Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

3 | பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நபர்கள்

3 | பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நபர்கள்

பைபிள் சொல்கிறது: கடவுள் பக்தியுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் “நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் . . . இருந்தன.”—யாக்கோபு 5:17.

இதன் அர்த்தம் என்ன

நிறைய ஆண்களையும் பெண்களையும் பற்றி பைபிள் சொல்கிறது. அவர்களுக்கு வித்தியாசப்பட்ட உணர்ச்​சிகள் இருந்தன. அவர்களை பற்றி படிக்கும்போது, ‘அட, இவர்களும் என்னை மாதிரியே யோசித்திருக்கிறார்களே!’ என்று உங்களுக்கு தோன்றலாம்.

பைபிளில் சொல்லப்பட்ட நபர்களை பற்றி படிப்பது எப்படி உதவும்?

மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை! மனநோயால் அவதிப்படுகிறவர்களுக்கு இந்த ஆசை அதிகமாகவே இருக்கும். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சில நபர்களை பற்றி படிக்கும்போது, நமக்கு இருக்கும் அதே உணர்​வுகள் அவர்களுக்கும் இருந்ததை நம்மால் பார்க்க முடியும். இவர்களை பற்றி தெரிந்துகொள்வதால், நம்மை போலவே மனப்பதற்றத்தாலும் வேதனையான உணர்​வுகளாலும் கஷ்டப்பட்ட நிறைய பேர் இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வோம்.

  • ‘உதவிக்கு யாருமே இல்லை,’ ‘நிர்க்கதியாக நிற்கிறேன்’ என்றெல்லாம் நிறைய பேர் உணர்ந்திருப்பதாக பைபிள் காட்டுகிறது. ‘இதற்குமேல் என்னால் கொஞ்சம்கூட முடியாது!’ என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படித்தான் மோசேக்கும் எலியாவுக்கும் தாவீதுக்கும் தோன்றியது.​—எண்ணாகமம் 11:14; 1 ராஜாக்கள் 19:4; சங்கீதம் 55:4.

  • அன்னாள் என்ற ஒரு பெண்ணை பற்றி பைபிள் சொல்கிறது. அவளுக்கு குழந்தை இல்லை! அந்த கஷ்டம் போதாதென்று, அவளுடைய கணவரின் இன்னொரு மனைவி, மனதை குத்தி கிழிக்கும் வார்த்தைகளால் அவளை பழித்து பேசிக்கொண்டே இருந்தாள். இதனால், அன்னாள் ரொம்பவே “மனமுடைந்துபோயிருந்தாள்.”​—1 சாமுவேல் 1:​6, 10.

  • பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் யோபு என்ற நபருக்கு, தாங்க முடியாத சோகத்தை நெஞ்சில் சுமக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. கடவுள்பக்தியுள்ள ஒரு மனிதராக இருந்தாலும், வேதனையில் இப்படி புலம்பினார்: “எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது; உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை.”​—யோபு 7:16.

இவர்களெல்லாம் தங்களுக்குள் இருந்த சோகத்தை எப்படி சமாளித்தார்கள்... யோசிக்கும் விதத்தை எப்படி மாற்றினார்கள்... என்று தெரிந்துகொண்டால், நமக்கு இருக்கும் மனநோயை சமாளிக்க தெம்பு கிடைக்கும்.