Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 25

‘இந்தச் சிறியவர்களை’ புண்படுத்திவிடாதீர்கள்

‘இந்தச் சிறியவர்களை’ புண்படுத்திவிடாதீர்கள்

‘இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதீர்கள்.’​—மத். 18:10, தமிழ் O.V. (BSI) பைபிள்.

பாட்டு 113 சமாதானம்—கடவுள் தரும் பரிசு

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவா என்ன செய்திருக்கிறார்?

இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் யெகோவா பார்க்கிறார். இத்தனை பேரில் உங்களை அவர் பக்கமாக இழுத்திருக்கிறார். (யோவா. 6:44) ஏனென்றால், நீங்கள் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு அவர்மேல் அன்பு காட்டுவீர்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். (1 நா. 28:9) யெகோவா உங்களைப் புரிந்துகொள்கிறார், உங்களை நேசிக்கிறார். உங்களைப் பற்றி அவருக்கு எல்லாமே தெரியும். இதை நினைக்கும்போது நம் மனதுக்கு ரொம்ப இதமாக இருக்கிறது, இல்லையா?

2. நம் ஒவ்வொருவர் மேலும் யெகோவா அக்கறை வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இயேசு என்ன உதாரணத்தைச் சொன்னார்?

2 உங்கள்மேல் யெகோவா ரொம்ப அக்கறை வைத்திருக்கிறார். உங்களுடைய சகோதர சகோதரிகள் ஒவ்வொருவர் மேலும் ரொம்ப அக்கறை வைத்திருக்கிறார். இதைப் புரிந்துகொள்வதற்கு இயேசு ஓர் உதாரணத்தைச் சொன்னார். அதில், யெகோவா ஒரு மேய்ப்பர் மாதிரி இருப்பதாகச் சொன்னார். 100 ஆடுகள் இருக்கிற ஒரு மந்தையில் ஒரு ஆடு காணாமல்போனால் மேய்ப்பர் என்ன செய்வார்? ‘மற்ற 99 ஆடுகளையும் மலைகளில் விட்டுவிட்டு, வழிதவறி அலைகிற ஆட்டைத் தேடிப் போவார்’ என்று இயேசு சொன்னார். அந்த ஆட்டைக் கண்டுபிடித்தவுடன் அவருடைய கோபத்தை எல்லாம் அதன்மேல் காட்டுவாரா? இல்லை. ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவார். இதிலிருந்து என்ன படம்? ஒவ்வொரு ஆட்டையும், அதாவது சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரையும், அவர் முக்கியமானவராக நினைக்கிறார். அதைப் பற்றி இயேசு, “இந்தச் சிறியவர்களில் ஒருவர்கூட அழிந்துபோவதை என் பரலோகத் தகப்பன் விரும்புவதில்லை” என்று சொன்னார்.​—மத். 18:12-14.

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

3 நம்முடைய சகோதர சகோதரிகள் சோர்ந்துபோக வேண்டும் என்று நாம் நினைக்க மாட்டோம். அப்படியென்றால், அவர்களைப் புண்படுத்தாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? நம்மை யாராவது புண்படுத்திவிட்டால் எப்படி நடந்துகொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கு இப்போது பதில்களைப் பார்க்கலாம். அதற்கு முன்பு, மத்தேயு 18-ஆம் அதிகாரத்தில் இருக்கிற ‘இந்தச் சிறியவர்கள்’ யார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

‘இந்தச் சிறியவர்கள்’ யார்?

4. ‘இந்தச் சிறியவர்கள்’ யார்?

4 வயது வித்தியாசம் இல்லாமல், இயேசுவின் சீஷர்கள் எல்லாருமேதான் ‘இந்தச் சிறியவர்கள்.’ அவர்களைச் ‘சின்னப் பிள்ளைகள்’ என்று ஏன் இயேசு சொன்னார்? ஏனென்றால், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அவர்கள் எல்லாருமே ஆசையாக இருக்கிறார்கள். (மத். 18:3) வெவ்வேறு ஊர், கலாச்சாரம், சுபாவம் என்று அவர்களுக்குள்ளே வித்தியாசம் இருந்தாலும், எல்லாருமே அவர்மேல் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். அவரும் எல்லாரையும் ரொம்ப ரொம்ப நேசிக்கிறார்.​—யோவா. 1:12.

5. தன்னுடைய மக்களுக்கு யாராவது கெடுதல் பண்ணினாலோ அவர்களைப் புண்படுத்தினாலோ யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

5 ‘இந்தச் சிறியவர்கள்’ எல்லார் மீதும் யெகோவா ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். இதை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இப்படிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பெரியவர்களுக்கு யாராவது கெடுதல் பண்ணினாலே அதைப் பார்த்துக்கொண்டு நம்மால் சும்மா இருக்க முடியாது. அப்படியென்றால், நம் குழந்தைகளுக்கு யாராவது கெடுதல் பண்ணுகிறபோது சொல்லவே வேண்டாம். ஏனென்றால், அவர்கள்மேல் நாம் உயிரையே வைத்திருக்கிறோம். பெரியவர்கள் மாதிரி குழந்தைகளுக்கு பலமோ அனுபவமோ ஞானமோ இல்லை. அதனால், அவர்களைப் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். யெகோவாவும் அதே மாதிரிதான். அவருடைய பிள்ளைகள் எல்லாரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். யாராவது அவர்களுக்குக் கெடுதல் பண்ணினாலோ புண்படுத்தினாலோ யெகோவா வேதனைப்படுகிறார். சொல்லப்போனால், அவர்கள்மேல் கோபப்படுகிறார்!​—ஏசா. 63:9.

6. இயேசுவின் சீஷர்களை இந்த உலகம் எப்படிப் பார்ப்பதாக 1 கொரிந்தியர் 1:26-29 சொல்கிறது?

6 இன்னொரு விதத்திலும், இயேசுவின் சீஷர்கள் ‘சிறியவர்கள்’தான். பணக்காரர்களை... பிரபலமானவர்களை... செல்வாக்கு உள்ளவர்களைத்தான்... இந்த உலகத்தில் இருக்கிறவர்கள் முக்கியமாக நினைக்கிறார்கள். ஆனால், இயேசுவின் சீஷர்களை இந்த உலகத்தில் இருக்கிறவர்கள் அற்பமாக நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இயேசுவின் சீஷர்கள் ‘சிறியவர்கள்’தான். (1 கொரிந்தியர் 1:26-29-ஐ வாசியுங்கள்.) ஆனால், யெகோவா அவர்களை எப்படி நினைக்கிறார்?

7. சகோதர சகோதரிகளை நாம் எப்படி நடத்த வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்?

7 நாம் சத்தியத்துக்குப் புதிதாக வந்தவர்களாக இருந்தாலும் சரி, சத்தியத்தில் ரொம்ப வருஷங்களாக இருந்தாலும் சரி, நம் ஒவ்வொருவர் மீதும் யெகோவா ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரையும் அவர் முக்கியமானவராக நினைக்கிறார். நாமும் அதே மாதிரிதான் நினைக்க வேண்டும். குறிப்பிட்ட சிலர்மேல் மட்டுமல்ல, ‘சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்ட’ வேண்டும். (1 பே. 2:17) அவர்கள்மேல் நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பது தெளிவாக தெரிவதுபோல் நாம் நடந்துகொள்ள வேண்டும். அவர்களைப் புண்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, நம்மால் மற்றவர்கள் புண்பட்டுவிட்டார்கள் என்று தெரிய வந்தால், ‘அவங்க எப்பவுமே அப்படிதான், அவங்கதான் அவங்கள மாத்திக்கணும்’ என்று சொல்லி கண்டும்காணாமலும் இருக்கக் கூடாது. பொதுவாக, சகோதர சகோதரிகள் புண்படுவதற்கு எது காரணமாக இருக்கலாம்? ஒருவேளை, அவர்கள் வளர்ந்த விதம் காரணமாக இருக்கலாம். அல்லது, அவர்களைப் பற்றியே அவர்கள் தாழ்வாக நினைக்கலாம். இன்னும் சிலர், சத்தியத்துக்குப் புதிதாக வந்திருக்கலாம். மற்றவர்களுடைய குறையை எப்படிப் பொறுத்துக்கொள்வது என்று தெரியாமல் இருக்கலாம். என்ன காரணமாக இருந்தாலும் சரி, மற்றவர்களுடன் நட்பாகப் பழகுவதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், எதற்கெடுத்தாலும் புண்பட்டு விடுகிறவர்கள் ஒரு விஷயத்தை யோசித்துப்பார்க்க வேண்டும். அதாவது, தொட்டதற்கெல்லாம் புண்படுவது சரியில்லை என்பதையும் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி அவர்கள் மாற்றிக்கொண்டால், அவர்களுக்கும் நிம்மதி, மற்றவர்களுக்கும் சந்தோஷம்.

மற்றவர்களை உயர்வாக நினையுங்கள்

8. எந்த எண்ணம் இயேசுவின் சீஷர்களையும் பாதித்தது?

8 ‘இந்தச் சிறியவர்களை’ பற்றி இயேசு ஏன் பேசினார்? ஏனென்றால், “பரலோக அரசாங்கத்தில் உண்மையில் யார் மிக உயர்ந்தவராக இருப்பார்?” என்று அவருடைய சீஷர்கள் அவரிடம் கேட்டிருந்தார்கள். (மத். 18:1) அந்தக் காலத்தில் இருந்த யூதர்கள் அந்தஸ்தைத்தான் ரொம்ப பெரிதாக நினைத்தார்கள். அதைப் பற்றி ஓர் அறிஞர் இப்படிச் சொன்னார்: “அந்தஸ்துக்காகவும் பெயர் புகழுக்காகவும், கௌரவத்துக்காகவும், மதிப்பு மரியாதைக்காகவும்தான் நிறைய பேர் வாழ்ந்தார்கள்.”

9. இயேசுவின் சீஷர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?

9 ‘நீ பெரியவனா? நான் பெரியவனா?’ என்று போட்டிபோடும் குணம் யூதக் கலாச்சாரத்தில் ஊறிப் போயிருந்தது. அந்தக் குணத்தை மனதிலிருந்து பிடுங்கி எறிவதற்கு தன்னுடைய சீஷர்கள் நிறைய முயற்சி எடுக்க வேண்டியிருக்கும் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், “உங்களில் மிக உயர்ந்தவராக இருப்பவர் எல்லாருக்கும் சிறியவரைப் போல் இருக்க வேண்டும், உங்களை வழிநடத்துகிறவர் பணிவிடைக்காரரைப் போல் இருக்க வேண்டும்” என்று சொன்னார். (லூக். 22:26) ‘எல்லாருக்கும் சிறியவர்களாக’ நம்மை நாம் நடத்தினால் மற்றவர்களை ‘உயர்ந்தவர்களாகக் கருதுகிறோம்’ என்று அர்த்தம். (பிலி. 2:3) இந்தக் குணத்தை நாம் வளர்த்துக்கொண்டால் அவ்வளவு சீக்கிரம் யாரையும் புண்படுத்திவிட மாட்டோம்.

10. பவுல் கொடுத்த எந்த அறிவுரையை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?

10 மற்றவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களை நாம் பார்த்தால், ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்வோம். கொரிந்தியர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்: “நீங்கள் எந்த விதத்தில் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள்? உங்களிடம் இருக்கிற எல்லாமே கடவுள் கொடுத்ததுதானே? எல்லாமே அவரிடமிருந்து கிடைத்திருக்கும்போது, உங்களுடைய சொந்த பலத்தால் பெற்றுக்கொண்டதுபோல் ஏன் பெருமையடிக்கிறீர்கள்?” (1 கொ. 4:7) மற்றவர்களுடைய கவனம் நம் பக்கம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வரும்போதும், மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வரும்போதும் அதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு சகோதரருக்கு நன்றாகப் பேச்சு கொடுக்கும் திறமை இருக்கலாம். ஒரு சகோதரிக்குச் சுலபமாக பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கும் திறமை இருக்கலாம். அந்த மாதிரி சமயங்களில், தங்களைப் பெரிதாக நினைக்காமல் யெகோவாவுக்கு அவர்கள் புகழ் சேர்க்க வேண்டும்.

“உள்ளப்பூர்வமாக” மன்னியுங்கள்

11. இயேசு சொன்ன கதையில் இருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?

11 மற்றவர்களுக்குக் கெடுதல் பண்ணக் கூடாது என்று சீஷர்களுக்கு இயேசு சொன்ன பின்பு, ஒரு ராஜாவைப் பற்றியும் அடிமையைப் பற்றியும் ஒரு கதை சொன்னார். அந்த அடிமை ராஜாவுக்குக் கடன்பட்டிருந்தான்; அது ஒரு பெரிய தொகை. ஆனாலும், அந்த ராஜா அவனை மன்னித்தார். அந்த அடிமைக்கு இன்னொருவன் கடன்பட்டிருந்தான். அது ரொம்ப ரொம்ப சின்ன தொகை. ஆனாலும், அந்த அடிமை அவனை மன்னிக்கவில்லை. அதனால், இரக்கமில்லாமல் நடந்துகொண்ட அந்த அடிமையை ராஜா சிறையில் போட்டார். இந்தக் கதையில் இருந்து இயேசு என்ன பாடம் சொல்லிக் கொடுத்தார்? “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை உள்ளப்பூர்வமாக மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தகப்பனும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று சொன்னார்.​—மத். 18:21-35.

12. நாம் மன்னிக்காமலேயே இருந்தால், மற்றவர்கள் எப்படிப் பாதிக்கப்படுவார்கள்?

12 அந்த அடிமை அப்படி நடந்துகொண்டதால் அவன் மட்டும் பாதிக்கப்படவில்லை. மற்றவர்களும் பாதிக்கப்பட்டார்கள். எப்படி? முதலில், அவனிடம் கடன் வாங்கியவன் பாதிக்கப்பட்டான். ஏனென்றால், ‘கடனைத் திருப்பிக் கொடுக்கும்வரை அந்த அடிமையை [அவன்] சிறையில் அடைத்தான்.’ இரண்டாவதாக, இதைப் பார்த்த மற்ற சக அடிமைகளும் பாதிக்கப்பட்டார்கள். “நடந்ததையெல்லாம் பார்த்து அவனுடைய சக அடிமைகள் மிகவும் வேதனைப்பட்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நாம் செய்வது மற்றவர்களையும் பாதிக்கும். ஒருவேளை, யாரையாவது நாம் மன்னிக்கவில்லை என்றால், முதலில் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எப்படி? நாம் அவர்களை மன்னிக்காமல் இருக்கும்போது, அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். அவர்களிடம் அன்பையும் பாசத்தையும் காட்டாமல் போய்விடுவோம். இரண்டாவதாக, சபையில் இருக்கிற மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். எப்படியென்றால், நாம் அப்படி நடந்துகொள்வது அவர்களுக்கும் கஷ்டமாக இருக்கும்.

மற்றவர்கள்மேல் கோபமாகவே இருக்கிறீர்களா அல்லது அவர்களை மனதார மன்னிக்கிறீர்களா? (பாரா 13-14) *

13. ஒரு பயனியர் சகோதரியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

13 நாம் தாராளமாக மன்னிக்கும்போது நமக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. பயனியர் சேவை செய்கிற கிறிஸ்டல் என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். அவரை ஒரு சகோதரி புண்படுத்திவிட்டார். அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார். “அவங்க பேசறது சில சமயங்கள்ல என் மனச குத்தி கிழிச்சிடும். அவங்ககூட சேந்து ஊழியத்துக்கு போறக்கே எனக்கு பிடிக்கல. ஊழியத்தில எனக்கு ஆர்வமே இல்லாம போயிடுச்சு. என் சந்தோஷமும் பறிபோயிடுச்சு” என்று சொல்கிறார். கோபப்படுவதற்கு நியாயமான காரணம் இருப்பதாக கிறிஸ்டல் நினைத்தாலும் அந்தச் சகோதரி செய்ததையே நினைத்துக் கொண்டிருக்கவில்லை. தன்னை நினைத்தே பரிதாபப்பட்டுக்கொள்ளவும் இல்லை. அக்டோபர் 15, 1999 காவற்கோபுரத்தில் இருக்கிற “மனசார மன்னியுங்கள்” என்ற கட்டுரையைப் படித்து அதில் இருக்கிற மாதிரி செய்தார். அந்தச் சகோதரியை மன்னித்துவிட்டார். “நாம எல்லாருமே புது சுபாவத்த அணிஞ்சுக்கிறதுக்கு முயற்சி செஞ்சுட்டு இருக்கறோங்கிறதயும் ஒவ்வொரு நாளும் யெகோவா நம்மள தாராளமா மன்னிக்கிறாருங்கிறதயும் இப்ப நான் புரிஞ்சுகிட்டேன். என் தோள்மேல இருந்த பெரிய பாரத்த இறக்கி வெச்ச மாதிரி இருக்கு. மறுபடியும் சந்தோஷமாக இருக்கறேன்” என்று அவர் சொல்கிறார்.

14. அப்போஸ்தலன் பேதுருவுக்கு என்ன பிரச்சினை இருந்ததாக மத்தேயு 18:21, 22 சொல்கிறது? அதற்கு இயேசு கொடுத்த பதிலில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்பதும் அதுதான் சரியானது என்பதும் நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அப்படிச் செய்வது நமக்குப் போராட்டமாக இருக்கலாம். இதே பிரச்சினை அப்போஸ்தலன் பேதுருவுக்கும் சில சமயங்களில் இருந்தது. (மத்தேயு 18:21, 22-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், மன்னிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில், யெகோவா நம்மை எப்படியெல்லாம் மன்னித்திருக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். (மத். 18:32, 33) அவர் நம்மை மன்னிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும், அவர் நம்மை தாராளமாக மன்னிக்கிறார். (சங். 103:8-10) அதே சமயத்தில், “நாமும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.” அதனால், விருப்பமிருந்தால் மன்னிக்கலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று நாம் இருக்க முடியாது. நம்முடைய சகோதர சகோதரிகளை நாம் கண்டிப்பாக மன்னிக்க வேண்டும். (1 யோ. 4:11) இரண்டாவதாக, மன்னிக்கும்போது என்ன நன்மை என்பதை யோசித்துப்பாருங்கள். நாம் யாரை மன்னிக்கிறோமோ அவருக்கு நன்மை கிடைக்கும், சபையின் ஒற்றுமை பெருகும். யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கிற நட்பு உறுதியாகும். நம் மனதில் இருக்கிற பாரம் எல்லாம் குறையும். (2 கொ. 2:7; கொலோ. 3:14) கடைசியாக, யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். சகோதர சகோதரிகளுக்கும் உங்களுக்கும் இடையில் சாத்தான் நுழைவதற்கு விட்டுவிடாதீர்கள். (எபே. 4:26, 27) சபை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் யெகோவாவின் உதவி தேவை.

மற்றவர்கள் செய்ததை மனதில் வைத்துக் கொண்டே இருக்காதீர்கள்

15. மற்றவர்கள் நம்மைப் புண்படுத்திவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும் என்று கொலோசெயர் 3:13 சொல்கிறது?

15 யாராவது ஒருவர் உங்களை ரொம்ப புண்படுத்திவிட்டார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அப்போது நீங்கள் என்ன செய்யலாம்? அவரிடம் சமாதானம் ஆவதற்கு முயற்சி செய்யுங்கள். அதற்காக, யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள். அவருக்காகவும் ஜெபம் செய்யுங்கள். அவரிடம் யெகோவா என்ன நல்ல குணங்களைப் பார்க்கிறாரோ, அதே குணங்களைப் பார்ப்பதற்கு உதவச் சொல்லி கேளுங்கள். (லூக். 6:28) ஒருவேளை, அவர் செய்ததை உங்களால் மறக்க முடியவில்லை என்றால், அவரிடம் போய் எப்படிப் பேசலாம் என்பதைப் பற்றி யோசித்துப்பாருங்கள். (மத். 5:23, 24; 1 கொ. 13:7) அவர் வேண்டுமென்றே அப்படிப் பண்ணியிருக்க மாட்டார் என்று நினைப்பது எப்போதுமே நல்லது. அவரிடம் பேசும்போது அவர் சொல்வதை நம்புங்கள். சமாதானமாவதற்கு நீங்கள் நிறைய முயற்சி செய்தும் அவர் சமாதானமே ஆகாவிட்டால் என்ன செய்வது? தொடர்ந்து அவரைப் “பொறுத்துக்கொள்ளுங்கள்.” பொறுமையாக இருங்கள். (கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.) ரொம்ப முக்கியமாக, அவர்மேல் கோபமாகவே இருக்காதீர்கள். அப்படி இருந்தால், யெகோவாவுக்கும் உங்களுக்கும் இருக்கிற நட்பில் விரிசல் விழுந்துவிடும். அதனால், எதுவுமே உங்களை அளவுக்கு அதிகமாகப் புண்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் யெகோவாமேல் நீங்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டலாம்.​—சங். 119:165.

16. நம் ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது?

16 “ஒரே மேய்ப்பரின்” கீழ் ‘ஒரே மந்தையாக’ ஒற்றுமையாக யெகோவாவுக்குச் சேவை செய்கிற பாக்கியம் நமக்கு இருக்கிறது. (யோவா. 10:16) “அப்படிப்பட்ட ஒற்றுமையால் உங்களுக்கு எத்தனையோ நன்மைகள் கிடைத்திருக்கின்றன. இப்போது, அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது” என்றும் சகோதர, சகோதரிகளை “யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும்” என்றும், யெகோவாவின் விருப்பத்தை செய்யும் அமைப்பு என்ற புத்தகத்தில் பக்கம் 165-ல் சொல்லப்பட்டிருக்கிறது. ‘சிறியவர்களாக’ இருக்கும் நம் எல்லாரையுமே யெகோவா உயர்வாக நினைக்கிறார். அப்படி இருக்கும்போது, நீங்களும் உங்களுடைய சகோதர சகோதரிகளை அதே மாதிரி பார்க்கிறீர்களா? அவர்களுக்கு உதவவும் அவர்கள்மேல் அக்கறை காட்டவும் நீங்கள் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் யெகோவா பார்க்கிறார், அதை மதிக்கிறார்.​—மத். 10:42.

17. என்ன செய்ய நாம் உறுதியாக இருக்க வேண்டும்?

17 சகோதர சகோதரிகளை நாம் ரொம்ப நேசிக்க வேண்டும். அதனால், அவர்களைப் புண்படுத்திவிடாமல் இருப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டும். நம்மைவிட அவர்களை உயர்வானவர்களாக நினைக்க வேண்டும். அவர்களை உள்ளப்பூர்வமாக மன்னிக்க வேண்டும். அதே சமயத்தில், நாமும் எதற்கெடுத்தாலும் புண்பட்டுவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, சகோதர சகோதரிகளுடன் சமாதானமாக இருப்பதற்கும் ‘ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதற்கும் [நம்மால்] முடிந்த எல்லாவற்றையும் செய்ய’ வேண்டும்.​—ரோ. 14:19.

பாட்டு 130 மன்னியுங்கள்

^ பாரா. 5 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் மற்றவர்களைப் புண்படுத்துகிற மாதிரி ஏதாவது சொல்லிவிடலாம், அல்லது செய்துவிடலாம். அப்போது, நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? அவர்களிடம் சமாதானமாக முயற்சி செய்கிறோமா? அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோமா? ‘அவங்க தப்பா நினைச்சுட்டா நான் என்ன செய்ய முடியும்? அது அவங்களோட பிரச்சன’ என்று நினைக்கிறோமா? ஒருவேளை, மற்றவர்கள் என்ன சொன்னாலும், செய்தாலும் நாம் தொட்டாச்சிணுங்கி மாதிரி இருக்கிறோமா? ‘என்னுடைய சுபாவமே அப்படித்தான்’ என்று நினைத்துக்கொள்கிறோமா? இல்லையென்றால், ‘இது என்கிட்ட இருக்கிற ஒரு பிரச்சன. இத நான் சரி செய்யணும்’ என்று யோசிக்கிறோமா?

^ பாரா. 53 படவிளக்கம்: ஒரு சகோதரி இன்னொரு சகோதரிமேல் கோபமாக இருக்கிறார். இரண்டு பேரும் அதைப் பற்றிப் பேசி சமாதானமான பின்பு ஒன்றுசேர்ந்து சந்தோஷமாகச் சேவை செய்கிறார்கள்.