Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாவுக்கே சமாதி​—எப்படி?

சாவுக்கே சமாதி​—எப்படி?

ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் போனதால் எல்லா மனிதர்களுக்குமே பாவமும் மரணமும் வந்தது உண்மைதான்; ஆனால், மனிதர்கள் எப்படி வாழ வேண்டுமென்று கடவுள் நினைத்தாரோ அது மாறவே இல்லை. அவர் தன்னுடைய புத்தகமாகிய பைபிளில் திரும்பத் திரும்ப இந்த உறுதியை அளித்திருக்கிறார்.

  • “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”​சங்கீதம் 37:29.

  • “மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார். உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.”​ஏசாயா 25:8.

  • “ஒழிக்கப்படும் கடைசி எதிரி மரணம்.”​1 கொரிந்தியர் 15:26.

  • “இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”​வெளிப்படுத்துதல் 21:4.

கடவுள் எப்படி ‘மரணத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவார்’? “நீதிமான்கள் . . . என்றென்றும் . . . வாழ்வார்கள்” என்று பைபிள் தெளிவாகச் சொல்வதை நாம் பார்த்தோம். அதேசமயத்தில், “நல்லதே செய்கிற நீதிமான் இந்தப் பூமியில் ஒருவன்கூட இல்லை” என்றும் அது சொல்கிறது. (பிரசங்கி 7:20) நீதிமான்களே இல்லையென்றாலும் பரவாயில்லை என்று நினைத்து கடவுள் மரணத்தை ஒழித்துவிடுவாரா? தன்னுடைய நீதியான தராதரத்தை விட்டுக்கொடுத்துவிடுவாரா? கண்டிப்பாக அப்படிச் செய்ய மாட்டார்! ஏனென்றால், தன்னுடைய தராதரத்துக்குக் கீழ்ப்படியாவிட்டால் சாவு வரும் என்று அவர் சொன்னது பொய்யாகிவிடும். ஆனால், அவர் ‘பொய் சொல்ல முடியாதவர்.’ (தீத்து 1:3) அப்படியென்றால், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற கடவுள் வேறு என்ன செய்வார்?

“மரணத்தை [கடவுள்] அடியோடு ஒழித்துக்கட்டுவார்.”​—ஏசாயா 25:8

மீட்புவிலையினால் மரணத்துக்கு மரண அடி

மனிதர்களை மரணத்திலிருந்து விடுவிப்பதற்காக மீட்புவிலை என்ற அன்பான ஏற்பாட்டை யெகோவா செய்தார். மீட்புவிலை என்பது, இழப்புகளை ஈடுகட்டுவதற்கு அல்லது நீதியைச் சரிகட்டுவதற்குச் செலுத்தப்படும் விலையைக் குறிக்கிறது. மனிதர்கள் எல்லாருமே பாவிகளாக இருக்கிறோம், நம் எல்லாருக்குமே மரண தண்டனை கிடைத்திருக்கிறது. அதனால்தான், பைபிள் இப்படி வெளிப்படையாகச் சொல்கிறது: “யாராக இருந்தாலும், இன்னொருவனின் உயிரை மீட்கவே முடியாது. அவனுக்காகக் கடவுளுக்கு மீட்புவிலையைக் கொடுக்கவும் முடியாது. (அவர்களுடைய உயிருக்கான மீட்புவிலை ரொம்பவே பெரிது. அதை அவர்களால் கொடுக்கவே முடியாது.)”​—சங்கீதம் 49:7, 8.

ஒரு மனிதன் சாகும்போது, தன்னுடைய பாவங்களுக்கான தண்டனையைத்தான் பெற்றுக்கொள்கிறான். அவனால் தன்னைத்தானே மீட்டுக்கொள்ள முடியாது, மற்றவர்களையும் பாவத்திலிருந்து மீட்க முடியாது. (ரோமர் 6:7) பாவமே இல்லாத ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தால்தான் நம்மைப் பாவத்திலிருந்து மீட்க முடியும்.​—எபிரெயர் 10:1-4.

அதற்குத்தான் கடவுள் ஒரு அருமையான ஏற்பாடு செய்தார். பரலோகத்தில் இருந்த தன் மகன் இயேசுவை இந்தப் பூமிக்கு அனுப்பினார்; இயேசு பாவமே இல்லாத ஒரு மனிதராகப் பிறந்தார். (1 பேதுரு 2:22) “பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்கு” வந்ததாக அவரே சொன்னார். (மாற்கு 10:45) நம் எதிரியான மரணத்திலிருந்து நம்மை விடுவித்து நமக்கு வாழ்வு கொடுப்பதற்காக அவர் தன் உயிரைக் கொடுத்தார்.​—யோவான் 3:16.

மரணம் எப்போது ஒழிக்கப்படும்?

பைபிளில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருப்பதுபோல், இந்த உலகத்தில் “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக” இருப்பதை நாம் பார்க்கிறோம்; இது, நாம் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம் என்பதைக் காட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:1) கடைசி நாட்களின் முடிவில், ‘கடவுள்பக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற நாள்’ வரும். (2 பேதுரு 3:3, 7) ஆனால், கடவுளை நேசிக்கிறவர்கள் அந்த அழிவிலிருந்து தப்பித்து, சாவே இல்லாத “நிரந்தரமான வாழ்வை” பெறுவார்கள்.​—மத்தேயு 25:46.

இயேசு, “பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்கு” வந்தார்.​—மாற்கு 10:45

இறந்துபோன லட்சக்கணக்கானவர்கள் மறுபடியும் உயிரோடு எழுப்பப்படுவார்கள். அவர்களுக்கும் முடிவில்லாமல் வாழும் வாய்ப்பு கிடைக்கும். இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்தபோது இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார். உதாரணத்துக்கு, நாயீன் என்ற ஊரிலிருந்த ஒரு விதவையின் ஒரே மகன் இறந்துவிட்டதைப் பார்த்தபோது, அவர் “மனம் உருகி,” அவனை உயிரோடு எழுப்பினார். (லூக்கா 7:11-15) ‘நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று கடவுளிடம் . . . நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். கடவுள் தந்திருக்கும் இந்த உறுதியான நம்பிக்கை, மனிதர்கள்மேல் அவர் கொள்ளை அன்பு வைத்திருப்பதைக் காட்டுகிறது.​—அப்போஸ்தலர் 24:15.

கோடிக்கணக்கானவர்களுக்கு என்றென்றும் வாழும் வாய்ப்பு கிடைக்கும். “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 37:29) சுமார் 2,000 வருஷங்களுக்கு முன்பு பைபிளில் எழுதப்பட்ட இந்த ஆறுதலான வார்த்தைகளின் நிறைவேற்றத்தைப் பார்த்து அவர்கள் புல்லரித்துப்போவார்கள்: “மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே?” (1 கொரிந்தியர் 15:55) மனிதர்களால் வெல்ல முடியாத எதிரியான மரணம் அடியோடு ஒழிக்கப்பட்டிருக்கும்!