அட்டைப்படக் கட்டுரை | நான்கு குதிரைவீரர்களின் சவாரி—நம்மை எப்படிப் பாதிக்கிறது
நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?
இந்த நான்கு குதிரைவீரர்களைப் பற்றி படிக்கும்போது உங்களுக்குப் பயமாக இருக்கலாம். இந்த விஷயங்கள் புரியாத புதிர்போல் தோன்றலாம். ஆனால், அப்படி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் குதிரைவீரர்கள் எதற்கு அடையாளமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பைபிளும் இன்றைய சரித்திரமும் உதவி செய்கின்றன. ஒவ்வொரு குதிரைவீரருடைய சவாரியும் ஒருவிதமான அழிவைக் குறித்தாலும் அதை நினைத்து கவலைப்பட வேண்டாம். சீக்கிரத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்ல எதிர்காலம் வரப்போவதை இந்தக் குதிரைவீரர்களின் சவாரி குறிக்கிறது. எப்படியென்று இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்வீர்கள். முதலில், ஒவ்வொரு குதிரைவீரரும் எதற்கு அடையாளமாக இருக்கிறார் என்று பார்க்கலாம்.
வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவர்
“ஒரு வெள்ளைக் குதிரை வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவரின் கையில் ஒரு வில் இருந்தது. அவருக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவர் ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுப் போனார், ஜெயித்து முடிப்பதற்காகப் புறப்பட்டுப் போனார்.”—வெளிப்படுத்துதல் 6:2.
வெள்ளைக் குதிரையில் சவாரி செய்யும் அந்த வீரர் யார்? அதே வெளிப்படுத்துதல் புத்தகம் அதற்கான பதிலைத் தருகிறது. இந்தக் குதிரைவீரரை “கடவுளுடைய வார்த்தை” என்று அந்தப் புத்தகம் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 19:11-13) கடவுளின் சார்பாகப் பேசுவதால் இயேசுவுக்குத்தான் வார்த்தை என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. (யோவான் 1:1, 14) “ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்” என்று அவர் அழைக்கப்படுகிறார். அவர் ‘நம்பகமானவராகவும் உண்மையானவராகவும்’ இருக்கிறார். (வெளிப்படுத்துதல் 19:11, 16) இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ராஜாவாகவும் மாவீரராகவும் செயல்படும் அதிகாரம் இயேசுவுக்கு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அதிகாரத்தை அவர் நிச்சயம் தவறாகப் பயன்படுத்த மாட்டார்.
ஒரு ராஜாவாக ஜெயித்து முடிப்பதற்கான அதிகாரத்தை இயேசுவுக்கு யார் கொடுத்தது? (வெளிப்படுத்துதல் 6:2) தானியேல் பார்த்த தரிசனத்திலிருந்து அதற்கான பதிலைத் தெரிந்துகொள்ளலாம். ‘மனிதகுமாரனைப் போன்ற ஒருவரை,’ அதாவது மேசியாவை, தானியேல் அந்தத் தரிசனத்தில் பார்த்தார். அவருக்கு “அரசாட்சியும் மேன்மையும் ராஜ்யமும்” கொடுக்கப்பட்டிருந்தன. ‘யுகம் யுகமாக வாழ்கிறவரான’ யெகோவா தேவனே * அதை அவருக்குக் கொடுத்தார். (தானியேல் 7:13, 14) மக்களை ஆட்சி செய்வதற்கும் நியாயந்தீர்ப்பதற்கும் தேவையான அதிகாரத்தையும் பலத்தையும் எல்லா சக்தியும் படைத்த யெகோவாதான் இயேசுவுக்குக் கொடுத்தார். பெரும்பாலும், நீதியைக் குறிப்பதற்காக பைபிளில் வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், கடவுளுடைய மகன் செய்யப்போகும் நீதியான போருக்கு வெள்ளைக் குதிரை படமாக இருப்பது பொருத்தமாக இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 3:4; 7:9, 13, 14.
இந்தக் குதிரைவீரர்கள் எப்போது அவர்களுடைய சவாரியை ஆரம்பித்தார்கள்? முதல் குதிரைவீரரான இயேசு, கிரீடம் சூட்டப்பட்ட உடனேயே தன்னுடைய சவாரியை ஆரம்பித்தார். (வெளிப்படுத்துதல் 6:2) அவர் எப்போது பரலோகத்தில் ராஜாவாக கிரீடம் சூட்டப்பட்டார்? அவர் இறந்து, பரலோகத்துக்குப் போய் கொஞ்சக் காலம் காத்திருந்தார். பிறகுதான் அவர் ராஜாவாக ஆனார். (எபிரெயர் 10:12, 13) அவர் காத்திருக்கும் காலப்பகுதி எப்போது முடிவுக்கு வரும் என்பதையும், அவருடைய ஆட்சி பரலோகத்தில் எப்போது ஆரம்பிக்கும் என்பதையும் தன் சீஷர்கள் புரிந்துகொள்ள இயேசு சில அடையாளங்களைச் சொல்லியிருந்தார். பரலோகத்தில் தன்னுடைய ஆட்சியை அவர் ஆரம்பிக்கும்போது பூமியில் நிலைமைகள் எப்போதையும்விட படுமோசமாக ஆகும் என்று அவர் சொல்லியிருந்தார். அதாவது போர், பஞ்சம், கொள்ளைநோய் போன்றவை வரும் என்று சொல்லியிருந்தார். (மத்தேயு 24:3, 7; லூக்கா 21:10, 11) 1914-ல் முதல் உலகப் போர் ஆரம்பித்த பிறகுதான், உலக நிலைமைகள் ரொம்ப மோசமாயின. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ‘கடைசி நாட்கள்’ ஆரம்பித்துவிட்டது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.—2 தீமோத்தேயு 3:1-5.
ஆனால், 1914-ல் இயேசு ராஜாவான பிறகும் உலக நிலைமைகள் ஏன் மோசமாகிக்கொண்டே போகின்றன? ஏனென்றால், 1914-ல் இயேசு பூமியை ஆட்சி செய்ய ஆரம்பிக்கவில்லை. பரலோகத்தில்தான் அவருடைய ஆட்சியை ஆரம்பித்தார். பரலோகத்தில் அப்போது போர் நடந்தது. புதிதாக நியமிக்கப்பட்ட ராஜா இயேசு (மிகாவேல் என்றும் அழைக்கப்படுகிறார்) சாத்தானையும் அவனைச் சேர்ந்த பேய்களையும் பூமிக்குத் தள்ளினார். (வெளிப்படுத்துதல் 12:7-9, 12) இனிமேலும் சாத்தானால் பரலோகத்துக்குப் போக முடியாது என்பதாலும் அவனுக்குக் கொஞ்சக் காலம் மட்டுமே மீந்திருக்கிறது என்பதாலும் எப்போதையும்விட இப்போது பயங்கர கோபமாக இருக்கிறான். ஆனால், சாத்தானின் செல்வாக்கைப் பூமியிலிருந்து நீக்குவதன் மூலம் கடவுள் தன்னுடைய விருப்பத்தைச் சீக்கிரத்தில் நிறைவேற்றப்போகிறார். (மத்தேயு 6:10) நாம் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம் என்பதை மற்ற மூன்று குதிரைவீரர்களும் எப்படி நிரூபிக்கிறார்கள் என்று பார்க்கலாம். முதல் குதிரைவீரரைப் போல் மற்ற மூன்று குதிரைவீரர்களும் ஒரு குறிப்பிட்ட நபரைக் குறிப்பதில்லை. மனித சமுதாயத்தைப் பாதிக்கிற மோசமான உலக நிலைமைகளைக் குறிக்கிறார்கள்.
சிவப்புக் குதிரையில் சவாரி செய்பவன்
“அப்போது வேறொரு குதிரை வந்தது. அது சிவப்புக் குதிரை; அதன்மேல் உட்கார்ந்திருந்தவனுக்கு, பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும் அதிகாரம் கொடுக்கப்பட்டது; பூமியில் இருக்கிற மக்கள் ஒருவரை ஒருவர் வெட்டிப்போடுவதற்காக அந்த அதிகாரம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது; அவனுக்கு ஒரு பெரிய வாளும் கொடுக்கப்பட்டது.”—வெளிப்படுத்துதல் 6:4.
இந்தக் குதிரைவீரன் போருக்குப் படமாக இருக்கிறான். அவன் ஏதோ சில தேசங்களிலிருந்து மட்டுமல்ல, முழு பூமியிலிருந்தும் சமாதானத்தை எடுத்துப்போடுகிறான். 1914-ல்தான், சரித்திரத்திலேயே முதல்முறையாக உலகப் போர் நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது உலகப் போர் நடந்தது. முதல் உலகப் போரைவிட இது மோசமாக இருந்தது. 1914-லிருந்து போராலும் ஆயுதம் ஏந்திய போராட்டங்களாலும் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்துபோயிருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. அவற்றால் பலர் படுகாயமும் அடைந்திருக்கிறார்கள்.
இன்று போர்கள் எந்தளவு தீவிரமாக இருக்கின்றன? மனித உயிரை பூமியிலிருந்து நிரந்தரமாக துடைத்தழிக்கும் அளவுக்கு தேசங்கள் சக்திபடைத்ததாக இருக்கின்றன. இந்த உலகத்தில் சமாதானத்தைக் கொண்டுவருவதாகச் சொல்லும் ஐக்கிய நாட்டு சங்கம் போன்ற அமைப்புகளால்கூட இந்தச் சிவப்புக் குதிரைவீரனுடைய சவாரியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கறுப்புக் குதிரையில் சவாரி செய்பவன்
“ஒரு கறுப்புக் குதிரை வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவனின் கையில் ஒரு தராசு இருந்தது. பின்பு, நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து ஒரு குரல் வருவதுபோல் எனக்குக் கேட்டது; அது, ‘ஒரு தினாரியுவுக்கு ஒரு படி கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கு [அதாவது, ஒரு தினாரியுவுக்கு] மூன்று படி பார்லி; ஒலிவ எண்ணெயையும் திராட்சமதுவையும் தீர்த்துவிடாதே’ என்று சொன்னது.”—வெளிப்படுத்துதல் 6:5, 6.
இந்தக் குதிரைவீரன் பஞ்சத்தை அடையாளப்படுத்துகிறான். உணவுத் தட்டுப்பாடு எந்தளவு இருக்கும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது. முதல் நூற்றாண்டில், ஒருநாள் முழுக்க வேலை செய்தால்தான் ஒரு தினாரியு கிடைக்கும். அந்த ஒரு தினாரியுவுக்கு ஒருபடி (0.7 கிலோ) கோதுமைதான் கிடைக்கும் என்று இந்தத் தரிசனம் சொல்கிறது. (மத்தேயு 20:2) அதோடு, கோதுமையைவிட மலிவாக கிடைக்கும் பார்லி, ஒரு தினாரியுவுக்கு மூன்றுபடிதான் (2.1 கிலோ) கிடைக்கும் என்றும் சொல்கிறது. அப்படியிருக்கும்போது, ஒரு பெரிய குடும்பத்திலிருக்கும் எல்லாருக்கும் எப்படி உணவு கிடைக்கும்? அந்தத் தரிசனத்தில் வேறென்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். அடிப்படை உணவான ஒலிவ எண்ணெயையும் திராட்சமதுவையும் “தீர்த்துவிடாதே” என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை உணவையே பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.
கறுப்புக் குதிரைவீரனுடைய சவாரி 1914-ல் ஆரம்பமானதை நம்மால் உணர முடிகிறது. 20-ஆம் நூற்றாண்டில் மட்டும் 7 கோடி மக்கள் பஞ்சத்தால் இறந்துபோயிருக்கிறார்கள். “ஒவ்வொரு வருஷமும் எய்ட்ஸ், மலேரியா, டிபி போன்றவற்றால் இறப்பவர்களுடைய எண்ணிக்கையைவிட பசி பட்டினியால் இறப்பவர்களுடைய எண்ணிக்கைதான் அதிகம்” என்று ஒரு அமைப்பு சொல்கிறது. “2012-2014 வரை, 80 கோடியே 50 லட்சம் பேர், அதாவது உலக ஜனத்தொகையில் ஒன்பது பேரில் ஒருவர், ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள்” என்று இன்னொரு அறிக்கை காட்டுகிறது. பசி பட்டினியை ஒழிக்க எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இந்தக் கறுப்புக் குதிரைவீரனுடைய சவாரி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
மங்கிய நிறமுள்ள குதிரையில் சவாரி செய்பவன்
“அப்போது, மங்கிய நிறமுள்ள ஒரு குதிரை வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவனின் பெயர் ‘மரணம்.’ கல்லறை அவனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து போனது. நீண்ட வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும், கொடிய விலங்குகளாலும் பூமியின் நான்கிலொரு பகுதியை அழிக்க அவற்றுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.”—வெளிப்படுத்துதல் 6:8.
கொள்ளைநோயாலும் வேறு காரணத்தாலும் வரக்கூடிய மரணத்துக்கு இந்தக் குதிரைவீரன் படமாக இருக்கிறான். 1914-க்குப் பிறகு பல கோடி மக்கள் ஸ்பானிஷ் ஃப்ளூவால் இறந்துபோனார்கள். கிட்டத்தட்ட 50 கோடி மக்கள், அதாவது அன்றைய ஜனத்தொகையில் மூன்று பேரில் ஒருவர், இந்த வியாதியால் பாதிக்கப்பட்டார்கள்.
அதுமட்டுமல்ல, 20-ஆம் நூற்றாண்டில் கோடிக்கணக்கான பேர் சின்னம்மையால் (smallpox) இறந்துபோயிருக்கிறார்கள் என்று நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். மருத்துவ துறை எவ்வளவுதான் முன்னேறியிருந்தாலும் லட்சக்கணக்கான
மக்கள் எய்ட்ஸ், மலேரியா, டிபி போன்ற நோய்களுக்கு இன்றும் பலியாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.போரோ பஞ்சமோ கொள்ளைநோயோ எதுவாக இருந்தாலும் சரி, அதன் விளைவு மரணம்தான். இவற்றுக்குப் பலியான எல்லாரையும் கல்லறை விழுங்கிவிடுகிறது.
சந்தோஷமான வாழ்க்கை—சீக்கிரத்தில்!
இன்று இருக்கும் எல்லா கஷ்டங்களுக்கும் சீக்கிரத்தில் முடிவு வரும். 1914-ல் இயேசு “ஜெயிக்கிறவராக” புறப்பட்டார். சாத்தானைப் பூமிக்குத் தள்ளினார். ஆனால், அவர் இன்னும் ஜெயித்து முடிக்கவில்லை. (வெளிப்படுத்துதல் 6:2; 12:9, 12) அர்மகெதோன் சமயத்தில், இயேசு சாத்தானுடைய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பார், அவனுக்கு ஆதரவு காட்டுகிறவர்களையும் அழித்துவிடுவார். (வெளிப்படுத்துதல் 20:1-3) மூன்று குதிரைவீரர்களுடைய சவாரியையும் நிறுத்துவார். அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சரிசெய்வார். எப்படி என்று பைபிளிலிருந்து பார்க்கலாம்.
போரே இருக்காது, எல்லாரும் சமாதானமாக இருப்பார்கள். யெகோவா ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிப்பார்.’ (சங்கீதம் 46:9) நல்ல ஜனங்கள் “அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
பஞ்சம் இருக்காது, எல்லாருக்கும் தாராளமாக உணவு கிடைக்கும். “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16.
கொள்ளைநோயோ மரணமோ இருக்காது. எல்லாரும் நல்ல ஆரோக்கியத்தோடு என்றென்றும் வாழ்வார்கள். மக்களுடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:4.
தன்னுடைய ஆட்சியில் நிலைமைகள் எப்படியிருக்கும் என்பதை இயேசு பூமியில் இருந்தபோதே காட்டினார். சமாதானமாக இருக்கும்படி மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக உணவு கொடுத்தார். நோயாளிகளைச் சுகப்படுத்தினார். இறந்தவர்களைக்கூட உயிரோடு எழுப்பினார்.—மத்தேயு 12:15; 14:19-21; 26:52; யோவான் 11:43, 44.
இந்த நான்கு குதிரைவீரர்களுடைய சவாரி முடிவுக்கு வரும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இதைப் பற்றி பைபிளிலிருந்து உங்களுக்குச் சொல்லிக்கொடுக்க யெகோவாவின் சாட்சிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?