Skip to content

நம் வரலாற்றுச் சுவடுகள்

இனத்தால் பிரிந்தாலும் அன்பால் இணைந்தார்கள்

இனத்தால் பிரிந்தாலும் அன்பால் இணைந்தார்கள்

 1948 முதல் 1990-களின் ஆரம்பம் வரை தென் ஆப்பிரிக்காவில் இருந்த அரசியல் அமைப்புகள் இன ஒதுக்கீட்டு முறையை பின்பற்றினார்கள். a அந்தச் சமயத்தில் வெவ்வேறு இனத்தை சேர்ந்த மக்கள் ரொம்ப அநியாயமாக நடத்தப்பட்டார்கள். இந்த இன ஒதுக்கீட்டு முறையில் “கலப்பு இனத்தவர்” என்ற பிரிவில் சேர்க்கப்பட்ட கேலே இப்படிச் சொல்கிறார்: “கலப்பினத்தவர் கருப்பினத்தவர் நடுவில் கூட ‘என் இனம் தான் பெரியது’ என்ற எண்ணம் இருந்தது.”

 தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் வித்தியாசமான இன பின்னணியை சேர்ந்தவர்கள். இந்த இன ஒதுக்கீட்டு முறையை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? அவர்களுடைய சரித்திரத்தின் இந்தப் பகுதியை படிப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

பிரிவினையால் வந்த பயங்கரமான பிரச்சினைகளை சமாளித்தல்

 தென் ஆப்பிரிக்காவில் இனப்பாகுபாடு திணிக்கப்பட்டதை நிறைய பேர் எதிர்த்தார்கள். அரசாங்கத்தின் இந்தக் கொள்கையை எதிர்த்து நிறைய போராட்டங்களும் நடந்தன. அதனால் பலர் கைது செய்யப்பட்டார்கள், சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இப்படி அரசாங்கத்தை எதிர்த்தவர்கள் போகப் போக வன்முறையாளர்களாகவே மாறிவிட்டார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் சட்டத்துக்கு கீழ்ப்படிந்தார்கள்... எந்தவித போராட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை... அரசாங்கத்தை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்படி ‘அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்த’ முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை அவர்கள் பின்பற்றினார்கள்.—ரோமர் 13:1, 2.

 ஏதாவது ஒரு பக்கத்தை ஆதரிக்க சொல்லி யெகோவாவின் சாட்சிகளை மற்ற ஆட்கள் நிறைய சந்தர்ப்பங்களில் கட்டாயப்படுத்தினார்கள். ஒருவேளை சாட்சிகள் அதற்கு இணங்கியிருந்தால் இந்த வன்முறையான போராட்டங்களை அவர்கள் ஆதரித்தது போல் ஆகிவிடும், அவர்களுடைய சகோதரர்களுக்கு எதிராகவே சண்டை போடுவது போல் ஆகிவிடும். அந்தச் சமயத்தில் டீனேஜராக இருந்த தெம்சி இப்படிச் சொல்கிறார்: “1976-ல் போராட்டங்கள் நடந்த சமயத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நிறைய மாணவர்களை அரசியல் கலவரங்களில் ஈடுபட சொல்லி மற்றவர்கள் வற்புறுத்தினார்கள். இதில் ஈடுபட்ட மாணவர்கள் மற்ற மாணவர்களையும் அதில் கலந்துகொள்ள சொல்லி வீட்டுக்கு வீடு போய் கூப்பிட்டார்கள். நீங்கள் அதில் கலந்துகொள்ள மறுத்தால், உங்களுடைய வீட்டை எரித்து போடலாம், இல்லையென்றால் உங்களை அடித்தே கொன்றுவிடலாம்.” தியோபிலஸ் என்ற சாட்சியிடம் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் இப்படிச் சொன்னார்: “நாட்டுக்காக சண்டை போட மாட்டேன் என்று நீங்கள் சொல்கிறீர்களா? நான் முதலில் இந்த வெள்ளைக்காரர்களை ஒழித்துக்கட்டிவிட்டு, பின்பு உங்களை ஒரு வழி பண்ணுகிறேன் பார்!”

பிரிவினைகள் மத்தியிலும் ஒன்றுகூடி வருதல்

 இன ஒதுக்கீட்டால் நிறைய கஷ்டங்கள் வந்தாலும் தென் ஆப்பிரிக்காவில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் கடவுளை வணங்குவதற்காக ஒன்றுகூடி வருவதை நிறுத்தவே இல்லை. (எபிரெயர் 10:24, 25) இன ஒதுக்கீட்டு காலத்தில் நிறைய பேர் ஏழ்மைக்கு தள்ளப்பட்டார்கள். அதனால் சில சபைகளால் ஒரு ராஜ்ய மன்றத்தை கட்ட முடியவில்லை. b என்வர் என்ற ஒரு சகோதரர் என்ன சொல்கிறார் என்றால், “ரொம்ப மோசமான நிலைமையில் இருந்த இடத்தைத்தான் வாடகைக்கு எடுத்து பல வருஷங்களாக நாங்கள் சபை கூட்டங்களை நடத்தி வந்தோம். அதனால் சபை கூட்டம் நடத்த எங்களுடைய வீட்டை என் அப்பா கொடுத்துவிட்டார். வாரத்துக்கு இரண்டு தடவை எங்கள் வீட்டை ராஜ்ய மன்றமாக மாற்றிவிடுவோம். சில சமயங்களில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமானவர்கள் எங்கள் வீட்டுக்குள் நெருக்கி நெருக்கி உட்கார வேண்டியிருந்தது. நிறைய சமயங்களில் கூட்டம் முடிந்த பின்பு வந்திருந்தவர்களுக்கு சாப்பிடுவதற்கும் ஏதாவது கொடுத்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்தது.”

ஏப்ரல் 1950-ல் கருப்பினத்தையும் வெள்ளையினத்தையும் சேர்ந்த சாட்சிகள் ஒன்றுகூடி வந்தார்கள்

1980-ல் ஜோஹெனஸ்பர்க் ராண்ட் ஸ்டேடியத்தில் பல்வேறு இனத்தவர்கள் ஒன்றுகூடி வந்தார்கள்

 இன ஒதுக்கீட்டால் ஏற்பட்ட தடைகளை தகர்ப்பதற்கு சகோதரர்கள் புதுப் புது வழிகளை கண்டுபிடித்தார்கள். ஒரு சம்பவத்தைக் கவனியுங்கள். லிம்போபோ மாகாணத்தில் ஒரு வட்டார மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஒரு வெள்ளையின சகோதரர் பேச்சு கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த மாநாடு கருப்பின பகுதியில் நடக்கவிருந்தது, அங்கே போவதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்த இடத்துக்கு பக்கத்தில் ஒரு வெள்ளையினத்தவரின் பண்ணை இருந்தது. அதனால் அந்தச் சகோதரர் அந்தப் பண்ணை முதலாளியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார், பின்பு இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அது என்னவென்றால், பண்ணையின் வேலிக்கு பக்கத்தில் இருந்து அந்தச் சகோதரர் பேச்சை கொடுக்க வேண்டும். சகோதர சகோதரிகள் கருப்பினத்தவரின் பகுதியில் இருந்து அதை கேட்க வேண்டும். இப்படிச் செய்ததால் அந்த வட்டார மாநாடு சுமூகமாக நடந்து முடிந்தது.

அந்தந்த இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஊழியம்

 இன ஒதுக்கீட்டு முறையில் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது, அவர்கள் அங்கேதான் வாழ வேண்டியிருந்தது. அதனால் ஒரு சபையில் ஒரு இனத்தை சேர்ந்தவர்கள்தான் இருந்தார்கள். பிரஸ்தாபிகள் ஊழியம் செய்யும் விதத்தில்கூட ரொம்ப வளைந்துகொடுக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, நியமிக்கப்படாத பகுதியில் ஊழியம் செய்யும்போது சில சவால்களை அவர்கள் சந்தித்தார்கள். இன ஒதுக்கீட்டு முறையில் இந்தியர் என்ற பிரிவில் சேர்க்கப்பட்ட க்ருஷ் இப்படிச் சொல்கிறார்: “பொதுவாக சில இடங்களில் ராத்திரி தங்குவதற்கு வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதனால் நாங்கள் எங்களுடைய காரிலோ மரத்தடியிலோ தூங்க வேண்டியிருந்தது. காலையில் எழுந்த பின் பெட்ரோல் பங்கில் இருந்த கழிவறையில் குளிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் இந்த மாதிரி இடங்களில் கூட ‘வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டும்’ என்று எழுதி வைத்திருந்தார்கள். இந்த மாதிரி சூழ்நிலையிலும் கூட ஊழியத்தில் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் சகோதரர்கள் செய்தார்கள். ஒதுக்குப்புறமான இடத்தில் நிறைய ஆர்வமுள்ள ஆட்களைக் கண்டுபிடித்தார்கள். அதனால் ரொம்ப சந்தோஷமாக ஊழியம் செய்தார்கள்.”

1981-ல் ஒதுக்குப்புறமான பகுதிகளில் பல்வேறு இனத்தவர்கள் சேர்ந்து ஊழியம் செய்தார்கள்

 சவால்கள் மத்தியிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துகொண்டே போனது. 1948-ல் இன ஒதுக்கீட்டு முறை சட்டப்பூர்வமாக்கப்பட்ட சமயத்தில் தென் ஆப்பிரிக்காவில் 4,831 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். 1994-ல் அது முடிவுக்கு வந்தபோது அங்கே 58,729 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். இது இன்னும் அதிகமான வளர்ச்சிக்கு வழி திறந்தது. 2021-ல் தென் ஆப்பிரிக்காவில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 1,00,112 என்ற உச்சநிலையை எட்டியது.

வெறுப்பைக் கொட்டும் பூமியில் அன்பை பொழியும் மக்கள்

 இனப்பாகுபாடு திணிக்கப்பட்ட இந்த நாட்டில் எல்லா இனத்தவரிடமும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்க யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப பாடுபட்டார்கள். இதற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் பைபிள் நியமங்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள், அவர்களும் அதைப் பின்பற்றினார்கள். (அப்போஸ்தலர் 10:34, 35) இப்படி அந்த கலவர பூமியில் அன்பின் மலர்களாக பூத்துக் குலுங்கினார்கள்.—யோவான் 13:34, 35.

 1993-ல் தென் ஆப்பிரிக்காவில் யெகோவாவின் சாட்சிகள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். அதில் நிறைய இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி வந்தார்கள். வெளிநாட்டில் இருந்து மாநாட்டுக்கு வந்தவர்களை தென் ஆப்பிரிக்காவில் இருந்த சாட்சிகள் விமான நிலையத்துக்கு போய் கட்டிப்பிடித்து அன்போடு வரவேற்றார்கள். அதை பார்த்த ஒரு முக்கியமான அரசியல் தலைவர் இப்படிச் சொன்னார்: “இந்த மாதிரியான அன்பும் ஒற்றுமையும் எங்களுக்குள் இருந்திருந்தால் எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் எப்போதோ தீர்த்திருப்போம்!”

1955-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்திலிருந்து வந்த மில்டன் ஹென்ஷல் பல்வேறு இனத்தவர்கள் ஒன்றுகூடிவந்த ஒரு பெரிய கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்

1986-ல் தென் ஆப்பிரிக்கா கிளை அலுவலகத்தில் வெள்ளையின சகோதரர்களும் கருப்பின சகோதரர்களும் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்கிறார்கள்

1985-ல் நடந்த ஒரு மாநாட்டில், பல வருஷங்களாக சாட்சிகளாக இருக்கும் தாமஸ் ஸ்கோசானா (இடது) மற்றும் ஆல்ஃப்ரெட் ஸ்டேயன்பர்க்

1985-ல் நடந்த ஒரு மாநாட்டில், பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் உணவு பரிமாறுகிறார்கள்

2011-ல் ஜோஹெனஸ்பர்க், எஃப்என்பி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு பெரிய மாநாட்டில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த சாட்சிகள்

a இன ஒதுக்கீட்டு முறை என்பது கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்ட இனப்பாகுபாடு. இதன்படி ஒருவருடைய இனத்தைப் பொறுத்துதான் அவர் என்ன படிக்க வேண்டும்... எந்த வேலைக்கு போக வேண்டும்... எங்கே வாழ வேண்டும்... யாரை கல்யாணம் செய்ய வேண்டும்... என்பதெல்லாம் தீர்மானிக்கப்பட்டது. இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2007-ல், “இன ஒதுக்கீடு என்றால் என்ன?” என்ற தலைப்பில் பாருங்கள்.

b 1999-லிருந்து உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் கிடைக்கிற நன்கொடை, தேவை இருக்கிற இடத்தில் ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.