விழிப்புடன் இருங்கள்!
உலகப் போர் வெடிக்குமா?—பைபிள் என்ன சொல்கிறது?
கடந்த 30 வருஷங்களாக உலக நாடுகளுக்கு இடையில் இருக்கும் உறவுகள் சுமுகமாக இருக்கின்றன, முன்னேறிக்கொண்டும் இருக்கின்றன என்று நிறையப் பேர் நினைத்துவந்தார்கள். ஆனால், சமீபத்தில் நடந்துவரும் சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது நிலைமை மோசமாவது போலத்தான் தெரிகிறது.
“காசா போரினால் லெபனானின் எல்லைப்பகுதியில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பும் நடத்துகிற தாக்குதல்கள் மற்ற நாடுகளையும் பாதிக்குமோ என்று மக்கள் பயப்படுகிறார்கள்.”—ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை, ஜனவரி 6, 2024.
“ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் போராளிகளின் குழுக்கள் நிறைய இடங்களைத் தாக்கிவருகின்றன. ஈரான் மறுபடியும் அணு ஆயுதங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. அதோடு, ரஷ்யாவும் சீனாவும் இப்போது ஈரானோடு கூட்டு சேர்ந்துவிட்டன. இந்தக் காரணங்களினால் மேற்கத்திய நாடுகளில் பதற்றம் உருவாகியிருக்கிறது.”—தி நியு யார்க் டைம்ஸ், ஜனவரி 7, 2024.
“ரஷ்யா விடாமல் தாக்கிக்கொண்டே இருப்பதால் உக்ரைன் உருக்குலைந்துவருகிறது.”—யூஎன் நியூஸ், ஜனவரி 11, 2024.
“முன்னேறிவரும் சீனாவின் பொருளாதாரம் மற்றும் ராணுவ பலம்... தைவானில் அதிகரித்துவரும் தேசப்பற்று... சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருக்கும் பதட்டமான சூழ்நிலை... இதையெல்லாம் பார்க்கும்போது சீக்கிரத்தில் ஒரு போர் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.”—தி ஜப்பான் டைம்ஸ், ஜனவரி 9, 2024.
இன்று உலக நாடுகளுக்கு இடையில் இருக்கும் பதட்டமான சூழ்நிலையைப் பற்றி பைபிள் ஏதாவது சொல்கிறதா? மறுபடியும் ஒரு உலகப் போர் வெடிக்குமா?
இன்று நடப்பதை அன்றே பைபிள் சொல்லிவிட்டது
இன்று நடக்கும் எந்தவொரு குறிப்பிட்ட போரைப் பற்றியும் பைபிள் முன்னறிவிக்கவில்லை. ஆனால், நம் காலத்தில் நிறைய போர்கள் நடக்கும் என்றும், அவை “பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும்” என்றும் பைபிள் அன்றே சொல்லிவிட்டது.—வெளி. 6:4.
“முடிவு காலத்தில்” எதிரும் புதிருமாக இருக்கும் உலக வல்லரசுகள் ‘சண்டைக்கு நிற்கும்,’ அதாவது முதலிடத்தைப் பிடிக்கப் போட்டி போடும், என்று தானியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் போட்டியில், அந்த வல்லரசுகள் அவற்றின் ஒட்டுமொத்த ராணுவ பலத்தையும் காட்டும், அதற்காக ‘புதையல்களை,’ அதாவது குவித்து வைத்திருக்கும் பணத்தை, வாரி இறைக்கும்.—தானியேல் 11:40, 42, 43.
இனி வரப்போகும் ஒரு போர்
உலக நிலைமை ஒருநாள் நல்லபடியாக மாறும். ஆனால், அதற்கு முன்பு நிலைமை இன்னும் படுமோசமாகும் என்று பைபிள் சொல்கிறது. அதைப் பற்றி இயேசு பேசியபோது, “மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை” என்று சொன்னார். (மத்தேயு 24:21) அந்த ‘மிகுந்த உபத்திரவத்தின்’ முடிவில் அர்மகெதோன் என்ற போர் நடக்கும். அது ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்’ என்று பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 16:14, 16.
ஆனால், அர்மகெதோன் மனிதகுலத்தை அழித்துவிடாது, அதைக் காப்பாற்றும். படுபயங்கரமான போர்களுக்கெல்லாம் காரணமாக இருக்கும் மனித ஆட்சிகளைக் கடவுள் அர்மகெதோனில் ஒழித்துக்கட்டிவிடுவார். அர்மகெதோனுக்குப் பிறகு இந்த உலகத்தில் எப்படி நிரந்தரமான சமாதானம் வரும் என்று தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்: