வெறுப்பு—தடம் தெரியாமல் போகும் காலம்!
வெறுப்பை நம் மனதிலிருந்து நாம் எடுத்துப்போட்டுவிடலாம். ஆனால், மற்றவர்கள் வெறுப்பை காட்டாதபடி நாம் அவர்களைத் தடுக்க முடியாது. இன்றைக்கும் அப்பாவி ஜனங்கள் வெறுப்புக்கு ஆளாகிகொண்டுதான் இருக்கிறார்கள். வெறுப்பே இல்லாத காலம் என்றைக்காவது வருமா? அப்படியென்றால், அதை யார் கொண்டு வருவார்?
யெகோவாவினால் மட்டும்தான் வெறுப்பு என்ற சங்கிலியை முழுமையாகவும் நிரந்தரமாகவும் அறுத்தெறிய முடியும். அவர் அப்படிச் செய்வார் என்று பைபிளும்கூட சொல்கிறது.—நீதிமொழிகள் 20:22.
வெறுப்பின் ஆணிவேரை கடவுள் பிடுங்கி எறிவார்
-
1. பிசாசாகிய சாத்தான். இன்றைக்கு இருக்கிற வெறுப்புக்கெல்லாம் சாத்தான்தான் காரணம். கடவுளையே எதிர்த்த தூதன் அவன்! அவனையும் அவனைப் போலவே வெறுப்பு காட்டுகிற எல்லாரையும் கடவுள் அழித்துவிடுவார்.—சங்கீதம் 37:38; ரோமர் 16:20.
-
2. சாத்தானுடைய வெறுப்பு நிறைந்த உலகம். இந்த உலகத்தில் நிறைய விஷயங்கள் வெறுப்பை ஊட்டி வளர்க்கின்றன. ஊழல் நிறைந்த அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும்கூட இதற்குக் காரணமாக இருக்கிறார்கள். இவர்களைப் போலவே வெறுப்புக்கு காரணமாக இருக்கிற எல்லாரையும், எல்லாவற்றையும் கடவுள் அழித்துவிடுவார். மக்களுடைய இரத்தத்தை உறிஞ்சி பிழைக்கிற பேராசை பிடித்த வியாபார உலகத்தையும் கடவுள் விட்டுவைக்க மாட்டார்.—2 பேதுரு 3:13.
-
3. மனிதர்களுடைய தவறு செய்யும் தன்மை. இந்தத் தன்மை எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. அதனால்தான் நாம் தவறாக யோசிக்கிறோம், தவறாக நடந்துகொள்கிறோம். (ரோமர் 5:12) நமக்குள் வெறுப்பு வளர்வதற்கும் அதை மற்றவர்களிடம் காட்டுவதற்கும்கூட இதுதான் காரணம். தவறு செய்கிற தன்மையை துரத்தியடிக்க கடவுள் நமக்கு உதவி செய்வார். பிறகு, வெறுப்பு தடம் தெரியாமல் அழிந்துவிடும்.—ஏசாயா 54:13.
வெறுப்பின் சுவடுகளே இல்லாத காலம் வரும்!
-
1. அநியாயம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கடவுளுடைய அரசாங்கம் இந்த உலகத்தைப் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும். அந்த ஆட்சிக்கு முடிவே இருக்காது. (தானியேல் 2:44) அந்தச் சமயத்தில், உலகத்தில் நீதியும், நியாயமும் மட்டும்தான் இருக்கும். மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்காது. எல்லா அநியாயத்தையும் கடவுள் சரி செய்துவிடுவார்.—லூக்கா 18:7.
-
2. பூமி எங்கும் சமாதானம் இருக்கும். போரோ வன்முறையோ இருக்காது. (சங்கீதம் 46:9) சமாதானத்தை விரும்புகிற மக்கள் மட்டுமே இருப்பார்கள். அதனால், இந்தப் பூமி ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கும்.—சங்கீதம் 72:7.
-
3. எந்தக் குறையும் இல்லாத உலகத்தில் மக்கள் என்றென்றும் வாழ்வார்கள். மனிதர்கள் எல்லாரும் கள்ளம்கபடம் இல்லாத உண்மையான அன்பை காட்டுவார்கள். (மத்தேயு 22:39) யாருமே வேதனைப்பட மாட்டார்கள். கசப்பான நினைவுகள்கூட அவர்களை வாட்டியெடுக்காது. (ஏசாயா 65:17) அந்தச் சமயத்தில், மனதிலிருந்து வெறுப்பை வேரோடு பிடுங்கி எறிந்த மனிதர்கள் “அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
அப்படி ஒரு உலகத்தில் வாழ ஆசைப்படுகிறீர்களா? இன்றைக்கும்கூட அப்படி ஒரு மக்கள் தொகுதி வாழ்கிறார்கள்! பைபிள் சொல்கிறபடி வாழ்வதால் அவர்கள் வெறுப்பை விட்டுத்தள்ளி இருக்கிறார்கள். (சங்கீதம் 37:8) அவர்கள் யார்? உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள்தான்! அவர்கள் எல்லாரும் வெவ்வேறு கலாச்சாரத்திலிருந்தும் பின்னணியிலிருந்தும் வந்திருக்கிறார்கள். இருந்தாலும், ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். ஒருவர்மேல் ஒருவர் அன்பைக் காட்டுகிறார்கள். ஒற்றுமையாக இருக்கிறார்கள்.—ஏசாயா 2:2-4.
அநியாயமாக நடத்தப்பட்டாலும் அதை எப்படிச் சமாளிப்பது என்று யெகோவாவின் சாட்சிகள் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டார்கள். அதை உங்களுக்கும் சொல்லித்தர ஆசைப்படுகிறார்கள். அதைக் கற்றுக்கொண்டால், உங்களால் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பை தூக்கிப்போட முடியும். மற்றவர்களை எப்படி அன்பாக நடத்தலாம் என்று கற்றுக்கொள்வீர்கள். அதுவும், நன்றிகெட்ட... வெறுப்பை காட்டுகிற... ஆட்களிடம் அன்பைக் காட்ட கற்றுக்கொள்வீர்கள். இப்படிச் செய்தால், இப்போதே உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும்; நிறைய நண்பர்களும் கிடைப்பார்கள். முக்கியமாக, வெறுப்பு கொஞ்சம்கூட இல்லாத கடவுளுடைய அரசாங்கத்தில் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.—சங்கீதம் 37:29.