பைபிள் ஆலோசனைகள் நம் காலத்துக்கு ஒத்துவருமா?
சிலர் இல்லை என்று சொல்கிறார்கள். 1920-ல் வெளிவந்த வேதியியல் பாடப்புத்தகத்தை வைத்துக்கொண்டு இன்று எப்படிப் பாடம் நடத்த முடியாதோ அதேபோல பைபிளை வைத்துக்கொண்டு இன்று எதையும் செய்ய முடியாது என்று ஒரு டாக்டர் சொன்னார். ஒன்றுக்கும் உதவாத பழைய கம்ப்யூட்டரின் கையேட்டை வைத்துக்கொண்டு ஒரு புது கம்ப்யூட்டரை இயக்குவீர்களா என்று பைபிளை மதிக்காத ஒருவர் கேட்கலாம். சுருக்கமாகச் சொன்னால், பைபிள் நம் காலத்துக்கு ஒத்துவரவே வராது என்று சிலர் சொல்கிறார்கள்.
இந்த நவீன உலகில், மிகவும் பழமையான ஒரு புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும் என்று சிலர் யோசிக்கலாம். வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகளும் புத்திமதிகளும் எண்ணற்ற வெப்சைட்டுகளில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. டிவி நிகழ்ச்சிகளில்கூட, மனநல மருத்துவர்களும், ஆலோசகர்களும், எழுத்தாளர்களும் வாழ்க்கைக்குப் பிரயோஜனமான விஷயங்களைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். அதோடு, சுயஉதவி புத்தகங்களும் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அந்தப் புத்தகங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகின்றன!
புதுப்புது தகவல்கள் சுலபமாகக் கிடைப்பதால், சுமார் 2,000 வருஷங்களுக்கு முன்பு எழுதி முடிக்கப்பட்ட பைபிளை நாம் வாசிக்க வேண்டுமா? பைபிளைப் பயன்படுத்துவது, பழைய வேதியியல் புத்தகத்தையோ பழைய கம்ப்யூட்டர் கையேட்டையோ பயன்படுத்துவது போல இருக்கிறது என்று பைபிளை மதிக்காத சிலர் சொல்வது சரியா? உண்மையிலேயே, அவர்களுடைய கருத்து தவறானது என்றுதான் சொல்ல வேண்டும்! அறிவியலும் தொழில்நுட்பமும் வேகமாக மாறிக்கொண்டே இருக்கின்றன; ஆனால், மனிதனின் நியாயமான எதிர்பார்ப்புகள் மாறியிருக்கின்றனவா? மக்கள், வாழ்க்கைக்கான அர்த்தத்தை இன்னமும் தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். வாழ்க்கையில் சந்தோஷமும், பாதுகாப்பும் இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். நட்புக்காகவும், பந்தபாசத்துக்காகவும் ஏங்குகிறார்கள்.
பைபிள் ஒரு பழமையான புத்தகமாக இருந்தாலும், மனிதர்களுடைய எதிர்பார்ப்புகளை அது பூர்த்தி செய்கிறது. நம்மைப் படைத்தவருடைய சக்தியின் தூண்டுதலால்தான் பைபிள் எழுதப்பட்டிருக்கிறது என்று அதுவே சொல்கிறது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துக்கும் தேவையான ஆலோசனைகளை பைபிள் தருகிறது. எந்தவொரு பிரச்சினையையும் சமாளிக்க அது உதவுகிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) அதில் இருக்கும் ஆலோசனைகள் காலத்தால் அழியாதவை என்றும் அது சொல்கிறது. “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது” என்று பைபிளே சொல்கிறது!—எபிரெயர் 4:12.
பைபிள் சொல்லும் விஷயங்களை நாம் நம்பலாமா? அது நம் காலத்துக்கு ஒத்துவருமா? இன்று நம் வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் அதில் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை, இந்த விசேஷ காவற்கோபுர இதழிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இது போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிப்பதுதான் இந்தப் பத்திரிகையின் நோக்கம்!