Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழத்தான் படைக்கப்பட்டோம்

வாழத்தான் படைக்கப்பட்டோம்

என்றென்றும் சந்தோஷமாக வாழ யாருக்குத்தான் ஆசை இல்லை? கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: நோயும் மரணமும் இல்லாத சந்தோஷமான வாழ்க்கை! ஆஹா! அப்படியொரு வாழ்க்கை மட்டும் கிடைத்தால், ஆசைதீர உலகத்தைச் சுற்றிப்பார்க்கலாம்... புதுப்புது திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம்... விரும்புவதையெல்லாம் கற்றுக்கொள்ளலாம்... காலமெல்லாம் நமக்குப் பிரியமானவர்களோடு இருக்கலாம்!

இப்படிப்பட்ட வாழ்க்கைக்காக ஏங்குவது இயற்கைக்கு மாறானதா? கிடையவே கிடையாது! அந்த ஏக்கத்தை நமக்குள் வைத்தவரே கடவுள்தான் என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:11) “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்றும்கூட அது சொல்கிறது. (1 யோவான் 4:8) அப்படியென்றால், ஒரு அன்பான கடவுள், என்றென்றும் வாழ்கிற ஆசையை மட்டும் கொடுத்துவிட்டு அதை அடைய முடியாதபடி செய்திருப்பாரா?

மனிதர்கள் யாருமே சாக விரும்புவதில்லை. சாவை “எதிரி” என்றுதான் பைபிளே வர்ணிக்கிறது. (1 கொரிந்தியர் 15:26) சிலருக்கு அது சீக்கிரத்திலேயே வந்துவிடுகிறது; மற்றவர்களுக்குக் கொஞ்சக் காலம் எடுக்கிறது, அவ்வளவுதான். அது யாரையும் விட்டுவைப்பதில்லை. நிறைய பேர் அதை நினைத்துப் பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட எதிரிக்கு என்றைக்காவது ஒரு முடிவு வருமா? அது நடக்கிற காரியம்தானா?

நம்பிக்கைக்கான ஆதாரம்

மனிதர்களைப் படைத்தபோது அவர்கள் சாக வேண்டுமென்று கடவுள் நினைக்கவே இல்லை. ஆச்சரியமாக இருக்கிறதா? மனிதர்கள் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ வேண்டும் என்றுதான் அவர் நினைத்தார். பைபிள் புத்தகமான ஆதியாகமம் இதை உறுதிசெய்கிறது. கடவுளாகிய யெகோவா * இந்தப் பூமியை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் பார்த்துப் பார்த்துப் படைத்தார். பிறகு, முதல் மனிதனான ஆதாமைப் படைத்து ஒரு பூஞ்சோலையில், அதாவது ஏதேன் தோட்டத்தில், குடிவைத்தார். அதன்பின், “தான் படைத்த எல்லாவற்றையும் கடவுள் பார்த்தார், எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன.”—ஆதியாகமம் 1:26, 31.

ஆதாம், கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டான், அதாவது எந்தக் குறையும் இல்லாமல் படைக்கப்பட்டான். (உபாகமம் 32:4) ஆதாமுடைய மனைவி ஏவாளும்கூட அப்படித்தான் படைக்கப்பட்டாள். உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி, அவர்களுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. யெகோவா அவர்களிடம், “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள். கடலில் வாழ்கிற மீன்களும், வானத்தில் பறக்கிற பறவைகளும், நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்று சொன்னார்.—ஆதியாகமம் 1:28.

ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பெற்று இந்தப் பூமியை நிரப்ப வேண்டுமென்றால், அதற்கு நிறைய காலம் எடுக்கும். ஏவாள் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும், அந்தப் பிள்ளைகளும் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும். இந்த முழு பூமியும் நிரம்பும்வரை அவர்கள் இப்படியே செய்ய வேண்டும். இதுதான் கடவுளுடைய விருப்பம். (ஏசாயா 45:18) ஆதாமும் ஏவாளும் தங்களுடைய பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்கும்வரை மட்டுமே வாழ்ந்தால் போதும் என்று யெகோவா நினைத்திருந்தால், இந்த முழு பூமியையும் நிரப்பும்படி சொல்லியிருப்பாரா?

ஆதாம் ஏவாளுக்குக் கொடுக்கப்பட்ட இன்னொரு பொறுப்பைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள். மிருகங்களைத் தங்களுடைய அதிகாரத்தின்கீழ் கொண்டுவருவதுதான் அந்தப் பொறுப்பு. ஆதாம் முதலில் மிருகங்களுக்குப் பெயர் வைக்க வேண்டியிருந்தது; அதற்கே நிறைய காலம் தேவைப்பட்டிருக்கும். (ஆதியாகமம் 2:19) அவற்றைத் தன் அதிகாரத்தின்கீழ் கொண்டுவர வேண்டுமென்றால், அவற்றைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு, அவற்றை எப்படிப் பராமரிப்பது என்று புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்பட்டிருக்கும்!

அப்படியென்றால், இந்தப் பூமியை நிரப்பும்படியும், மிருகங்களைத் தங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவரும்படியும் முதல் மனித தம்பதிக்குக் கடவுள் கொடுத்த கட்டளை எதைக் காட்டுகிறது? அவர்கள் ரொம்பக் காலம் வாழும் விதத்தில் படைக்கப்பட்டதைத்தான் காட்டுகிறது. சொல்லப்போனால், ஆதாம் ரொம்பக் காலம் வாழவும் செய்தான்.

பூஞ்சோலையான பூமியில் மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம்

நீண்ட காலம் வாழ்ந்தார்கள்

ஆதாம், 930 வருஷங்கள்

மெத்தூசலா, 969 வருஷங்கள்

நோவா, 950 வருஷங்கள்

இன்று, 70-80 வருஷங்கள்

ஆரம்பத்தில் மனிதர்கள் இப்போதைவிட அதிக காலம் வாழ்ந்தார்கள் என்று பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். ‘ஆதாம் மொத்தம் 930 வருஷங்கள் வாழ்ந்தான்’ என்று அது சொல்கிறது. அதன்பின், 900 வருஷங்களுக்கு மேல் வாழ்ந்த இன்னும் ஆறு பேரையும் அது குறிப்பிடுகிறது. அவர்களுடைய பெயர்கள்: சேத், ஏனோஸ், கேனான், யாரேத், மெத்தூசலா, நோவா. இவர்கள் எல்லாரும் நோவாவின் காலத்தில் பெருவெள்ளம் வருவதற்கு முன்பு வாழ்ந்தவர்கள்; நோவாவுடைய 600-வது வயதில்தான் பெருவெள்ளம் வந்தது. (ஆதியாகமம் 5:5-27; 7:6; 9:29) இவர்களால் மட்டும் எப்படி இத்தனை காலம் வாழ முடிந்தது?

அதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. இவர்கள் வாழ்ந்த காலத்துக்கும் ஆதாம்-ஏவாள் பரிபூரணமாக இருந்த காலத்துக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கவில்லை. ஆனால், பரிபூரணமாக இருப்பதற்கும் ரொம்பக் காலம் வாழ்வதற்கும் என்ன சம்பந்தம்? மரணம் எப்படி ஒழிக்கப்படும்? பதில் தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படியென்றால், நமக்கு ஏன் முதுமையும் சாவும் வருகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

^ பாரா. 6 யெகோவா என்பதுதான் கடவுளுடைய பெயர் என்று பைபிள் சொல்கிறது.