நிறைவேறப்போகிற வாக்குறுதிகள்!
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நல்ல செய்தி இன்று பூமி முழுவதும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது; இந்த வேலையைப் பற்றித்தான் இயேசு முன்னறிவித்திருந்தார். (மத்தேயு 24:14) இந்த ராஜ்யம் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம் என்று தானியேல் புத்தகம் சொல்கிறது. இந்தப் புத்தகத்தின் 2-வது அதிகாரத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசனம், பூர்வ பாபிலோன் அரசாங்கம் முதல் இன்றுவரை இருக்கிற பலம்படைத்த அரசாங்கங்களைப் பற்றிச் சொல்கிறது. இந்த அதிகாரத்தின் 44-வது வசனம், எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒரு விஷயத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறது:
“பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது. அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது. அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”
கடவுளுடைய அரசாங்கம் மற்ற எல்லா மனித அரசாங்கங்களையும் நீக்கிவிட்டு, பூமியில் சமாதானத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் என்று இந்தத் தீர்க்கதரிசனமும், பைபிளிலுள்ள வேறுசில தீர்க்கதரிசனங்களும் முன்னறிவிக்கின்றன. அந்த அரசாங்கத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும்? சீக்கிரத்தில் நிறைவேறப்போகிற கடவுளுடைய இந்த அருமையான வாக்குறுதிகளில் சிலவற்றைக் கவனியுங்கள்.
-
போர் இருக்காது
சங்கீதம் 46:9: “[கடவுள்] பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார். போர் ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்கிறார்.”
மனிதர்களின் உயிரைப் பறிக்கும் போர் ஆயுதங்களைத் தயாரிப்பதற்காக இன்று வீணாக்கப்படுகிற அத்தனை பணமும் திறமையும் மனிதர்களுடைய நன்மைக்காகப் பயன்படுத்தப்பட்டால் இந்த உலகம் எவ்வளவு அருமையாக இருக்கும்! இந்த வாக்குறுதி, கடவுளுடைய அரசாங்கத்தில் நிச்சயம் நிறைவேறும்.
-
நோய் இருக்காது
ஏசாயா 33:24: “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”
இதய நோய், புற்றுநோய், மலேரியா, அல்லது வேறு எந்தவொரு நோயுமே இல்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! அப்படிப்பட்ட உலகத்தில், மருத்துவமனைகளுக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் அவசியமே இருக்காது. அப்போது, மக்கள் பூரண ஆரோக்கியத்தோடு பூமியில் வாழ்வார்கள்!
-
உணவு பற்றாக்குறை இருக்காது
சங்கீதம் 72:16: “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”
பூமியில் விளைச்சல் அமோகமாக இருக்கும். அப்போது, எல்லாருக்கும் உணவு தாராளமாகக் கிடைக்கும். பஞ்சமோ ஊட்டச்சத்துக் குறைவோ இருக்காது.
-
வலி, வேதனை, மரணம் இருக்காது
வெளிப்படுத்துதல் 21:4: “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”
பூஞ்சோலை பூமியில் நாம் என்றென்றும் பரிபூரணமாக வாழ்வோம் என்று நம் படைப்பாளரான யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்.
“அதைக் கண்டிப்பாகச் செய்து முடிக்கும்”
இதெல்லாம் கனவுபோல் தோன்றுகிறதா? பைபிளிலுள்ள இந்த வாக்குறுதிகள் நிறைவேறினால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனாலும், சாவே இல்லாமல் எப்படி வாழ முடியும் என்று அவர்கள் யோசிக்கிறார்கள். அவர்கள் அப்படி யோசிப்பது நியாயம்தான். ஏனென்றால், இதுவரை எந்தவொரு மனிதனும் சாகாமல் உயிர்வாழ்ந்ததே கிடையாது.
பாவத்துக்கும் மரணத்துக்கும் மக்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். வலியும் வேதனையும் அவர்களைக் காலம் காலமாக வாட்டி வதைத்திருக்கிறது; அதனால், வாழ்க்கை என்றாலே கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், நாம் இப்படிக் கஷ்டப்பட வேண்டும் என்பது நம் படைப்பாளரான யெகோவாவின் நோக்கமே கிடையாது.
தன்னுடைய வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவரே இப்படி ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்: “என் வார்த்தை . . . பலன் தராமல் என்னிடம் திரும்பி வராது. நான் விரும்புவதை நிச்சயம் நிறைவேற்றும். எதற்காக அதைச் சொன்னேனோ அதைக் கண்டிப்பாகச் செய்து முடிக்கும்.”—ஏசாயா 55:11.
யெகோவா “பொய் சொல்ல முடியாத கடவுள்” என்று பைபிள் சொல்கிறது. (தீத்து 1:3) அதனால், எதிர்காலத்தைப் பற்றிய அருமையான வாக்குறுதிகளை அவர் கொடுத்திருப்பதால், நாம் இப்படி யோசித்துப் பார்ப்பது நல்லது: உண்மையிலேயே, பூஞ்சோலை பூமியில் மனிதர்களால் என்றென்றும் வாழ முடியுமா? கடவுளுடைய வாக்குறுதிகளிலிருந்து நன்மையடைய நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கான பதில்களை அடுத்துவரும் கட்டுரைகளில் நீங்கள் கவனிக்கலாம்.