4 | பைபிள் தரும் நல்ல ஆலோசனைகள்
பைபிள் சொல்கிறது: “வேதவசனங்கள் எல்லாம் . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.”—2 தீமோத்தேயு 3:16.
இதன் அர்த்தம் என்ன?
பைபிள் ஒரு மருத்துவ புத்தகம் இல்லை என்றாலும், அதில் நல்ல நல்ல ஆலோசனைகள் இருக்கின்றன. மனநோயால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த ஆலோசனைகள் உதவியாக இருக்கும். சில உதாரணங்களை பாருங்கள்:
பைபிள் ஆலோசனைகள் நமக்கு எப்படி உதவும்?
“ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை.”—மத்தேயு 9:12.
தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது என்றுதான் பைபிளும் சொல்கிறது. மருத்துவரிடம் போனதும், நோயை பற்றி நன்றாக படித்து தெரிந்துகொண்டதும், மனநோய் இருக்கிற நிறைய பேருக்கு உதவியாக இருந்திருக்கிறது.
“உடற்பயிற்சி . . . நன்மை தரும்.”—1 தீமோத்தேயு 4:8.
ஆரோக்கியமாக இருப்பதற்காக நேரத்தையும் சக்தியையும் செலவு செய்வது நல்லது. மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க அது உதவும். தவறாமல் உடற்பயிற்சி செய்ய திட்டம் போடுங்கள், சத்தான உணவு சாப்பிடுங்கள், நன்றாக தூங்குங்கள்.
“சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து. ஆனால், உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்.”—நீதிமொழிகள் 17:22.
பைபிளிலிருந்து ஆறுதலான சில பதிவுகளை வாசிப்பதும், எட்டிப் பிடிக்க முடிந்த சில குறிக்கோள்களை வைப்பதும் சந்தோஷமாக இருக்க உதவும். உங்களை சுற்றி நடக்கிற நல்ல விஷயங்களை கவனிப்பதும் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புவதும் பிரச்சினையை சமாளிக்க உதவும்.
“அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்.”—நிறைய விஷயங்களை செய்ய நீங்கள் ஆசைப்படலாம். ஆனால், எல்லாவற்றையும் உங்களால் தனியாக செய்ய முடியாமல் இருக்கலாம். அதனால், மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். நண்பர்களும் குடும்பத்தில் இருக்கிறவர்களும் உங்களுக்கு உதவ ஆசைப்படுவார்கள். ஆனால், எப்படி என்று அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதனால், என்ன உதவி தேவை என்று அவர்களிடம் சொல்லுங்கள். அதேசமயத்தில், அவர்களிடம் எதிர்பார்க்கிற விஷயத்தில் நியாயமாக இருங்கள். அவர்கள் உதவி செய்யும்போது அதற்கு நன்றி காட்டுங்கள்.
பைபிள் ஆலோசனையால் நன்மை அடைந்தவர்கள்
“என்னிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று எனக்கு தோன்றியது. அதனால், ஒரு டாக்டரிடம் போனேன். அவர் எனக்கு என்ன பிரச்சினை என்று விளக்கினார். அதை புரிந்துகொள்ளவும் உதவினார். உடல்நலம் முன்னேற என்னென்ன மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றும் சொன்னார்.”—நிக்கோல், a பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்.
“நான் தினமும் என் மனைவியோடு சேர்ந்து பைபிளை படிப்பேன். காலையிலேயே இப்படி படித்து ஒரு நாளை ஆரம்பிப்பதால், மனதை நல்ல எண்ணங்களால் நிரப்ப முடிகிறது. சிலநாள் எனக்கு ஒருமாதிரி இருக்கும். அப்போது, நான் படித்த ஒரு வசனம் எனக்கு ஆறுதலாக இருக்கும்.”—பீட்டர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்.
“என்னுடைய பிரச்சினையை பற்றி மற்றவர்களிடம் சொல்வது எனக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது. ஆனால், எனக்கு ஒரு ஃபிரெண்ட் இருந்தாள். அவள் நான் சொன்னதை புரிந்துகொண்டாள். என்னுடைய இடத்தில் அவளை வைத்து பார்த்தாள். அவள் என்னோடு இருந்தது எனக்கு ரொம்ப நன்றாக இருந்தது. நான் தனியாக இல்லை என்ற உணர்வை தந்தது.”—ஜீயூ, உணவு உட்கொள்ளும் கோளாறால் (ஒருவித மனநோய்) பாதிக்கப்பட்டவர்.
“எதை செய்தாலும் அதை ஒரு அளவோடு செய்யவும், நியாயமாக நடந்துகொள்ளவும் பைபிள் எனக்கு உதவியது. அதாவது, ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்துகொண்டு இல்லாமல், போதுமான அளவு ஓய்வு எடுப்பதும் முக்கியம் என்பதை அது எனக்கு புரிய வைத்தது. என்னுடைய மனதை வாட்டுகிற பிரச்சினைகளை சமாளிக்க பைபிளில் இருக்கிற ஞானம் எனக்கு உதவியது.”—திமோத்தி, அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்.
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.