரர், ‘நாம் பிரிட்டிஷ் சைகை மொழியில் சில கூட்டங்களையாவது நடத்தினால் நன்றாக இருக்கும்’ என்று சொன்னார். இதைப் பற்றி கிளை அலுவலகத்திடம் பேசியபோது அவர்களும் அதற்கு ‘ஓகே’ சொன்னார்கள். நானும் இன்னொரு மூப்பரும் சேர்ந்து மாதத்தில் ஒருநாள் தென்கிழக்கு லண்டனில் இருக்கிற டெப்ட்போர்ட் என்ற இடத்தில் சைகை மொழியில் கூட்டங்களை நடத்தினோம்.

 அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது! லண்டனில் இருந்தும் தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கிற மற்ற பகுதிகளில் இருந்தும் காது கேட்காத சகோதர சகோதரிகள் முதல்நாள் நடந்த BSL கூட்டத்துக்கு வந்தார்கள். ஒருவழியாக, காது கேட்காத சகோதர சகோதரிகளுக்கு அவர்களுடைய சொந்த மொழியிலேயே யெகோவாவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் கற்றுக்கொள்ள முடிந்தது! கூட்டங்கள் முடிந்த பின்பு நாங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டோம். பின்பு டீ, காபி எல்லாம் சாப்பிட்டோம். என்னால் அவர்களை உற்சாகப்படுத்தவும் முடிந்தது.

 கொஞ்ச நாளைக்கு பின்பு பிர்மிங்ஹாம், ஷெஃபீல்ட் ஊர்களில்கூட சைகை மொழி கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டங்களுக்கு சைகை மொழியைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட காது கேட்கிற சகோதர சகோதரிகள் நிறைய பேர் வந்தார்கள். இப்படி மனமுவந்து வந்த நிறைய பேர், பின்பு இங்கிலாந்தின் மற்ற பகுதியில் சைகை மொழி தொகுதிகளில் ஊழியம் செய்தார்கள்.

ஒரு அருமையான துணை!

எங்களுடைய கல்யாண நாளில்

 1974-ல் ஸ்டெல்லா பார்க்கர் என்ற ஒரு அழகான சகோதரியை பார்த்தேன். அவள் பெத்தேலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சபையில் விசேஷ பயனியராக சேவை செய்துகொண்டிருந்தாள். நாங்கள் காதலித்தோம், 1976-ல் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். அதற்குப் பின்பு ஸ்டெல்லாவும் நானும் விசேஷ பயனியராக சேவை செய்தோம். வடக்கு லண்டனில் ஹேக்னே என்ற இடத்தில் எங்களுடைய சபை இருந்தது. சைகை மொழி தொகுதியில் என்னோடு சேர்ந்து ஸ்டெல்லாவும் சேவை செய்தாள். அந்த நாட்களைப் பற்றி யோசித்து பார்க்கும்போது ஒன்றுசேர்ந்து பயனியராக சேவை செய்ததுதான் எங்களுடைய திருமண வாழ்க்கைக்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தது என்று சொல்வேன்.

 கொஞ்ச நாளைக்கு பின்பு, ஸ்டெல்லாவுக்கும் எனக்கும் பெத்தேலில் கம்யூட்டராக சேவை செய்வதற்கு அழைப்பு வந்தது. எங்களுடைய வாழ்க்கை ரொம்ப பிஸியாக ஆனது. நான் துணை வட்டார கண்காணியாகவும் சேவை செய்தேன். மூப்பர்களுக்கான ராஜ்ய ஊழிய பள்ளியை நடத்தினேன். ஆங்கில மொழியில் நடந்த மண்டல மாநாடுகளை சைகை மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தேன். ஓடி ஓடி வேலை செய்து ஓய்ந்துபோனாலும் நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்.—மத்தேயு 11:28-30.

 1979-ல் எங்களுடைய மகன் சைமன் பிறந்தான். 1982-ல் மார்க் பிறந்தான். நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனால் இது எங்களுக்கு பெரிய பொறுப்பாகவும் இருந்தது. நாங்கள் இதை எப்படி சமாளித்தோம்? யெகோவாவின் சேவையில் எனக்கு கிடைத்த பொறுப்புகளைச் செய்வதற்காக நான் பல இடங்களுக்குப் போக வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட சமயங்களில், குடும்பமாக சேர்ந்து போக வேண்டும் என்று ஸ்டெல்லாவும் நானும் முடிவு பண்ணினோம். அதுமட்டுமல்ல, நாங்கள் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாக நேரம் செலவழித்தோம். யெகோவாவுக்கு சேவை செய்வதுதான் சந்தோஷத்தை கொடுக்கும் என்று எங்களுடைய பிள்ளைகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதனால் கிடைத்த பலன், எங்களுடைய மகன்கள் வளர்ந்த பின்பு சைகை மொழியை கற்றுக்கொண்டார்கள், பயனியர் சேவையும் ஆரம்பித்தார்கள். எங்கள் அப்பா-அம்மாவுடைய கன்றுக்குட்டி அதனுடைய “பெத்தேல் சேவையை” தொடங்கி கிட்டத்தட்ட 40 வருஷங்களுக்கு பின்பு எங்களுடைய இரண்டு செல்லக்குட்டிகள் தங்களுடைய பெத்தேல் சேவையை ஆரம்பித்தார்கள். எங்களுடைய சந்தோஷத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை!

1995-ல் ஸ்டெல்லாவோடும் எங்களுடைய இரண்டு மகன்களோடும்

காது கேட்காதவர்களுக்கு உதவி

 1990-களில் கூட, பிரிட்டனில் காதுகேட்காத மூப்பர்கள் கிடையாது. சில உதவி ஊழியர்கள் மட்டும்தான் இருந்தார்கள். அதனால் கண்காணியாக சேவை செய்வதற்கும் ‘கற்றுக்கொடுப்பதற்கும்’ இவர்களுக்கு ‘தகுதி இருக்கிறதா’ என்று காதுகேட்கிற மூப்பர்கள்தான் முடிவு பண்ண வேண்டியிருந்தது. (1 தீமோத்தேயு 3:2) ஆஸ்டின் பெர்னாட் என்ற ஒரு காது கேட்காத உதவி ஊழியர் ஆங்கில மொழி சபையில் இருந்தார். அவர்மேல் எல்லாரும் ரொம்ப மரியாதை வைத்திருந்தார்கள். ஏனென்றால், அவர் யெகோவாவின் ஆடுகளை ரொம்ப பாசமாக கவனித்துக்கொண்டார். அவர் மூப்பராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று கேட்டவுடன் என்னுடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை. சொல்லப்போனால், அவர்தான் பிரிட்டனில் காது கேட்காத சகோதரர்களில் முதல் மூப்பர்!

 1996-ஐ ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்! பிரிட்டனில் முதல் சைகை மொழி சபையை உருவாக்குவதற்கு கிளை அலுவலகம் அனுமதி கொடுத்தது. அது மேற்கு லண்டனில் இலிங் என்ற இடத்தில் இருந்தது. அதற்கு பின்பு கிடுகிடுவென்று வளர்ச்சி ஏற்பட்டது.

கூட்டங்களும் மாநாடுகளும்...

 1980-களிலும் 1990-களிலும் நான் பெத்தேலில் இருக்கிற சர்வீஸ் டிபார்ட்மெண்டுக்காக வீட்டில் இருந்தே வேலை செய்தேன். சைகை மொழி சபைகளைப் பற்றியும் ஊழியத்தைப் பற்றியும் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தேன். சில சமயம் ஆங்கில மொழியில் நடக்கிற கூட்டங்களையும் மாநாடுகளையும் காது கேட்காதவர்கள் புரிந்துகொள்வதற்கு எப்படி உதவி செய்வது என்று கேட்டு சகோதரர்கள் கிளை அலுவலகத்துக்கு கடிதம் எழுதினார்கள். அந்தச் சமயத்தில் கூட்டங்களையும் மாநாடுகளையும் சைகை மொழியில் மொழிபெயர்ப்பதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. அதுமட்டுமல்ல, காது கேட்காதவர்களுக்காக எந்த பிரசுரங்களும் கிடையாது. அதனால் ‘யெகோவாவுக்காக பொறுமையாக காத்திருங்கள்’ என்று சொல்லி காது கேட்கிற மற்றும் காது கேட்காத சகோதரர்களை நான் உற்சாகப்படுத்த வேண்டியிருந்தது.

 எங்களுடைய பொறுமைக்கு கைமேல் பலன் கிடைத்தது. சீக்கிரத்தில் ஆங்கில மொழியில் நடந்த கூட்டங்களையும் மாநாடுகளையும் சைகை மொழியில் மொழிபெயர்க்க கிளை அலுவலகம் ஏற்பாடு செய்தது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், பேச்சாளரையும் மொழிபெயர்ப்பவரையும் நன்றாகப் பார்ப்பதற்காக காது கேட்காத சகோதர சகோதரிகள் முதல் வரிசையில் உட்கார ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் காது கேட்காத சகோதர சகோதரிகள் யெகோவா தங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார் என்பதையும் அவருடைய குடும்பத்தில் தங்களுக்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டார்கள்.

 ஏப்ரல் 1, 1995-ல் வெஸ்ட் மிட்லேண்ட்ஸில் டட்லீ என்ற இடத்தில் இருக்கிற மாநாட்டு மன்றத்தில் முதல் தடவையாக சைகை மொழியில் ஒருநாள் விசேஷ மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காக முன்பு வட்டார கண்காணியாக சேவை செய்த டேவிட் மேரே என்ற சகோதரரோடு சேர்ந்து நான் வேலை செய்தேன். 1000-க்கும் அதிகமானவர்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். வடக்கு ஸ்காட்லாண்டில் இருந்தும் தென் மேற்கில் கார்ன்வால் என்ற இடத்திலிருந்தும் பல மைல் தூரம் பயணம்செய்து வந்தார்கள். அவர்கள் எல்லாரும் சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தது இப்போதும் கண் முன்னால் நிற்கிறது. இந்த மாநாடு உண்மையிலேயே சரித்திரத்தில் ஒரு மைல்கல்தான்!

1995-ல், முதல் BSL மாநாட்டில் சகோதரர் டேவிட் மேரேவுடன்

 2001-ல், கிளை அலுவலகத்திலுள்ள சகோதரர்கள் என்னிடமும் சகோதரர் மேரேயிடமும் அடுத்த வருஷத்துக்கான மண்டல மாநாட்டை பிரிட்டன் சைகை மொழியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யச் சொன்னார்கள். இதற்காக நாங்கள் எக்கச்சக்கமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. நிறைய வாலண்டியர்கள் செய்த கடினமான வேலைகளை யெகோவா ரொம்பவே ஆசீர்வதித்தார். அதனால் இந்த மாநாடு ரொம்ப வெற்றிகரமாக நடந்தது! எல்லாருடைய மனதிலும் மறக்க முடியாத ஒரு மாநாடாகவும் இருந்தது. பின்பு, யெகோவா தகுதியுள்ள இளம் சகோதரர்களை இந்த வேலைக்காக பயன்படுத்துகிற வரைக்கும் நிறைய வருஷங்களுக்கு சைகை மொழியில் நடந்த மாநாடுகளை மேற்பார்வை செய்கிற வேலையை நான் செய்தேன்.

காது கேட்காதவர்களுக்கான வீடியோக்கள்

  1998-ல், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேடு வீடியோ கேஸட்டில் வெளியிடப்பட்டது. இதுதான் யெகோவாவுடைய அமைப்பு பிரிட்டிஷ் சைகை மொழியில் வெளியிட்ட முதல் பிரசுரம். எங்களுக்கு அப்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதைப் பயன்படுத்தி சகோதர சகோதரிகள் நிறைய பைபிள் படிப்புகளை நடத்தினார்கள். அதற்குப் பின்பு, அடுத்தடுத்து நிறைய பிரசுரங்களை அமைப்பு வெளியிட்டது.

 2002 மாநாட்டில், முதல் தடவையாக ராஜ்ய பாடல்கள் பிரிட்டிஷ் சைகை மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அப்போது காது கேட்காத சகோதர சகோதரிகளால் சைகையிலேயே ‘பாட’ முடிந்தது. சைகை காட்டுபவரோடு சேர்ந்து அந்த அருமையான வார்த்தைகளையும் மனதைத் தூண்டும் ராகத்தையும் உணர்ந்து ‘பாட’ முடிந்தது. காது கேட்காத ஒரு மூப்பர் அந்த ராஜ்ய பாடலை ‘பாடியபோது’ ஆனந்த கண்ணீர் வடித்தது இப்போதும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.

 2002 மாநாட்டையும் இன்னொரு மைக்கல் என்றே சொல்ல வேண்டும்! லண்டனில் இருக்கிற சைகை மொழி சபைக்குத்தான் மாநாட்டின் நாடகத்தை தயாரிப்பதற்கான நியமிப்பு கிடைத்தது. ஆனால் இதை நாங்கள் எப்படி செய்வோம்? எங்களுக்குத்தான் எந்த முன் அனுபவமும் இல்லையே! திரும்பவும் யெகோவா எங்களுக்கு உதவிக்கு வந்தார். வீடியோக்கள் தயாரிப்பதிலும் அதை எடிட்டிங் பண்ணுவதிலும் அனுபவம் இருக்கிற சகோதரர்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவினார். இந்த வீடியோ நாடகம் ரொம்ப சூப்பராக இருந்தது. அதிலிருந்து எங்களுக்கு கிடைத்த அனுபவத்துக்காக நாங்கள் ரொம்ப நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏனென்றால் அதற்குப் பின்பு, 2003-ல் இருந்து 2008-வரை வந்த மாநாடுகளில் வீடியோ நாடகங்கள் தயாரிப்பதை மேற்பார்வை செய்வதற்கான விசேஷ பொறுப்பு எனக்கு கிடைத்தது.

 ஸ்டெல்லாவுக்கும் எனக்கும் எங்களுடைய பசங்களோடு சேர்ந்து பெத்தேலில் வேலை செய்வது ரொம்ப பிடித்திருந்தது. இருந்தாலும் அங்கே வேலை ரொம்ப ஜாஸ்தியாக இருந்தது. நாங்கள் வாரக்கணக்காக ரிகர்சல் எடுத்துக்கொண்டும், படம்பிடித்துக் கொண்டும் இருந்தோம், அதனால் நடிகர்களுக்கும் தயாரிப்புக் குழுவுக்கும் மனதளவிலும் உடல் அளவிலும் சக்கையாக பிழிந்த மாதிரி ஆகிவிட்டது. ஆனாலும் அந்த முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்தது! காது கேட்காத சகோதர சகோதரிகள் நிறைய பேர் தாங்கள் படித்த பைபிள் பதிவுகள் தத்ரூபமாக கண்முன் வந்ததைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார்கள். அதைப் பார்த்தபோது எங்களுடைய இதயம் சந்தோஷத்தால் பொங்கி வழிந்தது.

 யெகோவா எங்களுக்கு நிறைய அன்பளிப்புகளை அள்ளி அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருந்தார். 2015-ல், காவற்கோபுர படிப்பு இதழ் பிரிட்டிஷ் சைகை மொழியில் வீடியோ பதிப்பாக கிடைத்தது. அதற்குப் பின்பு 2019-ல் பைபிளில் இருக்கிற மத்தேயு புத்தகம் வீடியோ பதிப்பாக வெளியிடப்பட்டது. இப்போது முழு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமும் எங்களிடம் இருக்கிறது. எபிரெய வேதாகமத்தை மொழிபெயர்க்கிற வேலை இப்போது மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. யெகோவாவுக்கு நன்றி சொல்ல காது கேட்காத சகோதர சகோதரிகளுக்கு வார்த்தைகளே இல்லை!

 நம் பரலோக அப்பா யெகோவா பாரபட்சம் இல்லாமல் அன்பைக் காட்டுகிறார். அதேபோல் அன்பைக் காட்டுகிற ஒரு குடும்பத்தின் பாகமாக நாம் இருக்கிறோம். (அப்போஸ்தலர் 10:34, 35) காது கேட்காதவர்கள்... கண் தெரியாதவர்கள்... என எல்லா மக்களுக்கும் உதவி செய்வதற்காக நம்முடைய அமைப்பு நேரம், சக்தி, வளங்களை எல்லாம் பயன்படுத்துவதைப் பார்த்து நானும் என் குடும்பமும் அப்படியே அசந்து போகிறோம். a

 அமைப்பு எடுத்த எந்த முயற்சியுமே வீண் போகவில்லை. இப்போது பிரிட்டனில் நிறைய பிரிட்டிஷ் சைகை மொழி சபைகள் இருக்கின்றன. “சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட” இந்த வேலை இன்றைக்கு பெரியளவில் நடந்துகொண்டிருக்கிறது. (சகரியா 4:10) அதில் ஒரு சின்ன பங்கு எனக்கும் இருப்பதை நினைத்து ரொம்ப சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறது. ஆனால் எல்லா புகழும் யெகோவா ஒருவருக்குத்தான்! அவர்தான் தன்னுடைய அமைப்பை பயன்படுத்தி இந்த வேலையை செய்கிறார். அவர்தான் எல்லா விதமான மக்களுக்கும் நல்ல செய்தியை அறிவிப்பதற்கு தன்னுடைய ஊழியர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறார். அவர்தான் தகுதியுள்ளவர்களுடைய இதயத்தில் ராஜ்ய விதை வளருவதற்கும் உதவுகிறார்.

2023-ல் ஸ்டெல்லாவும் நானும்