வெறுப்பை வெல்ல முடியும்!
நீங்கள் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறீர்களா?
இல்லையென்றால், இன்னொருவர் வெறுப்புக்கு ஆளாவதைப் பார்த்திருக்கிறீர்களா? இனம், ஜாதி, ஊர், மதம் ஆகியவற்றை காரணம் காட்டி மக்கள் வெறுப்பை கொட்டித் தீர்க்கிறார்கள். இதுபோன்ற செய்திகளைத்தான் நாம் கேட்கிறோம். வெறுப்பால் செய்யப்படும் குற்றங்களைத் தடுப்பதற்கு அரசாங்கங்களும் சட்டங்களைப் போடுகின்றன.
வெறுப்பிலிருந்து வெறுப்புதான் முளைக்கும்! வெறுப்புக்கு ஆளானவர்களின் மனதில் பழிவாங்கும் எண்ணம் அணையாத நெருப்புபோல் எரிந்துகொண்டே இருக்கும். இதனால்தான், வெறுப்பு ஒரு சங்கிலியைப் போல தொடர்ந்துகொண்டே போகிறது.
வெறுப்பால் மற்றவர்கள் உங்களைத் தாழ்வாக நடத்தியிருக்கலாம், தவறாக முத்திரை குத்தியிருக்கலாம், கேலி கிண்டல் செய்திருக்கலாம். ஏன், மிரட்டிக்கூட இருக்கலாம். ஆனால், அடிதடி-சண்டை, கலவரம், வன்முறை, கற்பழிப்பு, கொலை, இனப்படுகொலை போன்ற கோர முகங்களும் வெறுப்புக்கு இருக்கின்றன!
வெறுப்பை எப்படி வெல்லலாம் என்பதைப் பற்றி இந்தப் பத்திரிகை சொல்லும். அதோடு, இந்தக் கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும்:
இந்த உலகம் ஏன் வெறுப்பால் நிறைந்திருக்கிறது?
வெறுப்பு என்ற சங்கிலித் தொடரை நாம் எப்படி உடைக்கலாம்?
வெறுப்பு தடம் தெரியாமல் போகும் காலம் என்றைக்காவது வருமா?