Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Sean Gladwell/Moment via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

உலகளவில் ராணுவ செலவுகள் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை தாண்டியது—பைபிள் என்ன சொல்கிறது?

உலகளவில் ராணுவ செலவுகள் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை தாண்டியது—பைபிள் என்ன சொல்கிறது?

 உலக அரசாங்கங்கள் 2022-ல் மட்டுமே 2.24 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை ராணுவத்துக்காக செலவு செய்திருக்கின்றன. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்திய பிறகு பல நாடுகள் இப்படி செய்திருக்கின்றன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (SIPRI) ஏப்ரல் 2023-ல் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி 2022-ல்:

  •    ஐரோப்பிய நாடுகள் ராணுவத்துக்காக செலவு செய்த தொகை “இந்த வருஷத்தில் 13 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பனிப்போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள், ஒரு வருஷத்தில் இவ்வளவு அதிகமாக செலவு செய்தது இப்போதுதான்.”

  •    “ரஷ்யா...9.2 சதவீதம் தன்னுடைய செலவுகளை அதிகரித்துள்ளது. உலகத்தில் அதிகமாக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருந்த ரஷ்யா இப்போது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.”

  •    ராணுவத்துக்காக அதிகமாக செலவு செய்வதில் அமெரிக்கா முதல் இடத்திலேயே இருக்கிறது. “உலகத்தில் ராணுவத்துக்காக ஆகும் மொத்த செலவுகளில் 39 சதவீதத்தை அமெரிக்காதான் செய்கிறது.”

 “சமீப வருஷங்களில், உலக நாடுகள் ராணுவத்துக்காக அதிகமாக செலவு செய்வது நாம் பாதுகாப்பில்லாத ஒரு உலகில் வாழ்கிறோம் என்பதற்கு அறிகுறி,” என்று டாக்டர் நான் டியன் சொல்கிறார். இவர் SIPRI அறிக்கையை வெளியிட்ட உடன் ஆசிரியர்.

 உலகத்தில் பலம்படைத்த அரசாங்கங்களுக்கு இடையே இப்படிப்பட்ட மோதல்கள் அதிகரிக்கும் என்று பைபிள் முன்பே சொன்னது. அதோடு, சமாதானம் எப்படி வரும் என்பதைப் பற்றியும் சொல்கிறது.

ராணுவ படையெடுப்புகள்—முன்பே சொல்லப்பட்டது

  •    நாம் வாழும் காலத்தை ‘முடிவு காலம்’ என்று பைபிள் சொல்கிறது.—தானியேல் 8:19.

  •    இந்த காலத்தில் உலக வல்லரசுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் என்று பைபிளில் இருக்கும் தானியேல் புத்தகம் சொல்கிறது. அவர்கள் ‘சண்டைக்கு நிற்பார்கள்,’ அதாவது, பலம்படைத்தவர்களாக இருப்பதற்கு ஒருவரோடொருவர் போட்டிபோடுவார்கள். அதற்காக ஏராளமான ‘புதையல்களை,’ அதாவது, பொருளாதார வளங்களை செலவு செய்வார்கள் என்றும் அது சொல்கிறது.—தானியேல் 11:40, 42, 43.

 மெய்சிலிர்க்கவைக்கும் இந்த தீர்க்கதரிசனத்தைப் பற்றி தெரிந்துகொள்ள, நிறைவேறிய தீர்க்கதரிசனம்—தானியேல் அதிகாரம் 11 என்ற வீடியோவைப் பாருங்கள்.

உலகம் முழுவதும் சமாதானம்—எப்படி வரும்?

  •    மனித அரசாங்கங்களை கடவுள் சீக்கிரத்தில் துடைத்து அழித்துவிடுவார் என்று பைபிள் சொல்கிறது. கடவுள் “ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது. அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது. அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”—தானியேல் 2:44.

  •    மனிதர்களால் சாதிக்க முடியாத ஒன்றை யெகோவா a தேவன் சீக்கிரத்தில் சாதித்துக் காட்டுவார். என்றும் மறையாத சமாதானத்தை கொண்டுவருவார். எப்படி? பரலோகத்தில் அவர் ஏற்படுத்தியிருக்கும் அரசாங்கம் எல்லா ஆயுதங்களையும் ஒழித்துக்கட்டும்; வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.—சங்கீதம் 46:8, 9.

 கடவுளுடைய அரசாங்கம் எதையெல்லாம் சாதிக்கும் என்று தெரிந்துகொள்ள “அமைதி தவழும் உலகினிலே!” என்ற கட்டுரையைப் படியுங்கள்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.