Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மதம் என்ற முகமூடியில் மறைந்திருக்கும் வியாபாரம்

மதம் என்ற முகமூடியில் மறைந்திருக்கும் வியாபாரம்

 பெரும்பாலான மதங்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறதா அல்லது கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவி செய்கிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நிறைய மதங்கள் தாங்கள் செய்கிற சேவையை விளம்பரப்படுத்துகின்றன... அதற்காக பணம் வசூலிக்கின்றன... பூஜைப் பொருள்களை விற்றும் காசு பார்க்கின்றன. அவர்களுடைய மதத் தலைவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள், ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அதற்கு சில உதாரணங்களை பார்க்கலாம்:

  •   ஒரு கத்தோலிக்க பிஷப் 13 வருஷங்களாக சர்ச் பணத்தில் கிட்டத்தட்ட 150 தடவை தனியார் ஜெட் விமானங்களில் பயணம் செய்திருக்கிறார். சுமார் 200 தடவை சொகுசுக் கார்களில் பயணம் பண்ணியிருக்கிறார். சர்ச் அவருக்கு கொடுத்த வீட்டை புதுப்பிக்க கிட்டத்தட்ட 30 கோடி செலவு பண்ணியிருக்கிறார் என்று ஒரு அறிக்கை சொல்கிறது.

  •   ஆப்பிரிக்க நாடு ஒன்றில் ஒரு மத போதகர் நடத்துகிற கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கானவர்கள் தவறாமல் வருகிறார்கள். அவருடைய சர்ச் கட்டிடத்தில் புனித எண்ணெய், அவருடைய படம் போட்ட டவல்கள், டீ-ஷர்ட்டுகள் போன்ற நிறைய பொருள்கள் விற்கப்படுகின்றன. அவருடைய கூட்டத்துக்கு வருகிறவர்கள் பரம ஏழைகள், ஆனால் அவரோ கொழுத்த பணக்காரர்!

  •   சீனாவில், புத்த மதத்தின் நான்கு புனித மலைகளில் இரண்டு மலைகளை பங்கு நிறுவனங்களின் பட்டியலில் இருக்கிற கம்பெனிகளாகவே ஆக்கியிருக்கிறார்கள். அதில் பிரபலமாக இருக்கும் ஷாவோலின் கோயிலில் நிறைய வியாபார பிராஜெக்டுகள் நடக்கின்றன. அதனால்தான் அங்கே இருக்கிற சன்னியாசிகளுடைய தலைவர் “சி.ஈ.ஓ மடாதிபதி” என்று அழைக்கப்படுகிறார்.

  •   இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கிற கம்பெனிகளில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிற விஷயம், ஜோதிட ஆலோசகர்களை நியமிப்பதுதான். இவர்கள் அங்கே வேலை செய்கிறவர்களுக்கு ஆன்மீக ஆலோசனை கொடுக்கிறார்கள். புதுப் புது மத சடங்குகளை சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது.

 வியாபாரமே குறியாக இருக்கிற மதங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மதம் என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு பணம் சம்பாதிக்கும் ஆட்களைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

மதத்தையும் வியாபாரத்தையும் கலப்பதைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்?

 மதத்தையும் வியாபாரத்தையும் கலப்பதை கடவுள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். கடந்த காலத்தில் குருமார்கள் அவருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு ‘பணத்துக்காகப் போதிப்பதை’ பார்த்தபோது கடவுள் ரொம்ப கோபப்பட்டார் என்று பைபிள் சொல்கிறது. (மீகா 3:11) பேராசை பிடித்த வியாபாரிகள் கடவுளுடைய ஆலயத்தை “கொள்ளைக்காரர்களின் குகையைப் போல” ஆக்கியிருந்தார்கள். (எரேமியா 7:11) அதனால், அவர்களுடைய செயல்களை கடவுள் கண்டனம் செய்தார்.

 மதம் என்ற போர்வையில் லாபம் சம்பாதித்தவர்களை கடவுள் எப்படி வெறுத்தாரோ அதே மாதிரி இயேசுவும் அவர்களை வெறுத்தார். அவருடைய காலத்தில் மதத் தலைவர்கள், பேராசைப் பிடித்த வியாபாரிகளால் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். அதனால்தான் எருசலேம் ஆலயத்துக்குள் வியாபாரம் பண்ண அவர்களை அனுமதித்தார்கள். கடவுளை உண்மையாக வணங்க வந்தவர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அதனால்தான், நேர்மை இல்லாத வியாபாரிகளை ஆலயத்தில் இருந்து இயேசு தைரியமாக துரத்தி அடித்துவிட்டு இப்படிச் சொன்னார்: “என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!”—யோவான் 2:14-16.

 கடவுள் யோசிக்கிற மாதிரியே அவரும் யோசிக்கிறார் என்பதை இயேசு செய்த ஊழியத்தில் இருந்து தெரிந்துகொள்கிறோம். (யோவான் 8:28, 29) கடவுளைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பதற்காக அவர் யாரிடமும் காசு வாங்கியது கிடையாது. அற்புதங்கள் செய்வதற்காக அதாவது, பசியாக இருக்கிறவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கோ அல்லது வியாதிப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கோ அல்லது இறந்தவர்களை உயிரோடு எழுப்புவதற்கோ, அவர் யாரிடமும் காசு கேட்கவில்லை. ஊழியத்தின் மூலமாக பணக்காரராக ஆகிவிடலாம் என்று இயேசு நினைக்கவே இல்லை. ஏன், அவரிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை!—லூக்கா 9:58.

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மதத்தை வியாபாரம் ஆக்கினார்களா?

 பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக கடவுளுக்கு சேவை செய்யக் கூடாது என்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு சொன்னார். அவர் இப்படிச் சொன்னார்: “இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.” (மத்தேயு 10:8) அதனால்தான், இயேசுவுடைய சீஷர்கள் (பின்பு கிறிஸ்தவர்கள் என்று அறியப்பட்டவர்கள்) அவர் சொன்னதற்கு அப்படியே கீழ்ப்படிந்தார்கள். அதற்கு சில உதாரணங்களை பார்க்கலாம்:

  •   இயேசுவின் சீஷரான பேதுருவிடம் சீமோன் என்று ஒருவர் தனக்கு பதவியையும் அதிகாரத்தையும் தரச் சொல்லி காசு கொடுத்தார். பேதுரு உடனே அதை மறுத்து இப்படிச் சொல்லி கண்டித்தார்: “கடவுள் தரும் இலவச அன்பளிப்பைப் பணம் கொடுத்து வாங்கலாம் என்று நீ நினைத்ததால் உன் பணம் உன்னோடு அழிந்துபோகட்டும்.”—அப்போஸ்தலர் 8:18-20.

  •   பல ஊர்களுக்குப் போய் ஊழியம் செய்தவர்களில் பிரபலமானவர் அப்போஸ்தலன் பவுல். அவர் பல வருஷங்கள் கிறிஸ்தவ சபைகளுக்காக கடினமாக உழைத்தார். ஆனால் அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவர் நினைக்கவே இல்லை. அவரும் அவருடன் இருந்த கிறிஸ்தவர்களும் ‘நிறைய பேரைப் போல கடவுளுடைய வார்த்தையை வைத்துப் பணம் சம்பாதிக்கவில்லை.’ (2 கொரிந்தியர் 2:17) அதற்கு பதிலாக, அவர் இப்படிச் சொன்னார்: “உங்களில் யாருக்கும் பெரிய பாரமாக இல்லாதபடி, நாங்கள் இரவும் பகலும் வேலை செய்து கடவுளுடைய நல்ல செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.”— 1 தெசலோனிக்கேயர் 2:9.

 ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ஊர் ஊராகப் போய் செய்த ஊழியத்துக்கோ, தான தர்மங்களுக்கோ கண்டிப்பாக பணம் தேவைப்பட்டிருக்கும்தான். ஆனால் கடவுளுக்காக செய்கிற அந்தச் சேவைக்கு அவர்கள் காசு வாங்கவே இல்லை. கீழே இருக்கிற நியமங்களின் அடிப்படையில் மக்கள் விருப்பப்பட்டு கொடுத்த நன்கொடையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

  •   2 கொரிந்தியர் 8:12: “கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தன்னிடம் இருப்பதற்கு ஏற்றபடி எதைக் கொடுத்தாலும் அதைக் கடவுள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.”

     அர்த்தம்: ஒருவர் எவ்வளவு நன்கொடை கொடுக்கிறார் என்பது முக்கியமல்ல. என்ன மனநிலையோடு அதைக் கொடுக்கிறார் என்பதுதான் முக்கியம்.

  •   2 கொரிந்தியர் 9:7: “ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்.”

     அர்த்தம்: யாருமே மற்றவர்களுடைய கட்டாயத்தினால் நன்கொடை கொடுப்பதை கடவுள் விரும்புவது கிடையாது. ஒருவர் விருப்பப்பட்டு நன்கொடை கொடுப்பதைப் பார்த்து கடவுள் சந்தோஷப்படுகிறார்.

பண வெறி பிடித்த மதங்களுக்கு சீக்கிரத்தில் என்ன நடக்கப்போகிறது?

 எல்லா மதங்களையும் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. (மத்தேயு 7:21-23) ஒரு தீர்க்கதரிசனத்தில், எல்லா பொய் மத அமைப்புகளையும் ஒரு விபச்சாரிக்கு ஒப்பிட்டு பைபிள் பேசுகிறது. ஏனென்றால், இந்தப் பொய் மதங்கள் காசுக்காகவும் மற்ற ஆதாயத்துக்காகவும் அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்திருக்கின்றன. அதோடு, எல்லா மக்களையும் ஏமாற்றி பிழைக்கின்றன. (வெளிப்படுத்துதல் 17:1-3; 18:3) சீக்கிரத்தில் கடவுள் இந்தப் பொய் மதங்களை அழிக்கப்போவதாக அந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 17:15-17; 18:7.

 அதுவரைக்கும் இந்தப் பொய் மதங்களுடைய அட்டூழியங்களைப் பார்த்து மக்கள் ஏமாறுவதையோ, அவரிடமிருந்து விலகுவதையோ கடவுள் விரும்பவில்லை. (மத்தேயு 24:11, 12) அதனால்தான் தன்னை எப்படி சரியாக வணங்குவது என்று தெரிந்துகொள்ள சொல்லியும் பொய் மதத்திடமிருந்து விலகச் சொல்லியும் நல்மனமுள்ள மக்களை அவர் உற்சாகப்படுத்துகிறார்.—2 கொரிந்தியர் 6:16, 17.