இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | தாவீது
‘யுத்தம் யெகோவாவுடையது’
போர்வீரர்கள் பயந்துபோய் போர்க் களத்தைவிட்டு தலைதெறிக்க ஓடுகிறார்கள். தாவீதுக்கு ஒன்றும் புரியாமல் அந்த வீரர்கள் நடுவே திகைத்துப்போய் இருக்கிறார். அவர்கள் எதைப் பார்த்து பயப்படுகிறார்கள்? ஒவ்வொரு வீரனும் ஏதோ ஒரு பெயரை சொல்லிக்கொண்டு ஓடுவது தாவீதின் காதில் விழுகிறது. பள்ளத்தாக்கின் நடுவில் திமிராக ஒருவன் நின்றுகொண்டிருக்கிறான். இதுவரை இவ்வளவு பெரிய ஆளை தாவீது பார்த்ததே இல்லை.
அவன்தான் கோலியாத். வீரர்கள் ஏன் பயந்து ஓடுகிறார்கள் என்பது இப்போது தாவீதுக்கு புரிகிறது. அவன் மிக உயரமாக இருக்கிறான்... அவன் ஒரு மாமிச மலை. கவசம் இல்லாமலேயே, அவனுடைய எடை இரண்டு பெரிய மனிதர்களுடைய எடையைவிட அதிகம். அவன் போர் ஆயுதங்களை வைத்திருக்கிறான். அவன் மகா பலசாலி... போரில் அனுபவசாலியும்கூட. இஸ்ரவேலர்களைப் பார்த்து கோபத்தில் கர்ஜிக்கிறான்... சவால் விடுகிறான். நேருக்கு நேர் மோதுவதற்கு... ஒரே சண்டையில் போருக்கு முடிவு கட்டுவதற்கு... யாரையாவது வரச் சொல்கிறான். இஸ்ரவேல் படையையும் சவுல் ராஜாவையும் கேலி செய்யும்போது, அவனுடைய சத்தம் மலைகளில் எதிரொலிப்பதை இப்போது கற்பனை செய்து பாருங்கள்.—1 சாமுவேல் 17:4-10.
இஸ்ரவேலர்களும் சவுல் ராஜாவும் பயத்தில் கூனிக்குறுகிப் போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதமாக இப்படிதான் கோலியாத் உறுமிக்கொண்டு இருக்கிறான் என்பது தாவீதுக்கு தெரிய வருகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் அவன் கிண்டல் செய்துகொண்டிருக்க... இரு படைகளும் ஒன்றும் செய்யாமல் அப்படியே நிற்கின்றன. சவுல் ராஜாவுக்கும் அவருடைய வீரர்களுக்கும் எப்பேர்ப்பட்ட அவமானம்! அந்தப் படையிலிருந்த தாவீதின் மூன்று அண்ணன்களும் பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். தாவீதைப் பொறுத்தவரை, பொய் தெய்வங்களை வணங்கிய கோலியாத்தின் கிண்டல் பேச்சு இஸ்ரவேல் படைக்கு எதிராக மட்டும் அல்ல, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு எதிராகவே இருந்தது! தாவீது மிகவும் வேதனைப்படுகிறார். ஆனால், ஒரு சாதாரண வாலிபனால் என்ன செய்ய முடியும்? கடவுள்மீது தாவீது வைத்திருந்த நம்பிக்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?—1 சாமுவேல் 17:11-14.
“இவனை அபிஷேகம் பண்ணு”
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பு என்ன நடந்தது என்பதை நாம் சற்று பின்னோக்கிப் பார்க்கலாம். ஒரு நாள் மாலை வேளையில், பெத்லகேமுக்கு பக்கத்திலுள்ள மலைச்சரிவுகளில், தாவீது தன் அப்பாவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு இளமைத் துடிப்புடன்... செக்கச்செவேல் என்று இருந்தார். அவருடைய கண்கள் அழகிய கண்கள்... அதில் அறிவொளி வீசியது. ஓய்வு நேரத்தில் யாழ் இசைப்பார். பழகப் பழக... யாழ் இசைப்பதில் அவருடைய திறமை இன்னும் மெருகேறியது. கடவுளுடைய அழகிய படைப்புகள் அவருடைய மனதை கவர்ந்தன. அந்த மாலை வேளையில்தான், அவருடைய அப்பா ஈசாய் அவரை உடனே வரச் சொல்லியிருந்தார்.—1 சாமுவேல் 16:12.
தாவீது வந்தபோது, வயதான ஒருவரோடு அவருடைய அப்பா பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் விசுவாசமுள்ள சாமுவேல் தீர்க்கதரிசி. ஈசாயின் மகன்களில் ஒருவரை இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக அபிஷேகம் செய்யத்தான் சாமுவேலை யெகோவா அனுப்பியிருந்தார். தாவீதின் ஏழு அண்ணன்களில் ஒருவரைக்கூட தேர்ந்தெடுக்கவில்லை என்பதை சாமுவேலுக்கு யெகோவா தெரியப்படுத்தியிருந்தார். ஆனால் தாவீது வந்தபோது, “இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம் பண்ணு” என்று சாமுவேலிடம் யெகோவா சொன்னார். தாவீதுடைய அண்ணன்மார் பார்த்துக்கொண்டிருக்க... சாமுவேல் விசேஷ எண்ணையை எடுத்து தாவீதின் தலையில் ஊற்றி அவரை அபிஷேகம் செய்தார். அதுமுதல் தாவீதின் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. ஏனென்றால், “அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்” என்று பைபிள் சொல்கிறது.—1 சாமுவேல் 16:1, 5-13.
உடனே சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்ற ஆசை தாவீதின் மனதில் வந்ததா? இல்லை, அவர் எப்போது ராஜாவாக ஆகவேண்டும் என்பதை யெகோவா தன்னுடைய சக்தியின் மூலம் தெரியப்படுத்தும்வரை பொறுமையாக காத்திருக்க தயாராக இருந்தார். அது வரைக்கும் அவர் தாழ்மையுடன் அவருடைய அப்பாவின் ஆடுகளை மேய்த்துக் 1 சாமுவேல் 17:34-36; ஏசாயா 31:4.
கொண்டிருந்தார். அதிக பொறுப்போடு... தைரியத்தோடு... செய்ய வேண்டிய வேலை இது! ஒரு தடவை சிங்கத்திடமிருந்து... இன்னொரு தடவை கரடியிடமிருந்து... ஆடுகளை காப்பாற்றினார். அந்த மிருகங்களை தூரத்தில் நின்றுகொண்டே விரட்டி விடவில்லை. அப்பாவி ஆடுகளை காப்பாற்ற அந்த மிருகங்களோடு சண்டை போட்டார். இரண்டு தடவையும் அந்த கொடூரமான மிருகங்களை தன்னந்தனியாக நின்றே கொன்றுபோட்டார்.—காலப்போக்கில், தாவீதின் அருமை பெருமைகள் சவுல் ராஜாவின் காதுக்கு எட்டின. சவுல் ஒரு பலம்மிக்க போர்வீரனாக இருந்தாலும் யெகோவாவுக்கு கீழ்ப்படியவில்லை, அதனால் அவருடைய தயவை இழந்தார். யெகோவா தன்னுடைய சக்தியையும் சவுலிடமிருந்து எடுத்துவிட்டார். அதனால், சவுல் அடிக்கடி மூர்க்கத்தனமாக... கடுகடுப்பாக... நடந்துகொண்டார். மற்றவர்கள்மீது அநாவசியமாக சந்தேகப்பட்டார். அவர் மூர்க்கத்தனமாக மாறும்போது இனிமையான இசைதான் அவரை அமைதிப்படுத்தியது. தாவீது ஒரு வீரன் மட்டுமல்ல, யாழ் இசைப்பதில் திறமைசாலி என்பதை சவுலின் ஆட்கள் கேள்விப்பட்டார்கள், அதனால் அவரை வரவழைத்தார்கள். சீக்கிரத்தில், சவுலின் அரசவையில் இருந்த இசைக் கலைஞர்களில் தாவீதும் ஒருவரானார். சவுலை சாந்தப்படுத்த யாழ் இசைத்ததோடு, அவருடைய ஆயுதங்களை சுமக்கிறவராகவும் ஆனார்.—1 சாமுவேல் 15:26-29; 16:14-23.
இளம் பிள்ளைகள் தாவீதிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். (1) யெகோவாவோடு நெருங்கிவர உதவும் காரியங்களில் ஈடுபடுவதற்கு தாவீது தன் ஓய்வு நேரத்தை பயன்படுத்தினார். (2) தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள பொறுமையுடன் முயற்சி செய்தார், அதனால் அவருக்கு நல்ல வேலையும் கிடைத்தது. (3) எல்லாவற்றையும்விட, யெகோவாவுக்கு பிடித்ததையே செய்தார், கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு இசைவாக நடந்தார். நாம் எல்லாருமே தாவீதிடமிருந்து இந்த அருமையான விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.—பிரசங்கி 12:1.
“இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை”
சவுலுக்கு வேலை செய்தபோதிலும், ஆடுகளை மேய்க்க அடிக்கடி தாவீது தன் வீட்டுக்கு வருவார், சில சமயம் ரொம்ப நாட்களுக்கு தங்கியிருப்பார். அப்படி வந்திருந்த ஒரு சமயம், சவுலின் படையில் வீரர்களாக இருந்த மூன்று அண்ணன்களை பார்த்துவிட்டு வருவதற்காக தாவீதை ஈசாய் போர்க் களத்துக்கு அனுப்பினார். உடனே, அண்ணன்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு ஏலா பள்ளத்தாக்குக்குப் போனார். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தபடி, இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்களும் போர் செய்யாமல் எதிரெதிர் மலைச்சரிவுகளில் நிற்பதைப் பார்த்து குழம்பிப்போனார்.—1 சாமுவேல் 17:1-3, 15-19.
தாவீதால் கொஞ்சம்கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை — ஒரு சாதாரண மனுஷனை பார்த்து, அதுவும் யெகோவாவை வணங்காத ஒருவனை பார்த்து, உயிருள்ள கடவுளான யெகோவாவின் மக்கள் பயந்து ஓடுகிறார்களே! கோலியாத்தின் பேச்சு யெகோவாவையே அவமானப்படுத்துவது போல் அவருக்கு இருந்தது. அதனால், அவனை வீழ்த்துகிறவனுக்கு என்ன கிடைக்கும் என்று வீரர்களிடம் விசாரிக்கிறார். சீக்கிரத்திலேயே, அவருடைய மூத்த அண்ணன் எலியாப் இதைப் பற்றி கேள்விப்படுகிறார். தாவீதை அவருடைய அண்ணன் ரொம்ப கடுமையாக பேசிவிடுகிறார். போர்க் களத்தில் நடக்கும் சண்டையை பார்க்கத்தான் அங்கு வந்ததாக குற்றம்சாட்டுகிறார். அதற்கு தாவீது, “இப்போது நான் என்ன செய்துவிட்டேன்? ஒரேவொரு கேள்விதானே கேட்டேன்!” என்றார். பின்பு, கோலியாத்தை தன்னால் தோற்கடிக்க முடியும் என்று நம்பிக்கையோடு சொன்னார். இந்த விஷயத்தை யாரோ ஒருவர் சவுலிடம் சொல்லிவிடுகிறார். உடனே தாவீதை அழைத்து வரச்சொல்லி சவுல் கட்டளையிட்டார்.—1 சாமுவேல் 17:23-31.
“இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை” என்று ராஜாவிடம் தாவீது நம்பிக்கையோடு சொன்னார். சவுலும் அவருடைய ஆட்களும் உண்மையிலேயே ரொம்ப பயந்துபோய் இருந்தார்கள். கோலியாத்தின் உயரத்தைப் பார்த்து... போர்க் கவசம் அணிந்திருக்கும் அந்த ராட்சதனின் இடுப்புளவு மட்டுமே இருப்பதைப் பார்த்து... அவர்கள் பயந்திருக்கலாம். தங்களை நொடிப்பொழுதில், சுலபமாக வீழ்த்திவிடுவான் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். 1 சாமுவேல் 17:32.
ஆனால், தாவீது அப்படி நினைக்கவில்லை, கோலியாத்தோடு நேருக்குநேர் மோத தயார் என்று சொன்னார்.—அதற்கு சவுல், “அந்தப் பெலிஸ்தியனை எதிர்த்து உன்னால் சண்டை போட முடியாது. நீ சின்னப் பையன், ஆனால் அவன் சின்ன வயதிலிருந்தே ஒரு போர்வீரன்” என்று சொன்னார். தாவீது உண்மையிலேயே ஒரு சின்ன பையனா? இல்லை. படையில் சேர போதுமான வயது இருந்திருக்காது. அதோடு, பார்ப்பதற்கு சிறுவனாக தெரிந்திருக்கலாம். ஆனால், தாவீது ஒரு வீரனாக பெயரெடுத்திருந்தார். அப்போது, அவருக்கு 18 அல்லது 19 வயது இருந்திருக்கலாம்.—1 சாமுவேல் 16:18; 17:33, NW.
ஒரு சிங்கத்தையும் கரடியையும் கொன்றதைப் பற்றி சவுலிடம் தாவீது சொன்னார். அப்படி சொன்னதால் அவர் பெருமையடித்துக் கொண்டிருந்தார் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. அந்த மிருகங்களை தன்னுடைய சொந்த பலத்தால் சாகடிக்கவில்லை என்று அவருக்கு நன்றாக தெரியும். அதனால் சவுலிடம், ‘என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த யெகோவா இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்’ என்று சொன்னார். அதற்கு சவுல், ‘போ, யெகோவா உன்னுடனேகூட இருப்பார்’ என்றார்.—1 சாமுவேல் 17:37.
தாவீதைப் போலவே உங்களுக்கும் கடவுள்மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? தாவீதுக்கு ஏதோ குருட்டு நம்பிக்கை இருக்கவில்லை. அவர் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்தும் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்தும்தான் கடவுள்மீது நம்பிக்கை வைத்தார். யெகோவா தனக்குப் பாதுகாப்பு கொடுப்பார்... கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் காப்பாற்றுவார்... என்று தாவீதுக்கு நன்றாக தெரிந்திருந்தது. அவரைப் போலவே நமக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்றால் நாமும்கூட பைபிளிலிருந்து கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கற்றுக்கொள்ளும் விஷயங்களின்படி வாழ வேண்டும். அதனால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் கடவுள்மீது நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்தும்.—எபிரெயர் 11:1.
“இன்றைக்கு யெகோவா உன்னை என் கையில் கொடுப்பார்”
கோலியாத்தோடு சண்டை போட சவுல் தன்னுடைய போர்க் கவசத்தை தாவீதுக்குக் கொடுத்தார். கோலியாத் போட்டிருந்த கவசத்தைப் போலவே அது செம்பினால் செய்யப்பட்டிருந்தது. தாவீது அதைப் போட்டு பார்த்தார். ஆனால், அந்தப் பெரிய கவசத்தைப் போட்டுக்கொண்டு அவரால் இங்கும் அங்கும் நகர முடியவில்லை. தாவீதுக்குப் போர்க் கவசம் போட்டு பழக்கமே கிடையாது. ஏனென்றால், போர் வீரனுக்கு கிடைக்கும் எந்தப் பயிற்சியும் அவருக்கு கிடைக்கவில்லை. அதுவும் சவுலுடைய கவசம் தாவீதுக்கு ரொம்பவே பெரியதாக இருந்தது. இஸ்ரவேல் தேசத்தில் இருந்த எல்லாரையும்விட சவுல் உயரமாக இருந்தாரே. (1 சாமுவேல் 9:2) அந்தக் கவசத்தை கழற்றிவிட்டு எப்போதும் போடும் மேய்ப்பனின் உடையை போட்டுக்கொண்டார். எந்த உடையில் ஆடுகளை பாதுகாத்தாரோ அதே உடையில் போர்க் களத்தில் இறங்கினார்.—1 சாமுவேல் 17:38-40.
ஒரு பையை தோளில் மாட்டிக்கொண்டு, ஆடுகளை மேய்க்க பயன்படுத்திய தடியையும் ஒரு கவணையும் கையில் எடுத்துக்கொண்டு போனார். கவணை வைத்து என்ன செய்ய முடியும் என்று நாம் ஒருவேளை நினைக்கலாம். ஆனால், அந்தக் காலத்தில் அது ஒரு முக்கியமான போர் ஆயுதம். இது, நீளமான இரண்டு தோல் வார்களுக்கு இடையே பட்டையாக ஒரு பைபோல் குழியாகவும் இருந்தது. ஒரு மேய்ப்பனுக்கு இது முக்கியமான ஆயுதம். அதை அவர் எப்படி பயன்படுத்துவார்? முதலில், பையிலிருந்து கல்லை எடுத்து கவணில் வைப்பார். பின்பு, தலைக்கு மேல் கவணை வேகமாக சுழற்றி தோல் வாரின் ஒரு முனையை விட்டுவிடுவார். எந்த இடத்தில் அந்தக் கல் பட வேண்டும் என்று நினைத்து வீசப்பட்டதொ அந்த இடத்தில் குறி தவறாமல் படும். போரில் கவண் ஒரு முக்கிய ஆயுதமாக இருந்ததால் நிறைய படைகளில் கவண் கல் எரிகிறவர்களின் ஒரு தனிப்பிரிவும் இருந்தது.
இந்த ஆயுதத்தை எடுத்துக்கொண்டு எதிரியை சந்திக்க தாவீது புறப்பட்டார். இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தாவீது யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்துகொண்டு வறண்ட நதிப் படுகையிலிருந்து ஐந்து சிறிய கூழாங்கற்களை எடுக்கிறார். பின்பு போர்க் களத்தை நோக்கி ஓடுகிறார்.
‘செக்கச்செவேல் என்று அழகாக இருந்த ஓர் இளைஞன்’ தன்னை நோக்கி ஓடி வருவதை கோலியாத் பார்த்து, “ஒரு தடியை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாயே, நான் என்ன நாயா?” என்று சொல்லி கத்தினான். ஒருவேளை தாவீதின் கையிலிருந்த தடியை மட்டும்தான் பார்த்திருப்பான், கவணை பார்த்திருக்க மாட்டான். அவனுடைய தெய்வங்களின் பெயரில் தாவீதை சபித்தான். அவனுடைய உடலை பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போட போவதாகவும் சொன்னான்.—1 சாமுவேல் 17:41-44.
தாவீது சொன்ன வார்த்தைகள் இன்று நம் நம்பிக்கையை பலப்படுத்துகின்றன. கோலியாத்தை பார்த்து, ‘நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்’ என்று தாவீது தைரியமாக சொல்வதை கற்பனை செய்து பாருங்கள். கோலியாத்தின் பலமோ அவனிடமிருந்த ஆயுதங்களோ யெகோவாவுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்று தாவீதுக்கு நன்றாக தெரிந்திருந்தது. கோலியாத் யெகோவாவுக்கு எதிராக பேசினான். அதனால், யெகோவா அவனுக்குப் பதிலடி கொடுப்பார் என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். அதனால்தான், ‘யுத்தம் யெகோவாவுடையது’ என்று சொன்னார்.—1 சாமுவேல் 17:45-47, NW.
கோலியாத்தின் உயரத்தையோ அவனுடைய ஆயுதங்களையோ தாவீது பார்க்காமல் இல்லை... இதையெல்லாம் பார்த்தார். ஆனால் அவை தன்னை பயப்படுத்துவதற்கு அவர் அனுமதிக்கவில்லை. சவுலும் அவருடைய படைவீரர்களும் செய்த தப்பை இவர் செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் தங்களை கோலியாத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். தாவீதோ யெகோவாவோடு கோலியாத்தை ஒப்பிட்டு பார்த்தார். உண்மைதான், கோலியாத் மற்ற ஆட்களைவிட உயரமாக இருந்தான்... சுமார் ஒன்பதரை அடி (2.9 மீ) உயரமுள்ளவனாக இருந்தான். ஆனால், இந்த பிரபஞ்சத்தின் பேரரசரோடு ஒப்பிடும்போது கோலியாத் ஒன்றுமே இல்லை. அவனை ஒரு பூச்சியை நசுக்குவது போல் யெகோவா நசுக்கிப்போடுவார்!
தாவீது தன் பையிலிருந்து கல்லை எடுத்து கோலியாத்தை நோக்கி ஓடினார். கவணில் கல்லை வைத்து வேகமாக சுழற்றி வீசினார். கோலியாத் தன்னுடைய கேடயத்தை சுமந்தவன் பின்னால் வந்தான். கோலியாத் ரொம்ப உயரமாக இருந்ததால் கேடயத்தை சுமந்தவன் கோலியாத்தின் தலையை பாதுகாக்கும் அளவுக்கு கேடயத்தை உயர்த்த முடியவில்லை. தாவீது கோலியாத்தின் நெற்றியைத்தான் குறி வைத்தார்.—1 சாமுவேல் 17:41.
கவணிலிருந்து புறப்பட்ட கல் கோலியாத்தின் நெற்றியை நோக்கி பறந்தது. இன்னொரு கல்லை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை யெகோவா தாவீதுக்குத் தரவில்லை. அந்தக் கல் கோலியாத்தின் நெற்றியை துளைத்தது! அந்த மாமிச மலை முகங்குப்புற தரையில் விழுந்தது! அவனுடைய கேடயத்தை சுமந்தவன் பயத்தில் ஓட்டம்பிடித்தான். பின்பு தாவீது கோலியாத்தின் வாளையே எடுத்து அவன் தலையை வெட்டினார்.—1 சாமுவேல் 17:48-51.
இதை பார்த்த சவுலுக்கும் அவருடைய வீரர்களுக்கும் தைரியம் வந்தது. போர் முழக்கத்தோடு பெலிஸ்தர்களை துரத்திக்கொண்டு போனார்கள். தாவீது கோலியாத்திடம், ‘உங்கள் எல்லாரையும் யெகோவா எங்கள் கையில் கொடுப்பார்’ என்று சொன்னது போலவே நடந்தது.—1 சாமுவேல் 17:47, 52, 53.
இன்று கடவுளுடைய ஊழியர்கள் போரில் ஈடுபடுவதில்லை. அந்தக் காலம் கடந்துவிட்டது. (மத்தேயு 26:52) இருந்தாலும், கடவுள்மீது தாவீது வைத்திருந்த நம்பிக்கையை நாம் பின்பற்ற வேண்டும். அவரை போலவே யெகோவாவை ஒரு நிஜமான நபராக பார்க்க வேண்டும். அவரை மட்டுமே வணங்க வேண்டும், அவருக்கு மட்டுமே பயப்பட வேண்டும். சில சமயம் நம்முடைய பிரச்சினைகள் நமக்கு முன்னால் பெரிய மலை போல் தெரியலாம்... நாமோ அவற்றின் முன்னால் சிறிய மடு போல் தோன்றலாம். ஆனால், யெகோவாவுக்கு இருக்கும் அளவில்லாத பலத்துக்கு முன்னால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை. தாவீதை போலவே நாம் யெகோவாவை மட்டுமே தெய்வமாக வணங்கினால்... அவரைப் போலவே யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தால்... யாரையும் பார்த்து எந்த பிரச்சினையையும் பார்த்து பயப்பட மாட்டோம். யெகோவா தேவனால் முடியாதது எதுவுமே இல்லை! ▪ (wp16-E No. 5)