Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?

2 | பழிவாங்க துடிக்காதீர்கள்

2 | பழிவாங்க துடிக்காதீர்கள்

பைபிள் போதனை:

‘யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள். . . . கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள். . . . “‘பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்’ என்று யெகோவா சொல்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பதால், நீங்கள் பழிக்குப்பழி வாங்காதீர்கள்.’ரோமர் 12:17-19.

போதனையின் அர்த்தம்:

நமக்கு எதிராக யாராவது எதையாவது செய்தால் கோபம் வருவது இயல்புதான். ஆனால், நாம் பழிவாங்கக் கூடாது என்று கடவுள் நினைக்கிறார். அவரே அதைச் சரி செய்யும்வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.—சங்கீதம் 37:7, 10.

நீங்கள் இப்படிச் செய்யலாம்:

பழிவாங்குவது பகையைத்தான் வளர்க்கும்! ஏனென்றால், நமக்குத் தவறு செய்கிற தன்மை இருக்கிறது. அதனால், யாராவது உங்களுக்குக் கெடுதல் செய்தால் பதிலுக்குப் பதில் செய்யாதீர்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். அமைதியாகவும் சமாதானமாகவும் போவதற்கு முயற்சி செய்யுங்கள். சிலசமயங்களில், விஷயங்களைப் பெரிது படுத்தாமல் அவற்றை விட்டுத்தள்ளுவது ரொம்ப நல்லது. (நீதிமொழிகள் 19:11) ஒருவேளை, உங்களுக்கு நடந்த அநியாயத்தைப் பற்றி போலீஸிடமோ அதிகாரிகளிடமோ சொல்வது நல்லது என்று தோன்றினால், நீங்கள் அப்படியும் செய்யலாம்.

பழிவாங்குவது தனக்குத் தானே குழி வெட்டிக்கொள்வது போல்!

சமாதானமாக போவதற்கு நீங்கள் முயற்சி செய்தும் பிரச்சினை தீரவில்லை என்றால் என்ன செய்வது? அப்போதுகூட பழிக்குப்பழி வாங்காதீர்கள்! பழிவாங்குவது நிலைமையை இன்னும் மோசமாகத்தான் ஆக்கும். அதற்குப் பதிலாக, வெறுப்பு என்ற சங்கிலியை உடைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அந்தப் பிரச்சினைக்குக் கடவுளால் மட்டும்தான் ஒரு நல்ல தீர்வு கொடுக்க முடியும் என்று நம்புங்கள். பைபிள் சொல்கிற மாதிரி ‘அவரையே சார்ந்திருங்கள், அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார்.’—சங்கீதம் 37:3-5.