உல்ரிச் ஸ்விங்லி—சத்தியத்தைத் தேடி
பைபிள் சொல்லித் தருவதும் தாங்கள் நம்புவதும் ஒன்று தானா என்று இன்றைக்கு நிறைய பேரால் எளிதாக ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆனால் 16-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த கதையே வேறு. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், அன்றைக்கு இருந்த நிறைய பேருக்கு தங்கள் சொந்த மொழியில் பைபிளை வாங்கவோ படிக்கவோ முடியவில்லை. அதனால், சர்ச் சொல்லிக் கொடுப்பதும் பைபிள் சொல்வதும் ஒன்று தானா என்று அவர்களால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, அன்றைக்கு இருந்த சர்ச் பாதிரியார்களாலும் இந்த விஷயத்தில் அவர்களுக்கு உதவ முடியவில்லை. ஹிஸ்ட்ரி ஆஃப் த கிறிஸ்டியன் சர்ச் என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: “சுவிட்சர்லாந்தில் இருந்த சர்ச், பொய் பித்தலாட்டம் நிறைந்ததாக இருந்தது. அங்கே இருந்த பாதிரியார்களுக்கு பைபிளைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் மூட நம்பிக்கையில் மூழ்கிப் போயிருந்தார்கள், ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தார்கள்.”
இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்தான் ஸ்விங்லி பைபிள் சத்தியத்தைத் தேட ஆரம்பித்தார். அவர் என்ன கண்டுபிடித்தார்? கற்றுக்கொண்டதை அவர் எப்படி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்? அவருடைய வாழ்க்கையில் இருந்தும், அவருடைய நம்பிக்கையில் இருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
ஸ்விங்லியின் தேடல் ஆரம்பம்
20 வயதை எட்டியவுடனே, ஸ்விங்லி ஒரு கத்தோலிக்க பாதிரியாராக ஆக வேண்டும் என்று தீர்மானித்தார். அந்தக் காலத்தில் ஒருவர் பாதிரியாராக ஆக வேண்டும் என்றால் மனித தத்துவங்கள்... சர்ச் பாரம்பரியங்கள்... “திருச்சபை தந்தைகளுடைய” புத்தகங்கள்... இவற்றைத்தான் படிக்க வேண்டியிருந்தது—பைபிளைத் தவிர!
ஸ்விங்லியின் பைபிள் சத்தியங்களுக்கான தேடல் எப்படி ஆரம்பமானது? சுவிட்சர்லாந்தில், பெஸல் என்ற இடத்தில் இருக்கிற பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தாமஸ் வைட்டன்பேக் என்பவருடைய சொற்பொழிவுகளை கேட்க ஆரம்பித்தார். அதில் பாவ மன்னிப்பு சீட்டுகளை விற்பனை செய்வது தப்பு என்று தாமஸ் கண்டனம் பண்ணிப் பேசியிருந்தார். a “இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக இறந்தார் என்பதை [வைட்டன்பேக்கிடமிருந்துதான் ஸ்விங்லி] கற்றுக்கொண்டார்” என்று ஸ்விங்லி–காட்ஸ் ஆர்ம்ட் பிராஃபெட் என்ற புத்தகத்தில் ஸ்விங்லியின் வாழ்க்கை சரிதையை எழுதியவர் சொன்னார். (1 பேதுரு 3:18) இயேசுவுடைய மீட்புப் பலியால் மட்டுமே நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று ஸ்விங்லி கற்றுக்கொண்ட பின்பு, பணத்தை கொடுத்து சர்ச் தலைவர்களிடமிருந்து பாவ மன்னிப்பை வாங்கிவிடலாம் என்ற போதனையைக் கண்டனம் செய்தார். (அப்போஸ்தலர் 8:20) இருந்தாலும், ஸ்விங்லி தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார். 22-ம் வயதில் கத்தோலிக்க பாதிரியாராக ஆனார்.
அவருடைய 20-களில், கிரேக்க மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஏனென்றால், அந்த மொழியில்தான் புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிற கிரேக்க வேதாகமம் எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, ஈராஸ்மஸ் என்பவர் எழுதிய புத்தகங்களையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தார். அப்படிப் படித்தபோது, இயேசு மட்டும்தான் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் இருக்கிற ஒரே மத்தியஸ்தர் என்பதை பைபிளில் இருந்து கற்றுக்கொண்டார். (1 தீமோத்தேயு 2:5) அதனால் புனிதர்கள் நமக்காக கடவுளிடம் பரிந்து பேசுகிறார்கள் என்ற கத்தோலிக்க போதனையின்மேல் அவருக்கு சந்தேகம் வந்தது.
சத்தியத்துக்கான அவருடைய தேடல் அவருடைய 30-களில் இன்னும் தீவிரமானது. இருந்தாலும், இத்தாலியை கைப்பற்றுவதற்காக ஐரோப்பா முழுவதும் நடந்த போர்களில் அவர் ராணுவ மதகுருவாக சேவை செய்தார். 1515-ல் மரிக்னானோ என்ற இடத்தில் நடந்த போரில் கத்தோலிக்கர்களே ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்களை கொன்று குவிப்பதைப் பார்த்தார். சில வருடங்கள் கழித்து கிரேக்க வேதாகமத்தில் இருக்கிற பெரும்பாலான வசனங்களை நகல் எடுத்தார். அவற்றை மனப்பாடம் கூட பண்ணினார். 1519-ல் அவர் சூரிச் என்ற இடத்தில் வாழ்ந்தார். அது அன்றைக்கு சுவிட்சர்லாந்தின் அரசியல் மையமாக இருந்தது. அங்கேதான் அவர் பைபிள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு போதனையையும் சர்ச்சும் போதிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார். ஆனால், அவருடைய இந்த முடிவை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் என்ன செய்தார்?
“இப்படிப்பட்ட ஒரு போதனையை இதுவரை நாங்கள் கேட்டதே இல்லை”
பைபிள் சத்தியத்தை கேட்ட உடனேயே, மதம் சொல்லிக்கொடுக்கிற பொய்களை மக்கள் ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள் என்று ஸ்விங்லி நினைத்தார். அதனால் சூரிச்சில் இருந்த மிக முக்கியமான கிராஸ்மன்ஸ்டர் சர்ச்சில் பாதிரியாராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அங்கே இருப்பவர்களுக்கு பிரசங்கிப்பதற்காக தைரியமாக ஒரு திட்டம் போட்டு அதை அறிவித்தார். அது என்னவென்றால், காலம் காலமாக பாதிரியார்கள் வாசித்து வருகிற லத்தீன் லெக்ஷனரியை அவர் இனிமேல் வாசிக்க மாட்டார். b அதற்குப் பதிலாக, பைபிளில் இருந்தே நேரடியாக பிரசங்கிப்பார். ஒவ்வொரு அதிகாரமாக ஒவ்வொரு வசனமாக ஒன்றுவிடாமல் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார். ஒரு வசனத்துக்கு சர்ச் தந்தைகள் கொடுத்த விளக்கத்தை சொல்வதற்குப் பதிலாக பைபிளில் இருந்தே விளக்கத்தைக் கொடுப்பார். அதை செய்வதற்காக, கஷ்டமாக இருக்கிற விஷயங்களை விளக்குவதற்கு சுலபமாக இருக்கிற வசனங்களை எடுத்துக் காட்டினார்.—2 தீமோத்தேயு 3:16.
ஸ்விங்லி தன்னுடைய பிரசங்கத்தில் பைபிள் மக்களுடைய வாழ்க்கைக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டினார். அவர் முக்கியமாக பைபிளில் இருக்கும் ஒழுக்கநெறிகளைப் பற்றி சொல்லிக்கொடுத்தார். அதுமட்டுமல்ல, இயேசுவின் அம்மா மரியாளை வணங்குவது... புனிதர்களிடம் ஜெபம் செய்வது... பாவ மன்னிப்பு சீட்டை விற்பது... பாதிரியார்கள் ஒழுக்கக்கேடாக நடப்பது... இவையெல்லாம் தவறு என்பதை தைரியமாக சொன்னார். அவருடைய பிரசங்கம் மக்களுடைய மனதை தொட்டதா? அவருடைய முதல் பிரசங்கத்தை கேட்ட உடனே சிலர் இப்படிச் சொன்னார்கள்: “இப்படிப்பட்ட ஒரு போதனையை இதுவரை நாங்கள் கேட்டதே இல்லை.” ஸ்விங்லி பேசியதைக் கேட்ட கத்தோலிக்கர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றி ஒரு சரித்திர ஆசிரியர் இப்படி எழுதினார்: ”சர்ச்சில் நடந்த பொய் பித்தலாட்டத்தையும், பாதிரியார்களுடைய கேடுகெட்ட வாழ்க்கையையும் பார்த்து வெறுத்துப் போய் சர்ச் பக்கமே தலை காட்டாமல் இருந்த நிறைய பேர் திரும்பவும் சர்ச்சுக்கு வர ஆரம்பித்தார்கள்.”
1522-ல் குருமார்கள் சூரிச்சில் இருந்த அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, சர்ச் போதனைகளுக்கு எதிராக மக்கள் நடக்காமல் பார்த்துக்கொண்டார்கள். சர்ச் சொல்லிக் கொடுத்ததற்கு எதிராக ஸ்விங்லி போதித்ததால் திருச்சபைக்கு எதிரான துரோகி என்று குற்றம்சாட்டப்பட்டார். தன்னுடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க மனம் இல்லாததால், கத்தோலிக்க பாதிரியார் என்ற பொறுப்பில் இருந்து அவரே விலகிவிட்டார்.
ஸ்விங்லி செய்த சீர்திருத்தங்கள்
ஸ்விங்லி ஒரு பாதிரியாராக இல்லையென்றாலும் கூட, பிரசங்கிப்பதை நிறுத்தவே இல்லை. தன்னுடைய நம்பிக்கைகளை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கடினமாக முயற்சி செய்துகொண்டே இருந்தார். இதனால் அவர் மக்கள் மத்தியில் ரொம்ப பிரபலமானவராக ஆகிவிட்டார். சூரிச்சில் இருந்த அரசியல்வாதிகள் நடுவிலும் அவருக்கு செல்வாக்கு வந்துவிட்டது. இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சூரிச்சில் மத சீர்திருத்தங்களை செய்வதற்கு அவர் முயற்சி செய்தார். உதாரணமாக, 1523-ல் சூரிச்சில் இருந்த நீதித்துறை அதிகாரிகள், ஸ்விங்லி சொன்னதை ஏற்றுக்கொண்டு பைபிளுக்கு எதிரான விஷயங்களை போதிப்பதற்கு தடை போட்டார்கள். அதோடு, 1524-ல் சிலை வழிபாட்டை சட்ட விரோதமாக ஆக்கும்படி அவர்களை ஸ்விங்லி தூண்டினார். நீதிபதிகள், உள்ளூர் போதகர்களையும் மக்களையும் சேர்த்துக்கொண்டு அங்கே இருந்த பீடங்கள், சிலைகள், உருவங்கள், மதச் சின்னங்கள், என எல்லாவற்றையும் அடித்து நொறுக்கினார்கள். ஸ்விங்லி— காட்ஸ் ஆர்ம்ட் பிராஃபெட் என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: “வைக்கிங் காலத்தில் கோவில்களைக் கொள்ளையடித்த சம்பவத்துக்குப் பின்பு, இதுபோன்ற ஒரு நாசத்தை மேற்கத்திய சர்ச்சுகள் இதுவரை பார்த்ததே இல்லை.” 1525-ல், அவர் சர்ச்சுக்கு சொந்தமான கட்டிடங்களை மருத்துவமனைகளாக மாற்றச் சொல்லியும் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் கல்யாணம் பண்ணுவதற்கு அனுமதி கொடுக்கச் சொல்லியும் அங்கே இருந்த அதிகாரிகளைத் தூண்டினார். அதுமட்டுமல்ல, சர்ச்சில் நற்கருணையை, அதாவது பூசையை, பிரமாண்டமாக நடத்துவதற்குப் பதிலாக பைபிள் சொல்கிற மாதிரி எளிமையாக நடத்த வேண்டும் என்றும் சொன்னார். (1 கொரிந்தியர் 11:23-25) ஸ்விங்லி எடுத்த இந்த முயற்சியால் சூரிச்சில் இருந்த மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து வேலை செய்தார்கள். சீர்திருத்தம் ஏற்படுவதற்கும், புது புராட்டஸ்டன்ட் மதம் உருவாவதற்குமான வழியை இது திறந்து வைத்தது.
ஸ்விங்லி செய்த மிக முக்கியமான வேலை பைபிளை மொழிபெயர்த்ததுதான். 1520-ல் சில நிபுணர்களின் ஒரு தொகுதியோடு சேர்ந்து அவர் வேலை செய்தார். அவர்கள் ரொம்ப எளிமையான முறையில் வேலை செய்தார்கள். மூல மொழியில் இருந்து ஒரு வசனத்தை வாசிப்பார்கள். அதோடு, அவர்கள் ரொம்பவும் நம்புகிற கிரேக்க செப்டுவஜன்ட், லத்தீன் வல்கேட் போன்ற மொழிபெயர்ப்புகளில் இருந்தும் அந்த வசனத்தை வாசிப்பார்கள். அதற்கு பின்பு அந்த வசனத்தின் அர்த்தத்தை கலந்து பேசுவார்கள், அதை எழுதி வைப்பார்கள். இப்படி கடவுளுடைய வார்த்தையை விளக்குவதற்கும், மொழிபெயர்ப்பதற்கும் அவர்கள் எடுத்த முயற்சிகளால் 1531-ல் சூரிச் பைபிள் ஒரு முழு தொகுதியாக வெளியிடப்பட்டது.
ஸ்விங்லி நிறைய நல்ல காரியங்களைச் செய்தார். ஆனால் அவர் மற்றவர்களுடைய கருத்துக்களை துளியும் மதிக்கவில்லை. தன்னுடைய கருத்துக்களில் ரொம்ப பிடிவாதமாகவும் இருந்தார். அதற்கு ஒரு உதாரணம், 1525-ல் அனபாப்டிஸ்டுகளுக்கு எதிராக நடந்த விசாரணையில் அவர் கலந்துகொண்டதுதான். ஏனென்றால், குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்ற இவருடைய கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. யாராவது குழந்தை ஞானஸ்நானத்தை தொடர்ந்து எதிர்த்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது கடுமையான தீர்ப்பாக இருந்தாலும் இதை எதிர்த்து அவர் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, தன்னுடைய சீர்திருத்த கருத்துக்களை பரப்புவதற்காக ராணுவ படையை பயன்படுத்தச் சொல்லி அரசியல் தலைவர்களை அவர் தூண்டினார். சுவிட்சர்லாந்தில் இன்னும் கத்தோலிக்க மதத்தை தீவிரமாக ஆதரித்தவர்கள் இவருடைய சீர்திருத்தத்தை எதிர்த்தார்கள். இதனால் ஒரு உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்தப் போரில் ஸ்விங்லியும் கலந்துகொண்டார். அதில் அவர் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வெறும் 47 வயதுதான்.
ஸ்விங்லி விட்டுச் சென்ற சொத்து
உல்ரிச் ஸ்விங்லி புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகளான மாட்டின் லூத்தர், ஜான் கால்வின் மாதிரி ரொம்ப பிரபலமானவராக இல்லை. என்றாலும் கூட சரித்திரத்தில் அவருக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. ரோமன் கத்தோலிக்க போதனைகள் தவறு என்று மாட்டின் லூத்தரை விட ரொம்ப தைரியமாக குரல் கொடுத்தவர் ஸ்விங்லிதான். அவருடைய முயற்சியால் கால்வினுடைய உபதேசங்களை ஏற்றுக்கொள்வது ஜனங்களுக்கு ரொம்ப சுலபமானது. அதனால் அவர் மூன்றாம் சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்விங்லியின் செயல்களால் நன்மையும் வந்திருக்கிறது, தீமையும் வந்திருக்கிறது. தன்னுடைய கருத்துக்களை பரப்புவதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் அரசியலும் போரும்தான். இப்படிச் செய்ததால் அவர் இயேசு கிறிஸ்துவுடைய அடிச்சுவடுகளை பின்பற்ற தவறிவிட்டார். ஏனென்றால், இயேசு கிறிஸ்து அரசியலில் ஈடுபட மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல, எதிரிகளை கொல்ல வேண்டும் என்றல்ல, அவர்களை நேசிக்க வேண்டும் என்றுதான் தன்னுடைய சீஷர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.—மத்தேயு 5:43, 44; யோவான் 6:14, 15.
இருந்தாலும், ஸ்விங்லி ஒரு திறமையான பைபிள் மாணவர் என்றுதான் சொல்ல வேண்டும். தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். நிறைய பைபிள் சத்தியங்களைக் கண்டுபிடித்ததோடு அப்படிக் கண்டுபிடிக்க மற்றவர்களுக்கும் உதவி செய்தார்.
a பாவ மன்னிப்பு சீட்டுகள் சர்ச் தலைவர்களால் வழங்கப்பட்டன. மக்கள் இறந்த பிறகு உத்தரிக்கும் ஸ்தலத்தில் அனுபவிக்கப்போகிற தண்டனையைக் குறைக்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் அவை வழங்கப்பட்டன.
b லெக்ஷனரி என்பது கத்தோலிக்க சர்ச்சில் வருஷம் முழுவதும் வாசிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பைபிள் வசனங்களைக் கொண்ட ஒரு புத்தகம்.