குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?
பொருளாதார நெருக்கடியால் குறைந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை ஓட்டுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? பெருந்தொற்று, இயற்கைப் பேரழிவு, கலவரம், போர் ஆகியவற்றால் கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விடலாம். குடும்பத்துக்குத் தேவையான வருமானம் திடீரென்று இல்லாமல் போனால் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாது. ஆனால், பைபிள் கொடுக்கிற ஞானமான ஆலோசனைகளின்படி நடந்தால் கொஞ்ச வருமானத்தை வைத்து உங்களால் வாழ்க்கையை ஓட்ட முடியும்.
1. புது சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
பைபிள் ஆலோசனை: “நிறைவாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, . . . திருப்தியோடு இருப்பதற்கான ரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்.”—பிலிப்பியர் 4:12.
முன்பு இருந்த அளவுக்கு உங்கள் கையில் காசு இல்லை என்றாலும், இப்போது உங்களுக்குக் கிடைக்கிற வருமானத்தை வைத்து குடும்பத்தை ஓட்ட உங்களால் கற்றுக்கொள்ள முடியும். எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு எந்தளவுக்கு சீக்கிரம் உங்களை மாற்றிக்கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்களாலும் உங்களுடைய குடும்பத்தாராலும் உங்களுடைய சூழ்நிலையை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்.
அரசாங்கமோ வேறு ஏதாவது நிறுவனங்களோ செய்கிற பண உதவி அல்லது பொருள் உதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால், அதை வாங்குவதற்கு உடனடியாக முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், அந்த மாதிரி சலுகைகள் கொஞ்ச நாளுக்குத்தான் இருக்கும்.
2. குடும்பமாகச் சேர்ந்து திட்டம் போடுங்கள்.
பைபிள் ஆலோசனை: “கலந்துபேசாமல் இருந்தால் திட்டங்கள் தோல்வியடையும். ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.”—நீதிமொழிகள் 15:22.
உங்களுடைய சூழ்நிலையைப் பற்றி உங்கள் துணையிடமும் பிள்ளைகளிடமும் பேசுங்கள். இப்படி மனசுவிட்டு பேசும்போது அவர்களால் குடும்பச் சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும், தேவையான மாற்றங்களைச் செய்யும்போது அதை ஏற்றுக்கொள்ளவும் முடியும். பணம், பொருளை வீணடிக்காமல் இருக்க குடும்பமாகச் சேர்ந்து உழைத்தீர்கள் என்றால் உங்களிடம் இருக்கிற பணத்தை இன்னும் நன்றாகப் பயன்படுத்த முடியும்.
3. பட்ஜெட் போடுங்கள்.
பைபிள் ஆலோசனை: ‘செலவைக் கணக்கு பாருங்கள்.’—லூக்கா 14:28.
குறைந்த வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டும் சூழ்நிலை உங்களுக்கு வரும்போது உங்கள் காசெல்லாம் எதில் கரைகிறது என்று யோசித்துப்பாருங்கள். இதுவரைக்கும் நீங்கள் அந்த மாதிரி யோசிக்கவில்லை என்றாலும், இனிமேல் அப்படிச் செய்வது ரொம்ப முக்கியம். இனி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம் வரும் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மாதா மாதம் எவ்வளவு செலவுகள் இருக்கிறது என்பதையும் எழுதுங்கள். சில வீண் செலவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தால் அதையும் எழுதுங்கள். எதிர்பாராத சம்பவங்களுக்காகவும், அவசரத் தேவைகளுக்காகவும் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேர்த்துவைப்பது நல்லது.
டிப்ஸ்: செலவைக் கணக்கு போட்டுப் பார்க்கும்போது சின்ன சின்ன பொருள்களை வாங்குவதற்காக நீங்கள் செய்கிற செலவுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சின்ன பொருள்களை வாங்குவதற்கு மொத்தம் எவ்வளவு செலவு ஆகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கே ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். உதாரணத்துக்கு, செலவைக் கணக்கு போட்டுப் பார்த்ததற்குப் பிறகுதான், ஒவ்வொரு வருஷமும் சூயிங்கம் வாங்குவதற்காகவே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வதை ஒருவர் புரிந்துகொண்டார்.
4. முக்கியமான செலவுகள் எவை என முடிவுசெய்து, அதற்கு ஏற்றபடி மாற்றங்களைச் செய்யுங்கள்.
பைபிள் ஆலோசனை: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”—பிலிப்பியர் 1:10.
உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது, எவ்வளவு செலவு இருக்கிறது என்று கணக்கு போடுங்கள். இப்போது கிடைக்கிற வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டுவதற்கு எந்தெந்த செலவுகளைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்று யோசியுங்கள். உதாரணத்துக்கு...
போக்குவரத்து. உங்களிடம் இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் இருந்தால், ஒரு வாகனத்தை விற்க முடியுமா? ஆடம்பரமான கார் அல்லது பைக் இருந்தால் அதை மாற்றிவிட்டு அதிக செலவு வைக்காத ஒரு வாகனத்தை வாங்க முடியுமா? ஒருவேளை, வாகனம் எதுவும் வைத்துக்கொள்ளாமல் பொது போக்குவரத்தை அல்லது சைக்கிளைப் பயன்படுத்த முடியுமா?
பொழுதுபோக்கு. டிஷ் டிவி, கேபிள் கனெக்ஷன் இந்த மாதிரி சந்தா கட்டிப் பார்க்கிற பொழுதுபோக்குகளைக் கொஞ்ச நாளைக்காவது உங்களால் ரத்து செய்ய முடியுமா? குறைந்த விலையில் ஏதாவது சேவைகள் கிடைக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியுமா? உதாரணத்துக்கு உள்ளூரில் இருக்கிற லைப்ரரி, படங்களையும், இ-புத்தகங்களையும், ஆடியோ புத்தகங்களையும் விலை இல்லாமல் கடனாகக் கொடுக்கலாம்.
தண்ணீர், மின்சாரம் போன்ற செலவுகள். தண்ணீர், மின்சாரம், பெட்ரோல், கேஸ் இவற்றுக்கான செலவுகளைக் குறைக்க முடியுமா என்று குடும்பமாக உட்கார்ந்து பேசுங்கள். லைட்டை அணைப்பது... குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ தண்ணீரை அளவாகப் பயன்படுத்துவது... இந்த விஷயங்களில் எல்லாம் எவ்வளவு மிச்சம் பண்ண முடியும் என்று யோசிக்கலாம். ஆனால், இந்த மாதிரி பழக்கங்கள் நிறைய பணத்தை மிச்சப்படுத்த உங்களுக்கு உதவும்.
உணவு. ஓட்டலில் சாப்பிடுவதைத் தவிருங்கள். அதற்குப் பதிலாக வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். என்ன சமைக்கலாம் என்று முன்கூட்டியே திட்டம் போடுங்கள். முடிந்தபோதெல்லாம் பொருள்களை மொத்தமாக வாங்கி சமைத்துவிடுங்கள். மீதி இருந்தால் அதை சூடாக்கி திரும்பவும் பயன்படுத்துங்கள். கடைக்கு போவதற்கு முன்னால் என்னென்ன பொருள்களை வாங்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் தயாரியுங்கள். அப்படிச் செய்யும்போது கண்ணில் படுவதையெல்லாம் வாங்க மாட்டீர்கள். அந்தந்த பருவத்தில் கிடைக்கிற உணவுப்பொருள்களை வாங்குங்கள். அப்படி வாங்கும்போது குறைந்த விலையில் அந்தப் பொருள்கள் கிடைக்கும். நொறுக்குத்தீனி வாங்குவதைத் தவிருங்கள். உங்கள் வீட்டிலேயே ஒரு காய்கறி தோட்டம் போட முடியுமா என்று யோசியுங்கள்.
துணிமணி. இப்போது இருக்கிற ஃபேஷனுக்கு தகுந்த மாதிரி துணிகளை வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுடைய டிரெஸ் வெளுத்துப்போனால் அல்லது கிழிந்துபோனால் மட்டும் புதுத் துணியை வாங்குங்கள். தள்ளுபடியில் துணிமணிகள் கிடைக்கிறதா என்று பாருங்கள். ஒருவேளை பழைய துணிமணிகளை விற்கிற கடைகளிலோ செகன்ட்ஹேன்ட் ஸ்டோர்களிலோ நல்ல துணிமணிகள் கிடைக்கிறதா என்று பாருங்கள். வெயில் காலமாக இருந்தால் உங்கள் துணிகளை வெயிலில் காயப் போடலாம். அப்படிச் செய்யும்போது டிரையர் மெஷினைப் பயன்படுத்துவதால் ஆகிற செலவை மிச்சப்படுத்த முடியும்.
வாங்க நினைக்கிற பொருள்கள். ஒரு பொருளை வாங்குவதற்கு முன் ‘இத என்னால வாங்க முடியுமா? இந்த பொருள் உண்மைலேயே எனக்கு தேவையா?’ என்று யோசித்துப்பாருங்கள். வீட்டில் பயன்படுத்துகிற எலெக்ட்ரிக் அல்லது எலெக்ட்ரானிக் சாதனங்களையோ, நாம் பயன்படுத்துகிற வாகனத்தையோ மாற்றிவிட்டு புதிதாக வந்திருக்கிற பொருள்களை வாங்குவதைக் கொஞ்ச நாளைக்குத் தள்ளிப்போட முடியுமா என்று யோசியுங்கள். அல்லது உங்களுக்குத் தேவையில்லாத பொருள்களை... நீங்கள் பயன்படுத்தாத பொருள்களை... விற்க முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். இப்படிச் செய்யும்போது உங்களால் எளிமையாகவும் வாழ முடியும், வருமானமும் உங்கள் கையில் நிற்கும்.
டிப்ஸ்: உங்களுடைய வருமானம் திடீரென்று குறையும்போது, உடம்புக்குக் கெடுதல் உண்டாக்குகிற... நிறைய செலவு வைக்கிற... மோசமான பழக்கங்களை விடுவதற்கு அதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு புகையிலையைப் பயன்படுத்துவது, சூதாடுவது, குடிப்பது போன்ற பழக்கங்களை விடுவதற்கு அது நல்ல வாய்ப்பாக இருக்கும். இப்படிச் செய்யும்போது வருமானமும் உங்கள் கையில் நிற்கும், ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.
5. கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
பைபிள் ஆலோசனை: “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத்தேயு 5:3.
பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதைப் பற்றி பைபிள் ஒரு நல்ல ஆலோசனை கொடுக்கிறது. “பணம் பாதுகாப்பு தருவதுபோல் ஞானமும் பாதுகாப்பு தரும். ஆனால், பணத்தைவிட சிறந்தது அறிவும் ஞானமும்தான். ஏனென்றால், அவை ஒருவருடைய உயிரையே காப்பாற்றும்.” (பிரசங்கி 7:12) இந்த ஞானம் பைபிளிலிருந்து கிடைக்கிறது. பைபிளில் இருக்கிற ஆலோசனைகள் பணத்தைப் பற்றி அளவுக்கு அதிகமாகக் கவலைப்படாமல் இருப்பதற்கு நிறைய பேருக்கு உதவி செய்திருக்கின்றன.—மத்தேயு 6:31, 32.