இனிவரும் காலம் இனிய காலம்
இனிவரும் காலம் இனிய காலமாக மாறுமா? இன்றைக்கு இருக்கிற பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கஷ்டங்களுக்குமேல் கஷ்டங்கள் வந்தாலும் எல்லாமே சரியாகும் என்று நிறைய பேர் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி நினைப்பது கனவாக போய்விடுமா அல்லது உண்மையா நடக்குமா? கண்டிப்பாக நடக்கும்! இனிவரும் காலம் இனிய காலமாக மாறும் என்று பைபிள் உறுதியான நம்பிக்கையைக் கொடுக்கிறது.
பைபிள் தருகிற நம்பிக்கை என்ன?
இன்றைக்கு எல்லா மனிதர்களுமே தாங்க முடியாத அளவுக்கு பிரச்சினைகளால் தவிக்கிறார்கள் என்று பைபிள் ஒத்துக்கொள்கிறது. ஆனால் இந்தப் பிரச்சினைகளோடு நாம் என்றென்றும் போராடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது. சில வாக்குறுதிகளைப் பார்க்கலாம்.
பிரச்சினை: வீடில்லாமல் அவதி
பைபிள் என்ன சொல்கிறது: “ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள்.”—ஏசாயா 65:21.
எதிர்கால நம்பிக்கை: எல்லாருமே சொந்த வீட்டில் சந்தோஷமாக இருப்பார்கள்.
பிரச்சினை: வேலையில்லா திண்டாட்டம், வறுமை
பைபிள் என்ன சொல்கிறது: “நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.”—ஏசாயா 65:22.
எதிர்கால நம்பிக்கை: திருப்தி அளிக்கிற... மனதுக்குப் பிடித்த... பலன்களை அள்ளித் தருகிற... வேலை எல்லாருக்கும் இருக்கும்.
பிரச்சினை: அநீதி
பைபிள் என்ன சொல்கிறது: “அதிபதிகளும் நியாயமாக ஆட்சி செய்வார்கள்.”—ஏசாயா 32:1.
எதிர்கால நம்பிக்கை: இனம், அந்தஸ்து, பணம் இவற்றை வைத்து யாரும் யாரையுமே அநியாயமாக நடத்த மாட்டார்கள். அதோடு, யாருமே ஏழைகளாகவும் இருக்க மாட்டார்கள்.
பிரச்சினை: ஊட்டச்சத்து குறைவு, பசி பட்டினி
பைபிள் என்ன சொல்கிறது: “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16.
எதிர்கால நம்பிக்கை: எல்லாருக்குமே ஊட்டச்சத்துள்ள உணவு ஏராளமாக கிடைக்கும். யாருமே பசியோடு தூங்க மாட்டார்கள், ஊட்டச்சத்து குறைவால் அவதிப்பட மாட்டார்கள்
பிரச்சினை: குற்றச்செயல், வன்முறை
பைபிள் என்ன சொல்கிறது: “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”—மீகா 4:4.
எதிர்கால நம்பிக்கை: நாம் எல்லாரும் பாதுகாப்பாக இருப்போம். ஏனென்றால், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”—சங்கீதம் 37:10, 29.
பிரச்சினை: போர்
பைபிள் என்ன சொல்கிறது: “ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.”—ஏசாயா 2:4.
எதிர்கால நம்பிக்கை: பூமி முழுவதும் சமாதானத்தால் நிறைந்திருக்கும். (சங்கீதம் 72:7) நம்முடைய அன்பானவர்கள் போரால் இறந்துவிட்டார்கள் என்று நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. அதோடு, போருக்குப் பயந்து அகதிகளாக போக வேண்டிய அவசியமும் இருக்காது.
பிரச்சினை: வியாதி
பைபிள் என்ன சொல்கிறது: “’எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”—ஏசாயா 33:24.
எதிர்கால நம்பிக்கை: உடல் குறைபாடுகளாலோ அல்லது உடம்பு முடியாமலோ நாம் யாருமே கஷ்டப்பட மாட்டோம். (ஏசாயா 35:5, 6) அதோடு, “இனிமேல் மரணம் இருக்காது” என்றும் பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:4.
பிரச்சினை: சுற்றுச்சூழல் கேடு
பைபிள் என்ன சொல்கிறது: “வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும். பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.”—ஏசாயா 35:1.
எதிர்கால நம்பிக்கை: கடவுள் ஆரம்பத்தில் ஆசைப்பட்டபடி இந்த முழு பூமியுமே அழகான ஒரு பூஞ்சோலையாக மாறும், மனிதர்கள் அதில் குடியிருப்பார்கள்.—ஆதியாகமம் 2:15; ஏசாயா 45:18.
பைபிள் தருகிற நம்பிக்கை வெறும் கற்பனையா அல்லது நிஜமாகவே நடக்குமா?
ஒருவேளை இது கற்பனையில்தான் நடக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்வதை நீங்கள் ஆழமாகப் படிப்பதற்கு நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். ஏனென்றால், பைபிள் சொல்கிற வாக்குறுதிகள் ஏதோ மனிதர்கள் கொடுக்கிற வாக்குறுதிகளோ அல்லது முன்கணிப்புகளோ இல்லை. பைபிளில் இருக்கிற வாக்குறுதிகள் கடவுளே சொன்னவை. கடவுளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நாம் பார்க்கலாமா?
கடவுள் நம்பகமானவர். கடவுளைப் பற்றி பைபிள் சொல்லும்போது, அவரை “பொய் சொல்ல முடியாத கடவுள்” என்று சொல்கிறது. (தீத்து 1:3) அதோடு, எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்கிற திறமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது. (ஏசாயா 46:10) கடவுள் முன்கூட்டியே சொன்ன விஷயங்கள் அப்படியே நடந்திருக்கின்றன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் பைபிளில் இருக்கின்றன. அதைப் பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்துகொள்ள பைபிளை நம்பலாமா? என்ற வீடியோவைப் பாருங்கள்.
நம்முடைய பிரச்சினைகளை சரிசெய்கிற சக்தி கடவுளுக்கு இருக்கிறது. ‘தனக்குப் பிரியமான எல்லாவற்றையும் செய்வதற்கான’ சக்தி கடவுளுக்கு இருப்பதாக பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 135:5, 6) வேறு வார்த்தைகளில் சொன்னால், தான் நினைத்ததை நிறைவேற்றும்போது கடவுளை தடுத்து நிறுத்த யாராலுமே முடியாது. அதோடு, அவர் நம்மை ரொம்பவும் நேசிக்கிறார், அதனால் நமக்கு உதவ ஆசைப்படுகிறார்.—யோவான் 3:16.
‘கடவுள் நமக்கு உதவ ஆசைப்படுகிறார், அதற்கான சக்தியும் அவருக்கு இருக்கிறது என்றால் நாம் ஏன் இன்னமும் பிரச்சினைகளால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்?’ என்று நீங்கள் யோசித்தால் அது நியாயம்தான். அதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்? என்ற வீடியோவைப் பாருங்கள்.
இந்த நம்பிக்கை எப்படி நிஜமாகும்?
கடவுள் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பரலோகத்தில் இருக்கிற ஒரு அரசாங்கத்தைப் பயன்படுத்துவார். அதற்கு இயேசு கிறிஸ்துவை ராஜாவாக நியமித்திருக்கிறார். பூமியையும் அதிலிருக்கிற மக்களையும் நல்லபடியாக பார்த்துக்கொள்ளும் அதிகாரத்தையும் அவருக்குத்தான் கொடுத்திருக்கிறார். இதை இயேசு பூமியிலிருக்கும்போது செய்தும் காட்டியிருக்கிறார், எப்படியென்றால் வியாதியாக இருப்பவர்களை சுகப்படுத்தினார்... பசியில் வாடுபவர்களுக்கு உணவு கொடுத்தார்... இயற்கையைக் கட்டுப்படுத்தினார்... அதோடு, இறந்தவர்களையும் உயிர்த்தெழுப்பினார். (மாற்கு 4:39; 6:41-44; லூக்கா 4:40; யோவான் 11:43, 44) கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆகும்போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதை பூமியில் இருந்தபோதே செய்து காட்டினார்.
கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுக்கும் என்பதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற வீடியோவைப் பாருங்கள்.
இந்த நம்பிக்கை எப்போது நிஜமாகும்?
சீக்கிரத்தில்! அதை எப்படி உறுதியாக சொல்ல முடியும்? கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை பைபிள் முன்கூட்டியே முன்னறிவித்தது. (லூக்கா 21:10, 11) இப்போது உலகத்தில் நடக்கிற சம்பவங்கள் பைபிள் முன்னறிவித்ததோடு அப்படியே ஒத்துப்போகிறது.
இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள “கடவுளுடைய அரசாங்கம் பூமியை எப்போது ஆட்சி செய்யும்?” என்ற கட்டுரையைப் படியுங்கள்.
பைபிள் கொடுக்கிற நம்பிக்கை இன்றைக்கு நமக்கு உதவி செய்யுமா?
பைபிள் தருகிற நம்பிக்கை, “நம் உயிருக்கு நங்கூரம் போன்றது” என்று ஒரு பைபிள் எழுத்தாளர் சொன்னார். (எபிரெயர் 6:19) கடும் புயல் அடிக்கும்போது ஒரு நங்கூரம் எப்படி கப்பலை உறுதியாக நிற்க வைக்கிறதோ, அதே மாதிரி எதிர்காலத்தைப் பற்றி பைபிள் கொடுக்கிற நம்பிக்கையும் புயல் போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க இப்போது நமக்கு உதவுகிறது. இந்த நம்பிக்கை இருப்பதால்தான் இப்போதும் நம்மால் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடிகிறது, தெளிவாகவும் யோசிக்க முடிகிறது, அதோடு ஆரோக்கியமாகவும் இருக்க முடிகிறது.—1 தெசலோனிக்கேயர் 5:8.