Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எச்சரிக்கையை கேளுங்கள், உயிர் தப்புங்கள்!

எச்சரிக்கையை கேளுங்கள், உயிர் தப்புங்கள்!

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு வடமேற்கு பகுதியில் சிமியுலூ என்ற தீவு இருக்கிறது. டிசம்பர் 26, 2004 அன்று 9.1 ரிக்டர் அளவில் பயங்கர பூமியதிர்ச்சி அங்கு ஏற்பட்டது. உடனே எல்லாரும் கடலை பார்த்தார்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு கடல் உள்வாங்கியது. உடனடியாக, “சுமாங்! சுமாங்!!” (அவர்கள் மொழியில் சுனாமி என்று அர்த்தம்) என்று கத்திக்கொண்டு பக்கத்தில் இருக்கும் மலைகளுக்கு ஓடினார்கள். வெறும் அரை மணிநேரத்தில், ராட்சத கடல் அலைகள் ஊருக்குள் புகுந்து அங்கிருந்த வீடுகள், கிராமங்கள் என அனைத்தையும் நாசப்படுத்தியது.

முதலில், சிமியுலூ தீவைதான் சுனாமி தாக்கியது. ஆனால், அங்கிருந்த 78,000 பேரில் 7 பேர்தான் சுனாமியால் இறந்துபோனார்கள். அங்கு மட்டும் எப்படி நிறைய பேர் உயிர் தப்பினார்கள்? * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) பொதுவாக, தீவுகளில் இருக்கும் மக்கள் இப்படி சொல்வார்கள்: “பயங்கரமா பூமி அதிர்ந்து, கடல் உள்வாங்குனா, உடனடியா பக்கத்துல இருக்கிற மலைகளுக்கு ஓடிப்போயிடணும். ஏன்னா, கடல் தண்ணி சீக்கிரத்துல ஊருக்குள்ள வந்துடும்.” சிமியுலூ மக்கள் சுனாமியை பற்றி ஏற்கெனவே நன்றாக தெரிந்து வைத்திருந்ததால், கடல் அலைகளில் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்தே சுனாமி வருமா வராதா என்று கண்டுபிடிக்க முடிந்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை கேட்டு கவனமாக நடந்துகொண்டதால், அந்த மக்கள் உயிர் பிழைத்தார்கள்.

சீக்கிரத்தில், “மிகுந்த உபத்திரவம்” என்ற பயங்கரமான அழிவு வரப்போவதாக பைபிள் சொல்கிறது. “அப்போது மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதன் பின்பும் வரப்போவதில்லை” என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 24:21) இந்த அழிவு மனிதர்களாலோ, இயற்கை பேரழிவுகளாலோ நடக்காது. அதுமட்டுமல்ல, வரப்போகிற அழிவில் பூமிக்கு எந்த ஆபத்தும் இருக்காது. ஏனென்றால், பூமி அழியவே அழியாது என்று கடவுள் சொல்லியிருக்கிறார். (பிரசங்கி 1:4) இந்த அழிவை கடவுள் கொண்டுவரப்போகிறார். அதில், “பூமியை நாசமாக்குபவர்களை” அவர் அழித்து, இன்று இருக்கும் எல்லா கஷ்டத்துக்கும் அநியாயத்துக்கும் முடிவு கட்டுவார். (வெளிப்படுத்துதல் 11:18; நீதிமொழிகள் 2:22) அது நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை போன்ற பாதிப்புகளால் இன்று நிறைய அப்பாவி மக்கள் சாகிறார்கள். ஆனால், கடவுள் கொண்டுவரும் அழிவில், அப்பாவி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. நீதிமான்கள் பூமியில் என்றைக்கும் வாழ்வார்கள் என்று நம்மைப் படைத்த கடவுளான யெகோவா பைபிளில் சொல்லியிருக்கிறார். (1 யோவான் 4:8; சங்கீதம் 37:29) வரப்போகிற “மிகுந்த உபத்திரவம்” என்ற அந்த பெரிய அழிவில் இருந்து தப்பிக்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எச்சரிக்கையை கேட்டு அதன்படி நடக்க வேண்டும்!

உலகம் மாறிக்கொண்டு இருக்கிறது

கடவுள் கொண்டுவரும் அழிவு எப்போது வரும் என்று பைபிள் சொல்வதில்லை. “அந்த நாளும் அந்த நேரமும் பரலோகத் தகப்பன் [அதாவது, கடவுள்] ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது” என்று இயேசு சொன்னார். அதனால், “விழிப்புடன் இருங்கள்” என்றும் எச்சரித்தார். (மத்தேயு 24:36; 25:13) இயேசு ஏன் அப்படி சொன்னார்? ஏனென்றால், கடவுள் அழிவை கொண்டுவருவதற்கு முன்பாக என்ன நடக்கும் என்று பைபிள் சொல்கிறது. கடலில் ஏற்பட்ட சில மாற்றங்களை வைத்து சிமியுலூ மக்கள் சுனாமி வரப்போவதை கண்டுபிடித்தார்கள், இல்லையா? அதேபோல, நாமும் இந்த உலகத்தில் நடக்கும் மாற்றங்களை வைத்து கடவுள் கொண்டுவரும் அழிவு பக்கத்தில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதைப் பற்றி மேலே இருக்கும் பெட்டியில் பாருங்கள்.

அந்த பெட்டியில் சொல்லி இருக்கும் சில சம்பவங்கள் இதற்கு முன்பும்கூட நடந்திருக்கிறது என்று சிலர் சொல்லலாம். ஆனால், “இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது” முடிவு பக்கத்தில் வந்துவிட்டது என்று புரிந்துகொள்ளுங்கள் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:33) அப்படியென்றால், மனித சரித்திரத்தில் இந்த சம்பவங்கள் எல்லாம் (1) எப்போது உலகளவில் நடந்திருக்கிறது? (2) எப்போது ஒரே சமயத்தில் நடந்திருக்கிறது? (3) எப்போது முன்பு இருந்ததைவிட படுமோசமாகி இருக்கிறது? இந்த கேள்விகளை எல்லாம் யோசித்துப் பார்க்கும்போது, கடவுள் அந்த பெரிய அழிவைக் கொண்டுவரும் காலத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கடவுள் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார்

“பேரழிவுகள் வருவதை முன்னதாகவே எச்சரிக்கும் கருவிகள் . . . உயிர் தப்பிக்க ரொம்ப உதவியாக இருக்கும்” என்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒருவர் சொன்னார். 2004-ல் வந்த சுனாமிக்கு பிறகு, பாதிக்கப்பட்ட எல்லா இடங்களிலும் மக்களை எச்சரிப்பதற்கு சில கருவிகளை வைத்தார்கள். எதிர்காலத்தில் நிறைய உயிர்களை அழிவிலிருந்து காப்பாற்ற இந்த முயற்சியை எடுத்தார்கள். அதேபோல, கடவுளும் அழிவைக் கொண்டுவருவதற்கு முன்பாக நிறைய எச்சரிக்கைகளை கொடுத்திருக்கிறார். பைபிள் அதை இப்படி சொல்கிறது: “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14.

யெகோவாவின் சாட்சிகள், மக்களை சந்தித்து இந்த நல்ல செய்தியை சொல்கிறார்கள். அதை சொல்வதற்காக, கடந்த வருடத்தில் மட்டும் ஏறக்குறைய 190 கோடி மணிநேரங்களை செலவு செய்திருக்கிறார்கள். இந்த வேலையை 700 மொழிகளிலும், 240 நாடுகளிலும் செய்து வருகிறார்கள். அப்படியென்றால், முடிவு சீக்கிரத்தில் வரப்போகிறது என்பதை இது காட்டுகிறது, இல்லையா? மக்கள்மீது யெகோவாவின் சாட்சிகளுக்கு அன்பு இருப்பதால்தான், கடவுள் கொண்டுவரும் அழிவைப் பற்றி சொல்வதற்கு அவர்கள் நிறைய முயற்சி எடுக்கிறார்கள். (மத்தேயு 22:39) வரப்போகும் இந்த அழிவைப் பற்றி இப்போது நீங்களும் தெரிந்துகொண்டீர்கள். அதற்கு காரணம் யெகோவா உங்கள் மேல் வைத்திருக்கும் அன்புதான். “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்றே [கடவுள்] விரும்புகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 3:9) கடவுள் உங்கள்மீது காட்டும் அன்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? கடவுள் கொடுக்கும் எச்சரிப்பை கேட்டு நடப்பீர்களா?

தப்பித்துக்கொள்ளுங்கள்!

சிமியுலூ மக்கள் கடல் உள்வாங்கியதை பார்த்த உடனே, பக்கத்தில் இருக்கும் மலைகளுக்கு ஓடினார்கள். கடல் அலைகள் வரும் வரைக்கும் அவர்கள் காத்திருக்கவில்லை. உடனடியாக ஓடியதால்தான் உயிர் பிழைத்தார்கள். கடவுள் கொண்டுவரும் அழிவிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு விதத்தில், நீங்களும்கூட மலைகளுக்கு ஓடிப்போக வேண்டும். அது எப்படி? ஏசாயா என்னும் பைபிள் எழுத்தாளர் “கடைசி நாட்களில்” நாம் செய்ய வேண்டியதைப் பற்றி இப்படி சொல்கிறார்: ‘நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு [அதாவது, மலைக்கு] . . . போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்.’—ஏசாயா 2:2, 3.

ஒரு மலைமேல் நின்று பார்த்தால், கீழே இருப்பதை தெளிவாகப் பார்க்க முடியும். அதோடு, ஆபத்து வரும்போது நமக்கு பாதுகாப்பும் கிடைக்கும். இன்று உலகம் முழுவதும் நிறைய பேர் பைபிளை படித்து, கடவுளைப் பற்றி கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அதனால், அவர்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:16, 17) கடவுள் காட்டும் வழியில் அவர்கள் நடப்பதால் கடவுள் அவர்களை பாதுகாக்கிறார், ஆசீர்வதிக்கிறார்.

இந்த ஆபத்தான காலத்தில், கடவுள் கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்வீர்களா? அவர் காட்டும் பாதுகாப்பான வழியில் நடக்க விரும்புகிறீர்களா? இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் இருந்து, நாம் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோமா இல்லையா என்பதை கவனமாக யோசித்துப் பாருங்கள். உங்கள் ஊரில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். பைபிளை நன்றாக புரிந்துகொள்ளவும், அது நம் வாழ்க்கைக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளவும் அவர்கள் உங்களுக்கு சொல்லித் தருவார்கள். அல்லது, www.pr418.com என்ற எங்கள் வெப்சைட்டை பாருங்கள். அதில், BIBLE TEACHINGS > BIBLE QUESTIONS ANSWERED என்ற பகுதியைப் பாருங்கள். ▪ (w16-E No.2)

^ பாரா. 3 2004-ல் வந்த சுனாமியால் ஏறக்குறைய 2,20,000 பேர் இறந்துபோனார்கள். இதுவரை நடந்த பயங்கரமான அழிவுகளில் இதுவும் ஒன்று!