சுற்றுச்சூழல் பிரச்சினைகள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?
”வானிலை மாற்றத்தினால் எல்லா இடங்களிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. மக்களும் எல்லா உயிரினங்களும்கூட அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வானிலை மாற்றத்தினால் இப்போதெல்லாம் புயல்களும் பயங்கரமான அழிவுகளைத்தான் கொண்டுவருகின்றன. அதனால் உலகம் முழுவதும் நிறையப் பேர் அவர்களுடைய வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பிரச்சினையினால் கடல்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடல்நீர் ரொம்ப சூடாகிக்கொண்டிருப்பதால் அதில் வாழும் நிறைய உயிரினங்கள்கூட கிட்டத்தட்ட அழியும் நிலைமையில் இருக்கின்றன.”—இங்கர் ஆனர்சன், ஐக்கிய நாடுகளின் இணை செயலாளர் மற்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் நிகழ்ச்சியின் நிர்வாக இயக்குனர், ஜூலை 25, 2023.
முழு உலகத்தையும் பாதிக்கிற இந்தப் பிரச்சினைகளை, எல்லா அரசாங்கங்களும் ஒன்றுசேர்ந்து தீர்த்துவிட முடியுமா? இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வை அவர்களால் கொண்டுவர முடியுமா?
உலகத்தில் இருக்கிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை, ஒரு அரசாங்கத்தால் தீர்க்க முடியும், தீர்க்கவும் போகிறது என்று பைபிள் சொல்கிறது. அந்த அரசாங்கத்தை ‘பரலோகத்தின் கடவுள் ஏற்படுத்துவார்.’ அந்த அரசாங்கம் பூமி முழுவதையும் ஆட்சி செய்யும். பூமியிலிருக்கிற எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்யும். (தானியேல் 2:44) அந்த அரசாங்கம் ஆட்சி செய்யும்போது மக்களால் இந்தப் பூமிக்கோ மற்றவர்களுக்கோ “எந்த ஆபத்தும் வராது. எந்தக் கேடும் வராது.”—ஏசாயா 11:9.