Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | கடவுள் தந்த மிகச்சிறந்த பரிசு உங்களுக்காக!

கடவுள் கொடுத்த பரிசுக்கு எப்படி நன்றி காட்டலாம்?

கடவுள் கொடுத்த பரிசுக்கு எப்படி நன்றி காட்டலாம்?

‘கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது. . . . அவர் எல்லாருக்காகவும் இறந்திருப்பதால், வாழ்கிறவர்கள் இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்காக இறந்தவருக்காக வாழ வேண்டும்.’—2 கொரிந்தியர் 5:14, 15.

யாராவது நமக்கு ஒரு நல்ல பரிசைக் கொடுத்தால் அவருக்கு நாம் நிச்சயம் நன்றி சொல்வோம். அப்படிச் செய்வதுதான் சரி என்று இயேசுவும் சொன்னார். கொடூரமான வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த பத்து பேரை இயேசு குணப்படுத்தினார். அந்தக் காலத்தில் அந்த வியாதிக்கு மருந்தே இல்லை. அவர் குணப்படுத்திய பத்து பேரில் ஒருவன், “சத்தமாகக் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டே திரும்பி வந்தான்.” இயேசு அவனிடம், “பத்துப் பேர் சுத்தமாக்கப்பட்டார்களே, மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்று கேட்டார். (லூக்கா 17:12-17) மற்றவர்கள் நமக்கு செய்யும் நல்லதை நாம் சீக்கிரத்தில் மறந்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

மீட்புவிலையைப் போல் மிகச்சிறந்த பரிசு வேறு எதுவுமே இருக்க முடியாது. கடவுள் உங்களுக்கு கொடுத்த இந்தப் பரிசுக்கு எப்படி நன்றி காட்டலாம்?

  • பரிசைக் கொடுத்தவரைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இயேசு மீட்புவிலையைக் கொடுத்ததால் எல்லாருக்கும் தானாகவே முடிவில்லாத வாழ்க்கை கிடைத்துவிடாது. ஜெபத்தில் இயேசு என்ன சொன்னார் என்று கவனியுங்கள். “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.” (யோவான் 17:3) ஒருவேளை சின்ன வயதில் யாராவது உங்கள் உயிரை காப்பாற்றியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிய வருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த நபர் யார், அவர் எதற்காக உங்களைக் காப்பாற்றினார் என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள், இல்லையா? அதேபோல்தான் யெகோவாவும் நம் உயிரைக் காப்பாற்ற மீட்புவிலை என்ற ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவரோடு ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது.—யாக்கோபு 4:8.

  • மீட்புவிலையில் விசுவாசம் வையுங்கள். “மகன்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 3:36) இயேசுவின் மேல் விசுவாசம் வைப்பது என்றால் என்ன? வெறுமனே, ‘இயேசுமேல் எனக்கு விசுவாசம் இருக்கிறது’ என்று சொன்னால் மட்டும் போதாது. நம் விசுவாசத்தைச் செயலில் காட்ட வேண்டும். (யாக்கோபு 2:17) இதை புரிந்துகொள்ள இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். ஒருவர் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பரிசிலிருந்து நன்மையடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் பங்கில் நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும். அந்தப் பரிசை நீங்கள் அவரிடம் இருந்து வாங்க வேண்டும். பிறகு அதைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். அதேபோல் இயேசுவின் மீட்புவிலையில் இருந்து நன்மையடைய உங்கள் பங்கில் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில், எப்படி வாழ்ந்தால் கடவுளுக்கு பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதன்படி வாழுங்கள். * செய்த தவறுகளுக்கு கடவுளிடம் மன்னிப்பு கேளுங்கள். சுத்தமான மனசாட்சியைத் தரும்படி ஜெபம் செய்யுங்கள். இயேசு கொடுத்த மீட்புவிலையில் விசுவாசம் வைக்கிற எல்லாருக்கும் எதிர்காலத்தில் சமாதானமான, பாதுகாப்பான, வளமான வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பிக்கை வையுங்கள்.—எபிரெயர் 11:1.

  • இயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். மீட்புவிலை என்ற ஏற்பாட்டை நாம் ஒவ்வொரு வருஷமும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக இயேசு ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். “என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று அவர் சொன்னார். (லூக்கா 22:19) ஏப்ரல் 11, 2017, செவ்வாய்க்கிழமை அன்று சூரியன் மறைந்த பிறகு யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்துவார்கள். அந்த நிகழ்ச்சி, ஒரு மணிநேரத்துக்கு நடக்கும். இயேசு உயிரைக் கொடுத்ததால், இப்போதும் எதிர்காலத்திலும் நமக்கு என்ன நன்மை என்பதைப் பற்றி ஒரு பேச்சு கொடுக்கப்படும். போன வருஷம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த வருஷம் நடக்கும் நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களோடு சேர்ந்து நீங்களும் கடவுள் கொடுத்த மீட்புவிலை என்ற பரிசுக்கு நன்றி காட்டுங்கள்.

^ பாரா. 7 கடவுளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் அவரோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்வதற்கும் சிறந்த வழி அவர் கொடுத்த புத்தகமான பைபிளைப் படிப்பதுதான். பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். www.pr418.com என்ற எங்கள் வெப்சைட்டைப் பாருங்கள்.