வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
3 | மனதிலிருந்து வெறுப்பை தூக்கி எறியுங்கள்
பைபிள் போதனை:
“நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.”—ரோமர் 12:2.
போதனையின் அர்த்தம்:
நாம் எப்படி யோசிக்கிறோம் என்பதை கடவுள் முக்கியமாக பார்க்கிறார். (எரேமியா 17:10) வெறுப்பை காட்டுவதுபோல் நாம் எதுவும் பேசவோ செய்யவோ கூடாது என்பது உண்மைதான். இருந்தாலும், அது மட்டுமே போதாது! ஏனென்றால், வெறுப்பு என்பது நம்முடைய இதயத்தில் முளைக்கிறது. அதனால், நம் எண்ணங்களில்கூட வெறுப்பு இருக்கக்கூடாது. அதை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் உண்மையிலேயே நாம் நம்மையே ‘மாற்றிக்கொள்கிறோம்’ என்றும் வெறுப்பு சங்கிலியை அறுத்து எறிகிறோம் என்றும் அர்த்தம்.
நீங்கள் இப்படிச் செய்யலாம்:
வேறு இனத்தையோ நாட்டையோ சேர்ந்த மக்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறீர்கள் என்பதை யோசித்து பாருங்கள். “நான் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறேன்? அவர்களைப் பற்றி எனக்கு என்ன தெரியுமோ அதை வைத்து நான் அப்படி நினைக்கிறேனா? அல்லது, பரவலாக இருக்கிற கருத்துக்களை வைத்து அப்படி நினைக்கிறேனா?” என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிடுகிற படங்களையும் பொழுதுபோக்குகளையும் தவிர்த்திடுங்கள். அதுமாதிரியான தகவல்கள் சோஷியல் மீடியாவில் இருந்தால் அதையும் படிக்காதீர்கள்.
இதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் வெறுப்பை எடுத்துப்போட பைபிள் உதவும்
நம் யோசனைகளை நேர்மையாக எடைபோட்டு பார்ப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனால், “இதயத்தில் இருக்கிற எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறிய” பைபிள் நமக்கு உதவும். (எபிரெயர் 4:12) அதனால், பைபிளை நன்றாகப் படியுங்கள். உங்களுடைய எண்ணங்கள் பைபிள் போதனைகளோடு ஒத்துப்போகிறதா என்று பாருங்கள். அப்படி இல்லையென்றால், அதன்படி யோசிப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள். மனதிலும் இதயத்திலும் ‘ஆழமாக வேரூன்றிய’ வெறுப்பை எடுத்துப்போட பைபிள் கண்டிப்பாக உதவும்.—2 கொரிந்தியர் 10:4, 5.