1 | கடவுளிடம் பேசுங்கள்—“உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்”
பைபிள் சொல்கிறது: “[கடவுள்] உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.
இதன் அர்த்தம் என்ன
நம் மனதில் இருக்கிற பாரத்தை பற்றி நாம் கடவுளிடம் சொல்ல வேண்டும். நாம் அப்படி செய்ய வேண்டும் என்று அவரும் எதிர்பார்க்கிறார். (சங்கீதம் 55:22) சின்ன பிரச்சினையோ பெரிய பிரச்சினையோ, அதை பற்றி நாம் அவரிடம் சொல்லலாம். நமக்கு ஒரு விஷயம் பிரச்சினையாக இருந்தால், அதை யெகோவாவும் பிரச்சினையாகத்தான் பார்க்கிறார். ஏனென்றால், அவருக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது; நம் உணர்வுகளை முக்கியமானதாக நினைக்கிறார். அதனால், மனஅமைதி தேவைப்படும்போது கடவுளிடம் பேசுவது, அதாவது ஜெபம் செய்வது முக்கியம்.—பிலிப்பியர் 4:6, 7.
ஜெபம் செய்வது நமக்கு எப்படி உதவும்?
மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, நாம் ரொம்பவே தனியாக உணரலாம். ஏனென்றால், மற்றவர்களால் நம்மை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. (நீதிமொழிகள் 14:10) ஆனால், நம் மனதுக்குள் என்னவெல்லாம் ஓடுகிறது என்பதை கடவுளிடம் சொல்லும்போது அவர் அதை காதுகொடுத்து கேட்கிறார்; நம்மை புரிந்துகொள்கிறார். யெகோவா நம்மை பார்க்கிறார், நம் போராட்டத்தையும் கவனிக்கிறார்; நம்முடைய வலி அவருக்கு தெரியும். நம்முடைய பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி, அதை பற்றி அவரிடம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.—2 நாளாகமம் 6:29, 30.
யெகோவாவிடம் பேசும்போது, அவருக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது என்ற நம்பிக்கை அதிகமாகிறது. ஒரு கவிஞர் இப்படி எழுதினார்: “நான் படுகிற கஷ்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். என் அடிமனதிலுள்ள வேதனையை அறிந்திருக்கிறீர்கள்.” (சங்கீதம் 31:7) ஜெபம் செய்யும்போது நாமும் இந்த கவிஞரை மாதிரியே உணர்வோம். நம் கஷ்டங்களை யெகோவா பார்க்கிறார் என்பதை தெரிந்துகொள்வதே, அவற்றை சமாளிக்க பலம் தரும். யெகோவா அந்த கஷ்டங்களை வெறுமனே பார்த்துவிட்டு சும்மா இருந்துவிட மாட்டார். அவர் நம்மை புரிந்துகொள்கிறார். நமக்கு தேவையான ஆறுதலும் உற்சாகமும் பைபிள் மூலம் கிடைப்பதற்கு வழி செய்கிறார்.