Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஹாக்கன் டேவிட்சன் | வாழ்க்கை சரிதை

பல மொழிகளில் நல்ல செய்தி பரவ உதவினோம்

பல மொழிகளில் நல்ல செய்தி பரவ உதவினோம்

 நான் ஸ்வீடனில் பிறந்து வளர்ந்தேன். டீனேஜில் என்னை சுற்றி இருந்தவர்கள் மாதிரியே எனக்கும் கடவுள் நம்பிக்கையே கிடையாது. அதனால்தான் என்னுடைய அப்பா-அம்மா, தங்கச்சி எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்தபோது எனக்கு ஆர்வமே இல்லாமல் போய்விட்டது.

 என்னுடைய அப்பா திரும்ப திரும்பக் கட்டாயப்படுத்தியதால், நான் பைபிள் படிக்க ஒத்துக்கொண்டேன். அறிவியலைப் பற்றி பைபிள் சொல்கிற விஷயங்கள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது என்று தெரிந்துகொண்டபோது அசந்து போய்விட்டேன்! பைபிளைப் படிக்கப் படிக்க அது கடவுளுடைய வார்த்தை... யெகோவாவின் சாட்சிகள் பைபிளில் இருக்கிற விஷயங்களை அப்படியே சொல்லித் தருகிறார்கள்... அதன்படி வாழ்கிறார்கள்... என்று எனக்கு நன்றாகப் புரிந்தது. நானும் என்னுடைய அப்பாவும் 1970-ல் ஒரே நாளில் ஞானஸ்நானம் எடுத்தோம். கொஞ்ச வருஷம் கழித்து என்னுடைய அம்மாவும் இரண்டு தங்கைகளும் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.

 என்னுடைய ஃபிரெண்ட்ஸ் நிறைய பேருக்கு ‘பார்ட்டி’, ‘ஃபன்’ என்று எப்போதுமே ஜாலியாக இருக்கத்தான் ரொம்ப பிடித்திருந்தது. எனக்கு 17 வயதானபோது என் ஃபிரெண்ட்ஸ் மாதிரி வாழ நானும் ஆசைப்பட்டேன். ஆனால், எனக்கு பைபிள் படிப்பை எடுத்த தம்பதி முழுநேர சேவை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்ததை பார்த்தேன். எனக்கும் முழுநேர சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. என்னுடைய 21 வயதில் பயனியர் சேவையில் அடியெடுத்து வைத்தேன்.

நானும் என் அப்பாவும் (என் இடது பக்கத்தில்) ஒரே நாளில் ஞானஸ்நானம் எடுத்தோம்

 பயனியர் ஊழியம் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது. ‘முன்னாடியே ஆரம்பிக்காமல் போய்விட்டேனே’ என்று வருத்தப்பட்டேன். கோடேபோர்க் துறைமுகத்தில் ஊழியம் செய்தேன். அங்கே சரக்கு கப்பலில் வேலை செய்கிற நிறைய பேரை பார்த்தேன். அவர்கள் வேறு மொழி பேசுகிறவர்கள், அவர்களிடம் சத்தியத்தைப் பற்றி பேசியது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

 கடந்த 50 வருஷங்களாக, வித்தியாசமான மொழிகளைப் பேசுகிற மக்களுக்கு நல்ல செய்தி சென்றெட்டுவதற்காக உதவுகிற ஸ்பெஷல் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.ஆரம்பத்தில் இருந்து என்னுடைய கதையை சொல்கிறேன்.

மெப்ஸ்-ஐ பயன்படுத்தி வேலை

 பயனியர் ஊழியம் செய்யும்போது என்னுடைய தேவைகளை நானே கவனித்துக்கொள்வதற்காக பார்ட் டைமாக அச்சுக்கலைஞராக வேலை செய்ய ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் அச்சடிக்கும் துறையில் புதுப் புது மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தன. அதுவரை அச்சடிப்பதற்காக ஈயத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது படங்களும் எழுத்துக்களும் புகைப்படங்களாக மாற்றப்பட்டன. கம்ப்யூட்டர் உதவியோடு இந்த வேலையை செய்கிற ஒரு இயந்திரத்தை வைத்து அச்சடிக்கும் இயந்திரத்துக்கான தகடுகளை தயாரிக்க கற்றுக்கொண்டேன்.

எங்கள் கல்யாண நாளன்று

 1980-ல் ஒழுங்கான பயனியராக சேவை செய்துகொண்டிருந்த ஹெலனை கல்யாணம் செய்துகொண்டேன். உலகத்தின் வித்தியாசமான பகுதிகளில் வாழ்கிற ஆட்களை சந்திப்பதற்கும், அவர்களுடைய கலாச்சாரத்தை கற்றுக்கொள்வதற்கும் என்னைப் போலவே அவளுக்கும் ரொம்ப பிடிக்கும். கிலியட் ஸ்கூலில் கலந்துகொண்டு மிஷனரிகளாக சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள்.

 எனக்கு அச்சுக் கலையில் அனுபவம் இருந்ததால் ஹெலனுக்கும் எனக்கும் ஸ்வீடனில் இருக்கிற பெத்தேலில் சேவை செய்ய அழைப்பு கிடைத்தது. இன்னும் திறமையாக அச்சடிப்பதற்காக புதுப் புது டெக்னாலஜியைப் பயன்படுத்த நம் அமைப்பு ரொம்ப ஆர்வம் காட்டியது. 1983-ல் நியுயார்க்கில் இருக்கிற வால்கில் பெத்தேலுக்கு அனுப்பப்பட்டோம். அங்கே, நம் சகோதரர்களே புதிதாக உருவாக்கிய மெப்ஸ்-ஐ (மல்டிலேங்வேஜ் எலக்ட்ரானிக் பப்ளிஷிங் சிஸ்டம்) a பயன்படுத்துவதற்கு எங்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.

ஹாங்காங், மெக்சிகோ, நைஜீரியா, ஸ்பெயின்-ல் மெப்ஸ் கருவிகளோடு வேலை செய்தபோது

 மெப்ஸ் என்பது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் என்று நாங்கள் தெரிந்துகொண்டோம். இந்த புரோகிராமில் நூற்றுக்கணக்கான மொழிகளை டைப் செய்ய முடியும். டைப் செய்ததை பிரிண்ட் செய்வதற்கு ஏற்ற மாதிரி கம்ப்போஸ் (Composition) பண்ணவும் முடியும், அதோடு, படங்களையும் இணைக்க முடியும். இன்னும் நிறைய மொழிகளில் பிரசுரங்களை தயாரிக்க வேண்டியிருந்தது. அதற்காக மெப்ஸ்-ஐப் பயன்படுத்தி ஒரு மொழியில் புதிய எழுத்து வடிவங்களை உருவாக்குவதுதான் எங்களுடைய வேலை. இந்த வேலையை ஆரம்பித்து பல வருஷங்கள் ஓடிவிட்டன. இப்போது யெகோவாவின் சாட்சிகள் ஆயிரத்துக்கும் அதிகமான மொழிகளில் பிரசுரங்களை தயாரிக்கிறார்கள்.

 கொஞ்ச நாட்களிலேயே ஹெலனுக்கும் எனக்கும் ஆசியாவுக்கு போய் மெப்ஸ் புரோகிராமில் இன்னும் நிறைய மொழிகளை சேர்ப்பதற்கான நியமிப்பு கிடைத்தது. இதனால் நல்ல செய்தி இன்னும் நிறைய மொழிகளில் கிடைக்கும். இந்த வேலைக்கு கைகொடுப்பதற்காக நாங்கள் ஆர்வமாக கிளம்பிவிட்டோம்!

வித்தியாசமான கலாச்சாரம்!

 1986-ல் நாங்கள் இந்தியாவுக்குப் போனோம். அங்கே இருந்த கலாச்சாரம் ரொம்பவே வித்தியாசமானதாக இருந்தது. நாங்கள் பம்பாய்க்கு (இப்போது மும்பை என்று அழைக்கப்படுகிறது) போனபோது அங்கே எல்லாமே ரொம்ப புதிதாக தெரிந்தது. அதோடு ஒத்துப்போவது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருந்தது. ஸ்வீடன் கலாச்சாரம், இந்திய கலாச்சாரம் இரண்டுமே இரண்டு துருவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் அங்கே போன முதல் வாரத்திலேயே ‘பேசாமல் திரும்பி போய்விடலாமா’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டோம்.

 ஒருவாரம் எப்படியோ ஓடிவிட்டது. அதற்கு அப்புறம் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். அது என்னவென்றால், ‘மிஷனரிகளாக இருக்கத்தான் நமக்கு எப்பவுமே ஆசை. இப்போது நமக்கு வெளிநாட்டில் சேவை செய்வதற்கு நியமிப்பு கிடைத்திருக்கிறது. அதை ஏன் நாம் விட்டுவிட்டு போக வேண்டும்!’ என்று யோசித்தோம். அதனால் எவ்வளவு தடைக்கற்கள் வந்தாலும் அதை படிக்கற்களாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

 அதனால் திரும்பிப் போவதைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு, புது கலாச்சாரத்தைப் பற்றி கற்றுக்கொள்ள முடிவெடுத்தோம். அப்படி செய்தபோது ஹெலனுக்கும் எனக்கும் இந்தியாவை ரொம்ப பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்தச் சமயத்தில் குஜராத்தி, பஞ்சாபி என்ற இரண்டு இந்திய மொழிகளை கற்றுக்கொண்டோம்.

மியான்மருக்கு எங்கள் பயணம்

மியான்மர் ராஜ்ய மன்றத்தில், அந்த நாட்டின் பாரம்பரிய உடையில்

 1988-ல் நாங்கள் மியான்மருக்கு அனுப்பப்பட்டோம். இது சீனா, இந்தியா, தாய்லாந்துக்கு நடுவில் இருக்கிறது. அரசியல் பிரச்சினை காரணமாக அங்கே பதட்டமான சூழ்நிலை இருந்தது. ஏனென்றால் அந்த நாட்டில் முக்கால்வாசி பாகம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த மொழியில் இருக்கிற எழுத்து வடிவங்களை மெப்ஸில் பயன்படுத்த முடியவில்லை. வேறு எந்த சாஃப்ட்வேராலும் அதைச் செய்ய முடியவில்லை. நாங்கள் அந்த மொழியில் இருக்கிற எழுத்துக்களை வடிவமைக்க வேண்டும்... அந்த ஃபைல்களை வால்கிலில் இருக்கிற பெத்தேலுக்கு கொண்டு வர வேண்டும்... அதற்கு பின்பு அதை மெப்ஸ்-ல் அப்லோட் பண்ண வேண்டும். இதுதான் எங்களுடைய முதல் வேலையே.

 நாங்கள் விமான நிலையத்தில் இருந்தபோது, எழுத்து வடிவங்களை ஹெலன் தன்னுடைய பையில் வைத்திருந்தாள். அங்கே அரசியல் சூழ்நிலைமை ரொம்ப ஆபத்தானதாக இருந்ததால் எல்லையில் இருக்கிற போலீஸ் கையில் நாங்கள் சிக்கியிருந்தால், மியான்மர் மொழியில் பிரசுரங்களை கொண்டு போவதற்காக எங்களை கைது செய்திருப்பார்கள். ஹெலனை அவர்கள் சோதனை செய்த சமயத்தில் அவள் தன்னுடைய பையோடு சேர்ந்து கையை தூக்கி பிடித்துவிட்டாள். அதனால் பை இருந்ததை யாரும் கண்டுகொள்ளவே இல்லை!

அச்சுக்கோர்க்கும் முறைகளின் தரத்தை உயர்த்த மெப்ஸ் ரொம்ப உதவியாக இருந்தது

 அந்த எழுத்து வடிவங்களோடு சேர்த்து மொழிபெயர்ப்பாளர்களுக்கு லேப்டாப், பிரின்டர், அதோடு மெப்ஸ்-ஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சியும் கொடுக்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளர்கள் நிறைய பேர் இதற்கு முன்பு கம்ப்யூட்டரைப் பார்த்ததே இல்லை. இருந்தாலும் அதைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு ரொம்ப ஆர்வமாக இருந்தார்கள். ஒரு பக்கத்தை கம்போஸ் செய்வதற்காக ஈய தகடுகளை கையால் வரிசைப்படுத்தி அச்சிடும் பழைய முறையை இனிமேல் அவர்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதனால் உடனடியாகவே நல்ல தரமான பிரசுரங்களை நம்மால் அச்சடிக்க முடிந்தது.

நேபாளத்துக்கு

 1991-ல் நானும் ஹெலனும் நேபாளத்தில் இருக்கிறவர்களுக்கு இதே உதவியை செய்வதற்காக அனுப்பப்பட்டோம். இமய மலையின் தெற்கு சரிவுகளில்தான் இந்த நாடு இருக்கிறது. அந்தச் சமயத்தில் அந்த நாட்டில் ஒரேவொரு சபைதான் இருந்தது. ஒருசில பிரசுரங்கள் மட்டும்தான் நேபாளி மொழியில் இருந்தது.

 கொஞ்ச நாளிலேயே நிறைய பிரசுரங்கள் மொழிபெயர்க்கப்பட்டு அந்த பகுதியில் இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இன்றைக்கு நேபாளத்தில் இருக்கிற 40-க்கும் அதிகமான சபைகளில் கிட்டத்தட்ட 3,000 சாட்சிகள் இருக்கிறார்கள். 2022-ல் இயேசுவுடைய மரண நினைவுநாள் நிகழ்ச்சிக்கு 7,500-க்கும் அதிகமான ஆட்கள் வந்தார்கள்!

லேஹூ மொழியில் ஒரு சிற்றேடு

 1995ல் தாய்லாந்தில், ச்யாங் மைய் நகரத்தில் இருந்த மிஷனரிகள் லேஹூ மலைவாழ் பழங்குடியினரிடம் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். இந்த லேஹூ மொழி சீனா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் நாடுகளுடைய எல்லைப் பகுதிக்கு பக்கத்தில் வாழ்கிற மக்களால் பேசப்படுகிறது. இருந்தாலும் அந்தச் சமயத்தில் லேஹூ மொழியில் நம்மிடம் எந்தப் பிரசுரங்களும் கிடையாது.

 மிஷனரிகளோடு சேர்ந்து பைபிளைப் படித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர், “இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்ற சிறு புத்தகத்தை ‘தாய்’ என்ற மொழியிலிருந்து ‘லேஹூ’ மொழியில் மொழிபெயர்த்தார். பிறகு, அவரும் லேஹூ மொழி பேசுகிற மற்ற கிராம மக்களும் சேர்ந்து பணம் வசூலித்து, அந்தப் பணத்தையும் அவர் மொழிபெயர்த்த சிறு புத்தகத்தையும் கிளை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். கூடவே ஒரு கடிதத்தையும் அனுப்பினார்கள். அதில், அவர்கள் அந்த சிறு புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்ட உண்மையை லேஹூ மொழி பேசுகிற எல்லா மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதாக எழுதியிருந்தார்கள்.

 சில வருஷங்களுக்கு பிறகு, லேஹூ மொழிபெயர்ப்பாளர்களுக்கு மெப்ஸ்-ஐப் பயன்படுத்துவதற்கு பயிற்சி கொடுக்கிற ஒரு பெரிய வாய்ப்பு எனக்கும் ஹெலனுக்கும் கிடைத்தது. அதற்காக ச்யாங் மைய்-ல் இருக்கிற மொழிபெயர்ப்பு அலுவலகத்துக்கு போனபோது மொழிபெயர்ப்பாளராக சேவை செய்த ஒரு சகோதரரை பார்த்தோம். அவர் சமீபத்தில்தான் ஞானஸ்நானம் எடுத்திருந்தார். அவர் யார் தெரியுமா? “எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” சிறு புத்தகத்தை லேஹூ மொழியில் மொழிபெயர்த்த அந்த இளைஞர்தான் அவர். அவரை பார்த்தபோது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

 1995-ல், நானும் ஹெலனும் மறுபடியும் இந்தியாவுக்கு போனோம். அங்கே கிளை அலுவலகத்தில் இருந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு மெப்ஸ்-ஐப் பயன்படுத்தி வேலை செய்வதற்கு உதவி செய்தோம். இன்று, இந்தியாவில் இருக்கிற மக்கள் சத்தியத்தை தெரிந்துகொண்டு ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு முன்னேறுவதற்காக நிறைய மொழிகளில் ஏராளமான பிரசுரங்கள் கிடைக்கின்றன.

நிறைவான வாழ்க்கை

 1999-லிருந்து, நானும் ஹெலனும் பிரிட்டன் கிளை அலுவலகத்தில் சேவை செய்து வருகிறோம். உலக தலைமை அலுவலகத்தில் இருக்கிற மெப்ஸ் புரோகிராமிங் குழுவோடு சேர்ந்து சேவை செய்துகொண்டிருக்கிறோம். லண்டனில் வாழும் குஜராத்தி மற்றும் பஞ்சாபி மொழி பேசுகிற மக்களுக்கு நாங்கள் பெரும்பாலும் பிரசங்கிக்கிறோம். அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. jw.org-ல் எப்போதெல்லாம் ஒரு புது மொழியில் பிரசுரங்கள் வருகிறதோ, அப்போதெல்லாம் எங்கள் பகுதியில் அந்த மொழி பேசுபவர்களிடம் பிரசங்கிக்க நாங்கள் முயற்சி எடுக்கிறோம்.

 ‘பார்ட்டி’ ‘ஃபன்’ என்று ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் சின்ன வயதிலேயே யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்று குறிக்கோள் வைத்ததை நினைத்து இப்போது ரொம்ப சந்தோஷப்படுகிறேன். முழுநேர சேவை செய்ய வேண்டும் என்று நாங்கள் எடுத்த முடிவை நினைத்து ஹெலனும் நானும் வருத்தப்பட்டதே கிடையாது. நாங்கள் 30-க்கும் அதிகமான நாடுகளுக்கு போயிருக்கிறோம். அங்கே, எல்லா தேசத்தினருக்கும், கோத்திரத்தினருக்கும், மொழியினருக்கும் நல்ல செய்தி எப்படி போய் சேருகிறது என்பதை கண்கூடாக பார்த்தோம்!​—வெளிப்படுத்துதல் 14:6.

a இப்போது மல்டிலேங்வேஜ் எலக்ட்ரானிக் பப்ளிஷிங் சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது. டிஜிட்டல் பிரசுரங்களை தயாரிப்பதற்கும் மெப்ஸ் பயன்படுத்தப்படுகிறது.