மோசமான பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பைபிள் உதவுமா?
மோசமான வானிலையால் லட்சக்கணக்கான ஆட்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவரா? ஆபத்தான வானிலை பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சூறாவளி, புயல் காற்று, சுழல் காற்று போன்றவை கடல் சீற்றத்தையும் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான புயல்கள் பயங்கர நாசத்தை உண்டாக்குகின்றன. கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படுகிறது. புயல் சமயத்தில் வருகிற மின்னல் வெட்டால், கொடூரமான காட்டுத் தீ உருவாகிறது. அதுமட்டுமல்ல, வறட்சியாலும் வெப்ப அலைகளாலும் பனிப் புயல்களாலும் சில இடங்களில் பயங்கரமான பாதிப்புகள் ஏற்படுகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தை இவையெல்லாம் புரட்டிப்போடுகிறது.
உலகத்தின் பல பகுதிகளில், ஊரையே நாசமாக்கும் பேரழிவுகள் அதிகமாக ஏற்படுகிறது; தீவிரமாக ஆகிக்கொண்டே வருகிறது. “இந்த மாதிரி பேரழிவுகளில் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. ஏனென்றால், வெள்ளப்பெருக்குகளும், சூறாவளிகளும், வறட்சியும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இவை, மக்களின் உயிரை பலிவாங்குகிறது. உயிரோடு இருக்கிறவர்களுடைய வாழ்க்கையை சின்னாபின்னம் ஆக்குகிறது. ஒவ்வொரு வருஷமும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துவிடுகிறார்கள்” என்று இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ரெட் கிராஸ் அண்ட் ரெட் க்ரெசண்டு சொசைட்டீஸ் சொல்கிறது.
இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது, மக்கள் உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் கஷ்டப்படுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் சொத்துபத்துகளையும் வீடுகளையும் இழந்துவிடுகிறார்கள். சிலர், உயிருக்கு உயிராக நேசித்தவர்களையும் பறிகொடுத்துவிடுகிறார்கள்.
மோசமான பருவநிலையால் ஏற்படுகிற பாதிப்புகளால் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், பைபிள் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்யும். ஏனென்றால், ஆறுதல், நம்பிக்கை, மற்றும் நடைமுறையான ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன. இவையெல்லாம் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்திருக்கின்றன. (ரோமர் 15:4) அதுமட்டுமல்ல, நிறைய பேருடைய மனதைக் குடையும் ஒரு கேள்விக்குக்கூட பைபிள் பதில் கொடுக்கிறது. அந்த கேள்வி: ‘கடவுள் இதெல்லாம் நடக்குறதுக்கு ஏன் விட்டுட்டாரு? அவர் என்னை தண்டிக்கிறாரா?’
இன்றைக்கு இருக்கிற மோசமான பருவநிலை கடவுளிடமிருந்து வரும் தண்டனை கிடையாது
இன்றைக்கு மக்கள் அனுபவிக்கிற கஷ்டங்களுக்கெல்லாம் கடவுள் காரணம் இல்லை என்று பைபிள் சொல்கிறது. “கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது” என்று அது சொல்கிறது. (யாக்கோபு 1:13) அப்படியென்றால், இன்றைக்கு இருக்கிற மோசமான வானிலைக்கு கடவுள் காரணம் இல்லை.
இயற்கை சக்திகளை பயன்படுத்தி கெட்ட மக்களை கடவுள் அழித்தது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த மாதிரி சம்பவங்களெல்லாம் இன்றைக்கு நடக்கிற பேரழிவுகள் மாதிரி கிடையாது. ஏனென்றால், இன்றைக்கு வரும் பேரழிவுகள் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் திடுதிப்பென்று வந்துவிடுகிறது. நல்லவர்கள் கெட்டவர்கள் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லாரையும் துவம்சம் செய்துவிடுகிறது. ஆனால், கடவுள் கொண்டுவந்த அழிவுகளைப் பற்றி பைபிள் சொல்லும்போது, நல்லவர்கள் பாதுகாக்கப்பட்டதாக சொல்கிறது. அதுமட்டுமல்ல, இந்த மாதிரி அழிவுகளைக் கொண்டுவருவதற்குமுன், கடவுள் எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறார். அதோடு, அந்த அழிவை கொண்டுவருவதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறார். உதாரணத்துக்கு, நோவா என்று ஒருவர் வாழ்ந்த காலத்தில் கடவுள் பெருவெள்ளத்தைக் கொண்டுவந்தார். ஆனால், அதை கொண்டுவருவதற்கு முன்பு, அதற்கான காரணத்தை சொன்னார்; எச்சரிப்பையும் கொடுத்தார். நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்தார்.—ஆதியாகமம் 6:13; 2 பேதுரு 2:5.
இன்றைக்கு வருகிற இயற்கை பேரழிவுகள் கடவுளிடம் இருந்து வருகிற தண்டனை கிடையாது என்பதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள, “பைபிளின் கருத்து—கஷ்டங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
மோசமான பருவநிலையால் பாதிக்கப்பட்டவர்கள்மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறது
யெகோவா a பாசமுள்ள கடவுள் என்று பைபிள் சொல்கிறது. அவர் மக்களுடைய நிலைமையை நன்றாக புரிந்துகொள்கிறார். கீழே கொடுக்கப்பட்டிருக்கிற ஆறுதலான வசனங்களைக் கொஞ்சம் பாருங்கள்:
ஏசாயா 63:9: “அவர்கள் வேதனைப்பட்ட சமயத்திலெல்லாம் [கடவுளும்] வேதனைப்பட்டார்.”
அர்த்தம்: மக்கள் வேதனைப்படுவதைப் பார்க்கும்போது யெகோவாவுடைய மனசும் வலிக்கிறது.
1 பேதுரு 5:7: “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்.”
அர்த்தம்: நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்.
யெகோவாவுக்கு மனிதர்கள்மேல் பாசம் இருக்கிறது. அவர்களுடைய இடத்தில் தன்னை வைத்து அவர் பார்க்கிறார். அதனால், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பைபிள் மூலமாக அவர் நமக்கு தேவையான நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுக்கிறார். அதோடு, இந்த மாதிரி பேரழிவுகளே வராத ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுக்கிறார்.—2 கொரிந்தியர் 1:3, 4.
மோசமான ஆபத்தான வானிலை என்ற பேச்சுக்கே இடமில்லாத ஒரு காலம்
“உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்” என்று கடவுள் பைபிளில் வாக்கு கொடுத்திருக்கிறார். (எரேமியா 29:11) மோசமான வானிலையால் பேரழிவு வந்துவிடுமோ என்ற பயமே இல்லாமல், மக்கள் அழகான ஒரு பூமியில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் கடவுள் ஆசைப்படுகிறார்.—ஆதியாகமம் 1:28; 2:15; ஏசாயா 32:18.
கடவுள் அவருடைய அரசாங்கத்தின் மூலமாக அப்படியொரு எதிர்காலத்தைக் கொண்டுவரப்போகிறார். அந்த அரசாங்கத்துக்கு இயேசுதான் தலைவர். (மத்தேயு 6:10) இயற்கை பேரிடர்களை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான ஞானமும் சக்தியும் இயேசுவிடம் இருக்கிறது. அந்த சக்தி தனக்கு இருக்கிறது என்பதை பூமியில் இருந்தபோது காட்டினார். (மாற்கு 4:37-41) இயேசு ஞானமுள்ள ஒரு ஆட்சியாளர். அதனால், இயற்கையோடு ஒன்றி வாழ்வது எப்படி என்றும் சுற்றுச்சூழலை பராமரிப்பது எப்படி என்றும் மனிதர்களுக்கு அவர் கற்றுக்கொடுப்பார். (ஏசாயா 11:2) அவருடைய ஆட்சியின் கீழ் இயற்கை சீற்றங்கள் ஏற்படுமோ என்ற பயம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
‘இயேசு தன்னோட சக்திய பயன்படுத்தி எப்போ இதெல்லாத்தையும் செய்வாரு?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். பதில் தெரிந்துகொள்ள “கடவுளுடைய அரசாங்கம் பூமியை எப்போது ஆட்சி செய்யும்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
மோசமான வானிலையை இப்போதே சமாளிப்பது எப்படி?
பேரிடர்களை சமாளிக்க பைபிளில் இருக்கிற ஆலோசனைகள் உதவும். குறிப்பாக சொன்னால், ஒரு பேரிடர் ஏற்படுவதற்கு முன்பும், நடக்கிற சமயத்திலும், அதற்கு பிறகும், பைபிள் ஆலோசனைகள் கைகொடுக்கும்.
பேரழிவுக்கு முன்பு: உடனே செயல்படுவதற்கு முன்பே தயாராக இருங்கள்.
பைபிள் இப்படி சொல்கிறது: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.”—நீதிமொழிகள் 22:3.
அர்த்தம்: நீங்கள் இருக்கும் பகுதியில் எப்படிப்பட்ட ஆபத்துகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை முன்பே யோசித்து வையுங்கள். அப்படி செய்தால், ஆபத்து வரும் சமயத்தில் உடனடியாக செயல்பட முடியும். உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முடியும்.
அனுபவம்: “காட்டுத் தீ பரவுன சமயத்துல நாங்க ‘டக்’னு எஸ்கேப் ஆகிட்டோம். ஏன்னா, நாங்க முன்னாடியே தயாரா இருந்தோம். அவசர சமயத்துல என்னென்ன பொருள்களெல்லாம் தேவைப்படுமோ அதெல்லாம் ஏற்கெனவே ஒரு பையில போட்டு வச்சிருந்தோம். எங்களோட மருந்து, துணிமணி எல்லாமே அதுல போட்டு வச்சிருந்தோம். எங்கள சுத்தி இருந்த ஜனங்க பயத்துல என்ன பண்றதுனே தெரியாம முழிச்சிட்டு இருந்தாங்க. ஆனா எங்களால தெளிவா யோசிக்க முடிஞ்சுது. ஏன்னா, நாங்க ஏற்கெனவே எல்லாத்தயும் தயாரா வச்சிருந்தோம். அப்படி செஞ்சது ரொம்ப நல்லதா போச்சு!”—தமாரா, கலிபோர்னியா, யூ.எஸ்.ஏ.
பேரழிவு நடக்கும்போது: முக்கியமான விஷயத்தை பாதுகாப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
பைபிள் இப்படி சொல்கிறது: “ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது.”—லூக்கா 12:15.
அர்த்தம்: உயிர்தான் முக்கியம், உடமைகள் அல்ல!
அனுபவம்: “லாவின் b சூறாவளி எங்க வீட்ட நாசமாக்குனப்போ என்னால தெளிவா யோசிக்கவே முடியல. ஆனா, நான் மனசுவிட்டு யெகோவாகிட்ட ஜெபம் பண்ணேன். அப்புறம்தான் ஒரு முக்கியமான விஷயத்த புரிஞ்சிக்கிட்டேன். அதாவது, நாங்க உடமைகளதான் இழந்தோம், உயிர இல்லங்கிறத புரிஞ்சிக்கிட்டேன்.”—லெஸ்லீ, பிலிப்பைன்ஸ்.
பேரழிவுக்கு பிறகு: இன்றைக்கு பற்றி மட்டுமே யோசியுங்கள்.
பைபிள் இப்படி சொல்கிறது: “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும்.”—மத்தேயு 6:34.
அர்த்தம்: எதிர்காலத்தில் என்ன பிரச்சினை வரும் என்பதைப் பற்றியே அதிகமாகக் கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.
அனுபவம்: “இர்மா புயல் அடிச்சப்போ, எங்க வீட்டுக்குள்ள எல்லாம் தண்ணி வந்துடுச்சு. அப்போ நிறைய முடிவுகள எடுக்க வேண்டியிருந்துச்சு. அதனால பயங்கர டென்ஷனா இருந்துச்சு. அந்தந்த நாளுக்கு மட்டுமே கவலைப்படுங்கனு சொல்ற பைபிள் ஆலோசனதான் எனக்கு அப்போ உதவியா இருந்துச்சு. என்னால சமாளிக்கவே முடியாது நினைச்ச பிரச்சனைகளகூட யெகோவாவோட உதவியோட சமாளிக்க முடிஞ்சுது.”—சாலி, ப்ளோரிடா, யூ.எஸ்.ஏ.
இன்னும் நிறைய டிப்ஸ் தெரிந்துகொள்ள, “பேரழிவு தாக்கும்போது உயிர் தப்புவது எப்படி?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.
b இந்த சூறாவளிக்கு ஹைமா என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது.