Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Pawel Gluza/500Px Plus/Getty Images

விழிப்புடன் இருங்கள்!

கடந்த 50 ஆண்டுகளில் 73% காட்டு விலங்குகள் அழிப்பு—பைபிள் என்ன சொல்கிறது?

கடந்த 50 ஆண்டுகளில் 73% காட்டு விலங்குகள் அழிப்பு—பைபிள் என்ன சொல்கிறது?

 அக்டோபர் 9, 2024-ல் உலக வன உயிரினங்களுக்கான நிதியம், மனிதர்களின் நடவடிக்கையால் காட்டு விலங்குகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “கடந்த 50 ஆண்டுகளில் (1970-2020), காட்டு விலங்குகளின் எண்ணிக்கை 73% குறைந்துள்ளது” என்று அது தெரிவித்தது. அதோடு, அந்த அறிக்கை பின்வரும் எச்சரிப்பையும் கொடுத்தது: “அடுத்த ஐந்து வருடங்களில் நடக்கப்போகிற விஷயங்களைப் பொறுத்துதான் பூமியின் எதிர்காலமே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.”

 இப்படிப்பட்ட அறிக்கைகள் பலருக்கு கவலையை அளித்துள்ளன. அழகு கொட்டிக்கிடக்கும் இந்தப் பூமியை நாம் ரொம்ப நேசிக்கிறோம், அதிலிருக்கும் உயிரினங்கள் கஷ்டப்படுவதைப் பார்க்க நாம் ஒருபோதும் விரும்புவதில்லை. ஏனென்றால், கடவுள் நம்மைப் படைத்தபோதே, விலங்குகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை நம்மிடம் கொடுத்திருக்கிறார்.—ஆதியாகமம் 1:27, 28; நீதிமொழிகள் 12:10.

 ‘பூமியில் இருக்கும் வன உயிரினங்களை பாதுகாக்க நம்மால் முடியுமா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.

எதிர்கால நம்பிக்கை

 நாம் என்னதான் தலைகீழாக நின்றாலும், காட்டு விலங்குகளை நம்மால் காப்பாற்ற முடியாது, கடவுள் ஒருவரால் மட்டும்தான் அவற்றை பாதுகாக்க முடியும். ‘பூமியை நாசமாக்குகிறவர்களை [கடவுள்] நாசமாக்குவார்’ என்று பைபிள் முன்கூட்டியே வெளிப்படுத்துதல் 11:18-ல் சொன்னது. இந்த வசனம் இரண்டு விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது:

  1.  1. மனிதர்கள் பூமியை முற்றிலும் நாசமாக்க கடவுள் விடவே மாட்டார்.

  2.  2. கடவுள் சீக்கிரம் நடவடிக்கை எடுப்பார். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், எப்போதையும்விட இப்போதுதான் மனிதர்களால் விலங்குகளுக்கு ஆபத்து அதிகமாக இருக்கிறது.

 இந்தப் பிரச்சினையை கடவுள் எப்படி சரிசெய்வார்? அவருடைய பரலோக அரசாங்கத்தைப் பயன்படுத்தி இந்த முழு பூமியையும் அவர் ஆட்சி செய்யப்போகிறார். (மத்தேயு 6:10) பூமியின் வன விலங்குகளை பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையான கல்வியையும் பயிற்சியையும் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு இந்த அரசாங்கம் கொடுக்கும்.—ஏசாயா 11:9.