Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

fcafotodigital/E+ via Getty Images

வீகன் வாழ்க்கைமுறை—பைபிள் என்ன சொல்கிறது?

வீகன் வாழ்க்கைமுறை—பைபிள் என்ன சொல்கிறது?

 இன்று உலகத்தில் நிறையப் பேர் வீகன் என்ற வாழ்க்கைமுறையில் ரொம்ப ஆர்வம் காட்டுகிறார்கள்.

  •    “வீகனாக வாழ்கிறவர்கள் உணவுக்காகவோ உடைக்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காகவோ மிருகங்களைக் கொடுமைப்படுத்துவதையோ கொலை செய்வதையோ விரும்ப மாட்டார்கள். அவர்களுடைய யோசனை எல்லாம் மிருகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அதற்காக அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார்கள்.”—வீகன் அமைப்பு.

 சிலர், மிருகங்கள் மேல் இருக்கும் அக்கறையால் மட்டுமல்ல, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், தங்களுடைய உடலை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காகவும், தங்கள் மத நம்பிக்கைக்காகவும் வீகனாக வாழ்கிறார்கள்.

  •    ”வீகனாக இருக்கும் நிறையப் பேர் வெறுமனே இதை ஒரு உணவு பழக்கமாகப் பார்ப்பதில்லை. அவர்களுடைய மதத்தோடு சம்பந்தப்படுத்தி யோசிக்கிறார்கள். ஒழுக்கநெறியோடு வாழ்வதற்கும் உலகத்தை நல்லபடியாக மாற்றுவதற்கும் இதுதான் வழி என்று நம்புகிறார்கள்.”—பிரிட்டானிக்கா அக்கடமிக்.

 உலகத்தை நல்லபடியாக மாற்றுவதற்கு வீகன் வாழ்க்கைமுறைதான் வழியா? பைபிள் என்ன சொல்கிறது?

மனிதர்களைப் பற்றியும் மிருகங்களைப் பற்றியும் படைப்பாளர் என்ன நினைக்கிறார்?

 நம்முடைய படைப்பாளர் யெகோவா தேவன் a மிருகங்களைவிட மனிதர்களை ரொம்ப உயர்வாகப் பார்க்கிறார். மிருகங்களைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரத்தையும் மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:27, 28) மிருகங்களை மனிதர்கள் உணவாக சாப்பிடலாம் என்ற அனுமதியையும் கடவுள் கொடுத்திருக்கிறார். (ஆதியாகமம் 9:3) இருந்தாலும், மனிதர்கள் அவற்றைக் கொடுமைப்படுத்தினால் அது அவருக்குச் சுத்தமாகப் பிடிக்காது.—நீதிமொழிகள் 12:10.

 மிருகங்களை உணவாகச் சாப்பிடலாமா வேண்டாமா என்பது ஒவ்வொருவருடைய சொந்த தீர்மானம். b நாம் எடுக்கும் தீர்மானத்தை வைத்து கடவுள் நம்மை நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ பார்ப்பதில்லை. (1 கொரிந்தியர் 8:8) அதனால், எதைச் சாப்பிட வேண்டும் என்ற விஷயத்தில் நாம் யாரும் மற்றவர்களைக் குறை சொல்லக் கூடாது.—ரோமர் 14:3.

நல்ல வாழ்க்கைக்கு வழி

 நாம் வாழ்கிற விதத்தினால் உலகப் பிரச்சினைகள் சரியாகிவிடாது என்று பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். ஏனென்றால், நிறையப் பிரச்சினைகளுக்கு பொருளாதாரம், அரசியல், சமுதாயம் இவையெல்லாம்தான் காரணம். இந்தப் பிரச்சினைகளை நம்மால் சரிசெய்ய முடியாது. பைபிள் இப்படிச் சொல்கிறது:

 நமக்கு வரும் பிரச்சினைகளை நம்முடைய படைப்பாளர் சரிசெய்யப்போகிறார். அதை அவர் எப்படிச் செய்யப்போகிறார் என்று பைபிள் அடையாள அர்த்தத்தில் விவரிக்கிறது.

  •    “பின்பு, புதிய வானத்தையும் புதிய பூமியையும் நான் பார்த்தேன். முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின. கடலும் இல்லாமல்போனது.”—வெளிப்படுத்துதல் 21:1.

 ‘முந்தின வானத்தை’ நீக்கிவிட்டு “புதிய வானத்தை” கொண்டுவரப்போவதாக கடவுள் சொல்லியிருக்கிறார். அதாவது, இன்று இருக்கும் மனித அரசாங்கங்களை எல்லாம் அழித்துவிட்டு அவருடைய பரலோக அரசாங்கத்தைக் கொண்டுவரப்போகிறார். அவருடைய அரசாங்கம் ‘முந்தின பூமியை’ நீக்கிவிட்டு “புதிய பூமியை” ஆட்சி செய்யும். அதாவது, இன்று இருக்கும் கெட்ட மக்கள் எல்லாரையும் அழித்துவிட்டு அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் நல்ல மக்களை ஆட்சி செய்யும்.

 மிருகங்களோடு எப்படிச் சமாதானமாக வாழலாம், சுற்றுச்சூழலை எப்படிப் பாதுகாக்கலாம் என்று மக்கள் கடவுளுடைய அரசாங்கத்தில்தான் முழுமையாகக் கற்றுக்கொள்வார்கள்.—ஏசாயா 11:6-9.

a யெகோவா என்பது கடவுளுடைய சொந்த பெயர்.—சங்கீதம் 83:18.

b “இரத்தத்துக்கு . . . தொடர்ந்து விலகியிருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 15:28, 29) அப்படியென்றால் நாம் இரத்தத்தைக் குடிக்கக் கூடாது; இரத்தம் சரியாக வடிக்கட்டப்படாத இறைச்சியைச் சாப்பிடக் கூடாது; இரத்தம் கலந்திருக்கும் வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது.