தாவீதுக்கும் கோலியாத்துக்கும் உண்மையிலேயே சண்டை நடந்ததா?
தாவீதைப் பற்றியும் கோலியாத்தைப் பற்றியும் பைபிள் சொல்கிற விஷயங்கள் நிஜமா கட்டுக்கதையா என்று சிலர் யோசிக்கிறார்கள். முந்தின கட்டுரையை வாசித்தபோது உங்கள் மனதில் இந்த சந்தேகம் வந்ததா? ஒருவேளை நீங்கள் அப்படி நினைத்திருந்தால் கீழே சொல்லப்பட்டிருக்கும் மூன்று விஷயங்களை கவனியுங்கள்.
1 | ஒரு மனிதன் கிட்டத்தட்ட ஒன்பதரை அடி (2.9 மீ) உயரம் இருக்க முடியுமா?
கோலியாத்தின் உயரம், ‘ஆறு முழம் ஒரு ஜாண்’ என்று பைபிள் சொல்கிறது. (1 சாமுவேல் 17:4) அந்தக் கால கணக்கின்படி, ஒரு முழம் என்பது 17.5 அங்குலம் (44.5 செ.மீ); ஒரு ஜாண் என்பது 8.75 அங்குலம் (22.2 செ.மீ). அப்படியானால், ‘ஆறு முழம் ஒரு ஜாண்’ என்பது சுமார் ஒன்பது அடி ஆறு அங்குலம் (2.9 மீ). இவ்வளவு உயரமாக கோலியாத் இருந்திருக்க முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்: நம் காலத்திலேயே 8 அடி 11 அங்குலம் (2.7 மீ) உயரமான ஒருவர் இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, கோலியாத் ஏன் அதைவிட ஆறு அங்குலம் (15 செ.மீ) உயரமாக இருந்திருக்க முடியாது? அதோடு, அவன் ரெப்பாயீம் என்ற வம்சத்தை சேர்ந்தவன், இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் உயரமாக இருந்தார்கள். கானான் பகுதியை சுற்றிலும் வாழ்ந்த சில பயங்கரமான போர் வீரர்களின் உயரம் எட்டு அடிக்கும் (2.4 மீ) அதிகமாக இருந்தது என்று கி.மு 13-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட எகிப்திய பதிவு ஒன்று சொல்கிறது. அதனால், கோலியாத்தின் அசாதாரண உயரத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
2 | தாவீது நிஜமான ஒரு நபரா?
தாவீது ராஜா கட்டுக்கதையில் வரும் ஒரு நபர் என்றுதான் சில அறிஞர்கள் ஒரு காலத்தில் நினைத்தார்கள். ஆனால், அதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. பழமையான ஒரு கல்வெட்டில், “தாவீதின் வீடு” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருப்பதை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதோடு, இயேசு கிறிஸ்துவும் தாவீதைப் பற்றி பேசியிருக்கிறார்... அவரை நிஜமான நபராகக் காட்டியிருக்கிறார். (மத்தேயு 12:3; 22:43-45) இயேசுதான் மேசியா என்பதற்கும் அவர் தாவீது ராஜாவின் வம்சத்தில்தான் வந்தார் என்பதற்கும் இரண்டு விவரமான வம்சாவளி பட்டியல்கள் பைபிளில் இருக்கின்றன. (மத்தேயு 1:6-16; லூக்கா 3:23-31) அதனால், தாவீது உண்மையிலேயே வாழ்ந்த நபர் என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.
3 | இந்தச் சம்பவம் நடந்த இடம் கற்பனையா நிஜமா?
இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்களும் போர் செய்வதற்காக ஏலா பள்ளத்தாக்கில் கூடி வந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இன்னும் குறிப்பாக, சோக்கோ மற்றும் அசெக்கா என்ற இரண்டு ஊர்களுக்கு நடுவில் இருந்த ஒரு மலைச்சரிவில் பெலிஸ்தர்கள் கூடினதாகவும், இஸ்ரவேலர்களோ எதிரில் இருந்த மலையில் கூடினதாகவும் பைபிள் சொல்கிறது. இந்த இடம் கற்பனையா நிஜமா?
சமீபத்தில் அந்த இடத்தை சுற்றிப் பார்க்க போயிருந்த ஒருவர் சொல்கிறார்: “கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தர்தான் அந்த இடங்கள சுத்திக்காட்டினார். ஏலா பள்ளத்தாக்குக்கு போனோம், அப்புறம் அங்கிருந்த ஒரு பாதை வழியா ஒரு மலை உச்சிக்கு போனோம். அந்த மலைல இருந்து பள்ளத்தாக்கை நாங்க பாத்துக்கிட்டு இருந்தப்போ, அவர் எங்கள 1 சாமுவேல் 17:1-3-ஐ வாசிக்க சொன்னார். அப்புறம், அந்தப் பள்ளத்தாக்குக்கு இடது பக்கம் கைகாட்டி, ‘அங்கதான் சோக்கோ ஊரோட இடிபாடுகள் இருக்கு.’ வலது பக்கம் திரும்பி, ‘அங்க அசெக்கா ஊரோட இடிபாடுகள் இருக்கு. இந்த ரெண்டு ஊருக்கும் நடுவுல நீங்க பாத்துக்கிட்டு இருக்கிற இந்த மலையிலதான் எங்கேயோ பெலிஸ்தர்கள் முகாம் போட்டிருக்கலாம். நாம நிக்கிற இந்த இடத்துலதான் இஸ்ரவேலர்கள் முகாம் போட்டிருக்கலாம்.’ நான் இருந்த அதே இடத்துல சவுலும் தாவீதும் நிக்ற மாதிரி கற்பன செஞ்சு பாத்தேன். அப்புறம், அந்த மலையில இருந்து கீழ இறங்கி பள்ளத்தாக்குக்கு வந்தோம். பெரும்பாலும் காஞ்சு போயிருந்த ஒரு ஆற்றை தாண்டி போனப்போ, அங்க நிறையா கல்லுங்க இருந்திச்சு. உடனே தாவீது கீழே குனிஞ்சு 5 கூழாங்கல் எடுக்ற மாதிரி கற்பன செஞ்சேன். அங்க இருந்து எடுத்த ஒரு கல்லாலதான் அவர் கோலியாத்தை சாக அடிச்சார்.” மற்றவர்களை போலவே இவரும் பைபிளில் இருக்கும் இந்தத் தெளிவான விஷயங்களை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
இந்தச் சரித்திர பதிவு உண்மையா என்று சந்தேகப்பட எந்த நியாயமான காரணமும் இல்லை. ஏனென்றால், இந்த பதிவில் வரும் ஆட்களும் இடங்களும் கற்பனை அல்ல, நிஜமானதே. எல்லாவற்றையும்விட, இது கடவுளுடைய சக்தியால் எழுதப்பட்ட பதிவு. “பொய் சொல்ல முடியாத,” உண்மையுள்ள கடவுள்தான் இதற்கு ஊற்றமூலர்.—தீத்து 1:3; 2 தீமோத்தேயு 3:16. ▪ (wp16-E No. 5)